ஜியோ ஜிகா ஃபைபர் செப்.5-ல் அறிமுகம்; அளவில்லாத இலவச கால்கள், அதிவேக இணையம், இலவச எல்இடி டிவி: முகேஷ் அம்பானி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை,

சோதனை முறையில் செயல்பாட்டில் இருந்த ஜியோ ஜிகா ஃபைபர் வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் முறைப்படி அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபரும், மேலாண் இயக்குநருமான முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.700 வாடகை முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை திட்டங்கள் இருக்கின்றன. அளவில்லா இலவச அழைப்புகள், அதிவேகமான 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையதளம், வாழ்நாள் சந்தாதாரராக இணைபவர்களுக்கு எல்இடி டிவி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி பேசியதாவது:

''ஜியோ சேவை தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில் 34 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. அடுத்ததாக 4 புதிய வளர்ச்சி இயந்திரங்களைப் புகுத்த இருக்கிறோம். நாடு முழுவதும் இணையம், வீடுகளுக்கு இணையம், நிறுவனங்களுக்கான பிராட்பேண்ட் சேவை, சிறுதொழில் நிறுவனங்களுக்கான பிராட்பேண்ட் சேவை ஆகியவை எங்கள் திட்டமாகும். இந்த நிதியாண்டிலேயே இந்த 4 திட்டங்கள் மூலம் வருவாய் கிடைக்கத் தொடங்கும்.

ரிலையன்ஸ் ஜியோவில் 4ஜி சேவைக்காக மட்டும் இதுவரை ரூ.3.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை ஜியோ அடைந்துள்ளது. நாட்டில் மட்டும் மிகப்பெரிய சேவைதாரராகவும், உலகிலேயே 2-வது மிகப்பெரிய சேவைதாரராகவும் மாறி இருக்கிறோம்.

ஜியோ நிறுவனத்துக்கான முதலீடு முடிந்துவிட்டது. இனிமேல் குறுகிய அளவில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிக்காக மட்டுமே முதலீடு தேவை. அடுத்ததாக மிகவும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. வீடுகளுக்கு ஃபைபர் கேபிள்கள் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கும் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் இதுவரை 1.50 கோடிபேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது 2 கோடி வீடுகள், 1,600 நகரங்களில் 1.5 கோடி வர்த்தக நிறுவனங்களை ஏற்படுத்தித் தரும். தற்போது சோதனை முயற்சியாக ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் 2016-ம் ஆண்டில் இருந்து 5 லட்சம் வீடுகளில் செயல்பாட்டில் உள்ளன.

ஜியோ ஜிகா ஃபைர் திட்டத்தில் குறைந்தபட்ச வாடகை ரூ.700 ஆகவும் அதிகபட்ச வாடகை ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கு ஏற்ப, அவர்களின் தேவைக்கு ஏற்ப, படிநிலைக்கு ஏற்ப வாடகைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(ஆண்டுப் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த முகேஷ் அம்பானி, அவரின் தாய் கோகிலா பென், முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானி)

ஜியோ ஃபைபர் திட்டத்தில் வீடுகளில் இணைப்பு பெற்ற பின் இந்தியா முழுவதும் இலவசமாக மொபைல், லேண்ட் லைனில் பேச முடியும், இதன் பிராட்பேண்ட் இணையதள வேகம் 100 எம்பிபிஎஸ் ஆகவும் அதன்பின் 1 ஜிபிபிஎஸ் ஆகவும் மாறும்.

சர்வதேச அளவில் பேசுவதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அளவில்லாமல் பேசுவதற்கு மாதத்துக்கு ரூ.500 செலுத்தி பேசும் திட்டம் இருக்கிறது.

2020-ம் ஆண்டில் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் புதிய திரைப்படங்கள் பார்க்கும் வசதி அறிமுகமாகிறது. இதன்படி, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை அன்றே ஜிகா ஃபைபர் ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும்.

ஜியோ ஃபைபர் வெல்கம் ஆஃப் எனும் திட்டமும் அறிமுகமாகிறது. இதன்படி வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தாவைத் தேர்வு செய்தால், அவர்களுக்கு இலவசமாக ஹெச்டி எல்இடி தொலைக்காட்சி அல்லது 4கே டிவி மற்றும் 4கே செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும்''.

இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்.


பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்