ஸ்மார்ட் சிட்டியில் இந்தியா முன்னோடியாக இருக்கும்: அமெரிக்க நிபுணர் டேவிட் எப் ஹேமென் நேர்காணல்

By எம்.ரமேஷ்

டேவிட் எப் ஹேமென், அமெரிக்க அரசில் பல்வேறு துறைகளில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். தேசிய பாதுகாப்பு, சர்வதேச விவகாரம், பயங்கரவாத தடுப்பு, சைபர் பாதுகாப்பு, கட்டமைப்புத் துறை உள்ளிட்டவற்றில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். வெள்ளை மாளிகை, எரிசக்தித் துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் பணியாற்றியவர். அமெரிக்காவின் பாதுகாப்பு இணை அமைச்சருக்கு சமமாகக் கருதப்படும் கொள்கை வகுக்கும் துறையில் துணைச் செயலராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர். உள்நாட்டு பாதுகாப்புக்கென தேசிய உத்தியை வகுத்த பெருமையும் இவருக்குண்டு.

ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பு, சைபர் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நிபுணத்துவம் பெற்றுள்ளவர். சமீபத்தில் அமெரிக்க துணைத் தூதரகத்தின் அழைப்பின் பேரில் சென்னை வந்திருந்த அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இனி அவருடனான உரையாடலிலிருந்து…

கம்ப்யூட்டர் துறையில் சில காலம் பொறியாளராகப் பணியாற்றியுள் ளீர்கள் அதன் பிறகு அரசுத் துறைக்கு மாறியுள்ளீர்கள். இரு துறை தொழில் களில் எத்தகைய வேறுபாடு கண்டீர்கள்?

கம்ப்யூட்டர் துறை மற்றும் அரசுத் துறை இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசம் ஏதும் கிடையாது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சாஃப்ட்வேர் உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டும். அரசுத் துறையில் பொது மக்கள்தான் வாடிக்கையாளர்கள். அவர்களது பாதுகாப்புக்கான கொள்கைகள் வகுத்து செயல் படுத்த வேண்டும். எந்த தொழில் நுட்பமும் மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகத்தான் இருக்க வேண்டும்.

எரிசக்தித் துறையில் பணியாற்றியுள் ளீர்கள், சூழல் பாதுகாப்புக்குக்கு எத்தகைய எரிசக்தி மாற்றாக இருக்கும்?

அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக சூரிய ஆற்றல், நீர் மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி ஆகியன உள்ளன. இவற்றுக்கும் மேலாக அணு மின் உற்பத்தியும் கூறப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் அணு மின்னுற்பத்தி நிலையத்தைக் காட்டிலும் பிற மரபு சாரா எரிசக்தி முறைகள் சிறந்தது என்பதுதான் என் கருத்து. மேலும் அணுக் கழிவுகளைக் கையாள்வது மிகவும் சிரமமான காரியம். அணு மின் நிலையம் அமைக்க அதிக செலவு பிடிக்கும். இனிவரும் காலத்திலாவது கரியமில வாயு வெளியிடாத தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்வது அவசியம்.

ஸ்மார்ட் சிட்டி அமைக்க இந்திய அரசு முடிவு செய்து அறிவித்துள் ளது. இதில் அமெரிக்க நிறுவனங் களின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும்?

இந்திய அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி யுள்ளது. இதுவரையில் எந்த நாட்டிலும் ஸ்மார்ட் சிட்டி குறிப்பிடத் தக்க அளவுக்கு உருவாக்கப் படவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாதான் முன்னோடியாக இருக்கும். அதிலும் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் என்பது மிகப் பெரிய விஷயம். ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் ஒத்துழைக்கத் தயார் என்று அதிபர் ஒபாமா டெல்லி வந்திருந்தபோது கூறினார். அந்த வகையில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கும்.

ஸ்மார்ட் சிட்டி அவசியமானதா?

2050- ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு மக்கள் நகரங்களில்தான் வசிப்பர். அதிகரித்து வரும் மக்கள் தொகையைத் தாங்கும் அளவுக்கு நகரங்கள் விரிவாக்கப்பட வேண்டி யது அவசியம். இது பெரும் பாலான நாடுகளுக்கு மிகவும் சவாலான விஷயம்தான். தொற்று நோய் பரவல், குற்றங்கள் பெருகு தல், சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகிய வற்றைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. இவற்றுடன் பொருளாதார வளர்ச்சியையும் பார்க்க வேண்டும். மேலும் அரசின் சேவைகள் குறைந்த செலவில் விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று மக்கள் விரும்பு வர். குறைவான வளங்களுடன் தொழில்நுட்பத் திறன் மூலம் இதை அளிக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவ தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். கல்வி மற்றும் வேலைக்காக பயணம் செய்வது குறையும். இதனால் கரியமில வாயு வெளியேற்றம் பெருமளவு குறையும். மேலும் அரசின் சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும். இத்தகைய ஸ்மார்ட் சிட்டி-யில் எந்த இடத்தில் எந்த அளவு இடம் காலியாக உள்ளது. காரை நிறுத்த எந்த இடம் காலியாக இருக்கிறது என்பதைக் கூட ஸ்மார்ட்போனில் அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் அரசுத் துறை பங் களிப்பு அதிகம். இத்தகைய சூழலில் தனியார் துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் திட்டங்களை மேற்கொள்வது எந்த அளவுக்கு சாத்தியமானதாக இருக்கும்?

இந்திய அரசு சார்ந்த விஷயங்களில் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஆனால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சில பொறுப்புகள் உள்ளன. அதே போல தனியார் நிறுவனங்களுக் கும் கடமைகள் உள்ளன. இவை மூன்றும் ஒருங்கிணைப்பதன் மூலம் தான் வளர்ச்சி சாத்தியமாகும்.

கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகளை செய்வது தனியார் துறையாக இருந்தாலும், அதற்கான ஒருங்கிணைப்புகளைச் செய்வதில் மாநில அரசுகள் சிறப்பாக செயலாற்ற முடியும். அதேசமயம் இந்த கட்டமைப்பு வசதிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பதில்தான் மத்திய அரசின் பங்கு மகத்தானதாக இருக்க முடியும். தொழில்நுட்பம் வளர வளர அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகிறது. அதிலிருந்து மக்களை காக்கும் பணியை மத்திய அரசு (பெடரல் அரசு) மேற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் கொள்கை வகுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளீர்கள், இந்தியாவுக்கு எத்தகைய அச்சுறுத்தல் உள்ளது? சைபர் செக்யூரிட்டியில் இந்தியா வுக்கு எவ்விதம் உதவ முடியும்?

தீவிரவாதிகள் மற்றும் பயங்கர வாதிகளால் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இதேபோல இணையதளம் மூலமான தாக்குதல் அதாவது தகவல்களை திருடுவது, செயலிழக்கச் செய்வது போன்றவை நடைபெற வாய்ப் புள்ளது. இத்தகைய சூழலில் கண்காணிப்பு மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

தனியார் துறையோ அல்லது மாநில அரசோ தங்களது கவனத் துக்கு வரும் தாக்குதல் சார்ந்த விஷயங்களை அது எந்த வகையில் இருந்தாலும் அது குறித்து மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அதை தடுப்பது, எதிர் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கலாம். தகவல்களை பகிர்ந்து கொள்வதுதான் இந்த சூழ்நிலை யில் மிகவும் முக்கியமானது.

சைபர் குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களுக்கு எத்தகைய பொறுப்பு உள்ளது?

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல இருந்தபோதிலும் கம்ப்யூட்டரும், லேப்டாப்பும் பெருமளவிலான மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் மொபைல்போன் அனைவரிடமும் உள்ளது.

இதனால் சைபர் குற்றங்கள் அதி கரிக்க வாய்ப்புள்ளது. மொபைல் போனை ஆன் செய்தவுடன் நீங் கள் உலகின் தகவல் கேந்திரத்தில் நுழைகிறீர்கள். அதேபோல மோச மான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தகவல் திருட்டு, உங்கள் வங்கிக் கணக்கை திருடுவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவர். சைபர் குற்றங்களைத் தடுப்பதில் அரசுக்கு மட்டும் அல்ல தனி நபர்களுக்கும் பொறுப்பு உள்ளது.

சைபர் பாதுகாப்பில் இந்தியாவிடம் போதிய தொழில்நுட்பம் உள்ளதா?

தகவல் பரிமாற்றம்தான் முக்கி யம். இதற்கடுத்ததுதான் தொழில் நுட்பம். இத்தகைய தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்று முதலில் தகவல் வந்தால் அதற்குப் பிறகு தான் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

சைபர் பாதுகாப்பைப் பொறுத்த மட்டில் ஃபயர்வால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை களால் தகவல் திருட்டு, ஆவணங் களை அழிப்பது உள்ளிட்ட செயல்களைத் தடுக்க முடியும்.

எம்.ரமேஷ் - தொடர்புக்கு ramesh.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்