வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பதில் சிக்கல்? - மத்திய அரசு தயக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி
வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பாக ஒத்த கருத்து ஏற்படாததால் இந்த முடிவை எடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் எதிரொலித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சரிவு காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் வாகன விற்பனை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

இதனால், விற்பனையகங்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகிய தரப்பில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல் என்று கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவது, அதனால் வாகனங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது குறைந்திருப்பது, வாகனக் காப்பீட்டுக்கான தொகைகள் உயர்ந்திருப்பது, கார்கள், மோட்டார் வண்டிகள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுவது ஆகியவை மோட்டார் வாகனத் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாக கூறப்படுகின்றன.

வாகன விற்பனையின் எண்ணிக்கை வீழ்ச்சியானது ஒட்டுமொத்த பொருளாதார சுணக்கத்துக்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி, வாகனத் தயாரிப்பு தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக வாகன விற்பனை குறைந்துள்ளதாகவும், அதை சரி செய்வதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று வாகன துறையினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதற்கு வேறு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடி நிலைக்கு, அத்துறையினரின் தவறான திட்டமிடலே காரணம் என்று இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என். ஸ்ரீனிவாசன் கூறியிருந்தார்.

இதுபோலவே, பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ், வாகனத் துறையின் தற்போதைய சரிவுக்கு அதன் அதிக உற்பத்திதான் காரணம். ஜிஎஸ்டி குறைப்பால் இந்த நெருக்கடி நிலையை சரி செய்ய முடியாது என்று கூறி இருந்தார்.

இதனிடையே நாளை மறுதினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரிகுறைப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.

வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க ஏற்கெனவே கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வாகனங்களுக்கு வரி குறைக்கப்பட்டால் மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

அதுபோலவே மத்திய அரசுக்கும் பெரிய அளவில் வரி வருவாய் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவு எட்டப்படுவதில் சிக்கல் இருக்கும் எனத் தெரிகிறது.

ஜிஎஸ்டி வரிகுறைப்பு விஷயத்தில் ஒத்த கருத்து ஏற்படாததால் மத்திய அரசும் முடிவெடுக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி வரிகுறைப்பு பெரிய அளவில் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்