தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க விருப்பம்: பதஞ்சலி நிறுவன சிஇஓ பாலகிருஷ்ண ஆச்சார்யா தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: யோகாசனங்களால் புகழ்பெற்ற பாபா ராம்தேவ், ஆயுர்வேத அடிப்படையில் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும், ராம்தேவின் நெருங்கிய சகாவுமான பாலகிருஷ்ண ஆச்சார்யா (50), இமயமலை சிகரங்களில் ஏறி திரும்பியுள்ளார். அங்கு கண்டெடுக்கப்பட்டவற்றுடன் சேர்த்து இந்தியாவின் அனைத்து மூலிகைகளின் விவரங்களையும் முதல் முறையாக பதஞ்சலி நிறுவனம் வெளியிட உள்ளது. இமயமலை ஏறிய தனது 15 நாள் அனுபவம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு பாலகிருஷ்ண ஆச்சார்யா அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து.

இமயமலையில் 15 நாட்கள் பயணத்தில் கண்டது என்ன?

இமயமலையில் உள்ள சில சிகரங்களில் இதுவரை எவரும் ஏறியதில்லை. அதன் சில பகுதிகளுக்கு 1981-ல் ஒரு இந்தோ - பிரெஞ்சு மலையேற்ற குழு முயன்றும் முடியாமல் பாதியிலேயே திரும்பியது. இவர்களால் செல்ல முடியாத 3 பகுதிகளில் 2-க்கு, ‘நேரு மலை ஏறும் மையம்’ (என்ஐஎம்) மற்றும் ‘இந்தியன் மவுன்டனிங் பவுண்டேஷன்’ (ஐஎம்எப்) குழுக்களின் உதவியுடன் மலை ஏறத் திட்டமிட்டோம். மிக மோசமான பனியின் காரணமாக அதன் ஒரு பகுதிக்கு செல்ல முடியாமல், பெயரிடப்படாத 2 சிகரங்களுக்கு சென்று வந்தோம். அவற்றின் உயரம் சுமார் 6,200 மீட்டர் ஆகும்.

நீங்கள் கூறுவதை பார்த்தால் உங்கள் அனுபவம் மிகவும் கடினமாக இருந்துள்ளது போல் தெரிகிறதே?

எங்கள் குழுவில் என்ஐஎம் நிறுவனத்தின் முதல்வர் கர்னல் பிரிக்ஸ், ஐஎம்எப் அதிகாரி, பதஞ்சலி மருத்துவர், விஞ்ஞானி என மொத்தம் 12 பேர் இருந்தனர். அவர்களில், வயதில் பெரியவனாகவும், இமயமலை ஏறிய அனுபவம் இல்லாதவனாகவும் நான் மட்டுமே இருந்தேன். எங்கள் குழுவில் இருந்த பதஞ்சலியின் மருத்துவரும், விஞ்ஞானியும் பாதி வழியில் ஏற முடியாமல் திரும்பி விட்டனர்.

இந்த 2 சிகரங்கள் எப்படி இருந்தன?

ஒரு சிகரத்தில் கல்லை போல் உறைந்த பனியில் ஒரு குகை போன்ற தோற்றம் காணப்பட்டது. அதில் ஒரு சாது தியான நிலையில் அமர்ந்து இருப்பது போல் இயற்கையிலேயே உறைந்த பனி அமைந்த தோற்றத்தைக் கண்டு வியப்படைந்தோம். அந்த சிகரங்கள் இமயமலையில் உள்ள புனித கைலாஷ் மலைக்கு அடுத்த நிலையிலான உயரத்தில் இருந்தன. அவற்றில் ஒன்றுக்கு ‘ராஷ்டிர ரிஷி’ எனவும், மற்றொரு சிகரத்துக்கு ‘யோக ரிஷி’ எனவும் பெயரிட்டு வந்துள்ளோம்.

இமயமலை யோகிகளின் பெயரால் அறியப்படுவதால் இந்த பெயர்களை சூட்டினோம். நமது கலாச்சாரத்தில் ஆயுர்வேதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இதன் காரணமாக, நம்மால் செல்ல முடியாத 3-வது சிகரத்துக்கு ‘ஆயுர்வேத ரிஷி’ என பெயரிட்டுள்ளோம். அவற்றின் அருகில் இரத்த பரண பாமக் மற்றும் ஸ்வத்தவரண பாமக் என்றழைக்கப்படும் 2 சிகரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து சில மீட்டர் தொலையில் சீனாவின் எல்லை தொடங்குகிறது.

உங்களது பதஞ்சலி நிறுவனம் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுவது ஏன்?

இதற்கு எங்களுக்கு அதிகமாக இருக்கும் ‘நண்பர்கள்’ காரணம். எங்களுக்கு எதிராக மிக அதிகமான எண்ணிக்கையில் அரசியல்வாதிகள், சர்வதேச நிறுவனங்கள், போதை மருந்து கடத்துபவர்கள் உள்ளனர். தொடக்க காலங்களில் பதஞ்சலியில் மிக மலிவான விலையில் 10 பொருட்களை விற்பனை செய்தோம். அதன் தாக்கமாக மற்ற நிறுவனங்களும் தம் பொருட்களின் விலையை குறைக்க வேண்டியதாயிற்று. எப்படியோ, அதன் பலன் நம் நாட்டு மக்களுக்கு கிடைத்தது. தொடக்கத்தில் எங்களை பல நிறுவனங்கள் கேலிக்குரியதாக்கின. உதாரணமாக உப்பு, வேப்ப இலை கலந்து நாங்கள் தயாரிக்கும் பற்பசையால் பற்கள் கெட்டு விடும் என்றனர். ஆனால், இப்போது அதே நிறுவனங்கள் பற்பசையில் உப்பு உள்ளதா, வேப்ப இலை உள்ளதா என்று விளம்பரப்படுத்த வேண்டியதாக உள்ளது. பல லட்சம் செலவில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களால் விளம்பரம் செய்யும் நிலை உருவாகியிருக்கிறது.

இமயமலையின் ஆயுர்வேத மூலிகை தேடலில், முதல் முறையாக மருந்து நிறுவனமான பதஞ்சலி நேரடியாக ஈடுபட்டது என்று கூற முடியுமா? இதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?

இதை மூலிகைகளுக்கான தேடல் என்று கூற முடியாது. ஏனெனில், நான் நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் வாழ்ந்து வருபவன். அந்த வகையில்தான் நான் இமயமலை ஏறித் திரும்பியுள்ளேன். இதற்கு முறையான அரசு அனுமதியும் பெற்றிருந்தோம்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்கும் எண்ணம் உண்டா?

கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பாக தொழில் தொடங்கும் முயற்சியில் சென்னை சென்றிருந்தோம். அதன் பிறகு அங்கு ருச்சி சோயா மற்றும் பிஸ்கட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினோம். மேலும் பல தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ விரும்புகிறோம். அதற்காக உரிய நேரம் வரும்என்று காத்திருக்கிறோம். தமிழகத்தில் எங்களுக்கு பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. யோகா, ஆயுர்வேதத் துக்காக ஒரு ஆசிரமத்தையும் நடத்தி வருகிறோம்.

இந்தியாவின் மூலிகைகள் மீதான ஆய்வில் பதஞ்சலியின் பங்கு என்ன?

இந்திய அளவில் மருந்துகளுக்காக உள்ள மூலிகைகளின் விவரமான பட்டியலை இதுவரை எவரும் வெளியிட்டதில்லை. சுமார் 18,000 மூலிகைகளுடன் தமிழகத்தின் ஒரு விஞ்ஞானி இதற்கு முன் வெளியிட்டிருந்தார்.

அதைவிட அதிகமாக 20,000 எனவும் 22,000 என்றும் சிலர் கூறி வருகின்றனர். எனவே, எங்கள் இமயமலை விஜயத்தில் கண்டெடுத்த 550-ல் மருத்துவத்துக்கான மூலிகைகளையும் பட்டியலிடுவோம்.

அனைத்தும் சேர்த்து மூலிகைகளின் ஆதாரப்பூர்வமாக சரியான ‘டேட்டா’க்களையும் வெளியிடுவோம். டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் 13 புதிய மூலிகைகளை கண்டறிந்து தொகுத்தோம். இதேபோல், ஹரியாணாவின் மோர்னி மலையில் 62 மூலிகைகள் உட்பட 253 மூலிகைகளை கண்டறிந்து வெளியிட்டோம். கனடா உள்ளிட்ட பல தாவரவியல் பூங்காக்களும் அதன் சங்கங்களும் எங்கள் நிறுவனம் வெளியிட்ட மூலிகைகளின் பெயர்களையும் தம் ஆய்வுக்கான மூலிகைகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்