தொழில் ரகசியம்: சிறிய வியாபாரிகளின் பயம்!

By சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

ஒரு வெள்ளைக்கார ஊரில் ஒரு வெள்ளைக்கார சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் பீட்டர் பான். குறும்புத் தனம் மிகுந்த விஷமக்காரன். அவனால் பறக்கக் கூட முடியும். வயதாகாமல் சிறுவனாய் இருக்கும் அபூர்வ வரம் பெற்றவன். நம்மூர் மார்க்கண்டேயனைப் போல. என்ன, மார்கண்டேயனை விட அவனுக்கு வயது கம்மி. குழந்தைத்தனம் குறையாத தன் வாழ்க்கையை நெவர்லேண்ட் என்னும் தீவில் மற்ற சிறுவர்களுடன் ஆடிப் பாடி விளையாடி கழித்து வந்தான் பீட்டர் பான்.

நிற்க.

தொழில் ரகசியம் சொல்வான் என்று பார்த்தால் இவன் தூங்க வைக்க கதை சொல்கிறானே என்று நினைக்கிறீர்களா? வாரா வாரம் கதை விடுவான், இன்று என்ன கதை சொல்கிறான் என்று முழிக்கிறீர்களா?

கவலையை விடுங்கள். பீட்டர் பான் என்னும் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து வைக்கவே கட்டுரையின் முதல் பத்தி. நான் சொல்ல வந்தது கதையல்ல. கடை ஆரம்பித்து அதை வளர்க்க வழி இருந்தும் வளர விடாமல், வளரக் கூடாது என்று வைராக்கியமாய் இருக்கும் சிறு வியாபாரிகளைப் பற்றி. கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் என்று உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி கடையை வளர்க்க, விரிவாக்க ஆயிரம் வழி இருந்தும் அதைச் செய்யாமல் தானும் வளராமல், கடையையும் வளர விடாமல் பீட்டர் பான் போல கடைசி வரை சின்னதாகவே இருக்கும் கடைக்காரர்களைப் பற்றி.

10% வளரும் துறை

சின்ன கடைகளை சின்னதாக எடை போடாதீர்கள். இந்திய ரீடெயில் மார்க்கெட்டின் மதிப்பு சுமார் ஐநூறு பில்லியன் டாலர்கள். இதற்கு ஈடான இந்திய மதிப்பை எழுத தனி சப்ளிமெண்டே வேண்டும். வருடத்திற்கு 10% வளரும் துறை. இன்னமும் கூட வளரலாம். சின்ன கடைகள் பெரியதாகலாம், சின்ன கடைக்காரர் பெரிய வியாபாரி ஆகலாம். அது தடுத்து நிறுத்தப்படுகிறது. வளர்ச்சி தடைப்பட்டுக் கிடக்கிறது. சின்னக் கடைக்காரர் சின்ன சைஸாகவே இருந்து தொலைக்கிறார். எதனால்?

எல்லாம் பய மயம்!

கடைக்காரர்களின் பயம். அரசாங்க இயந்தியரத்தில் மலிந்திருக்கும் ஊழலைக் கண்டு பயம். சின்ன கடை வளர்ந்து பெரிய கடையானால் சட்டதிட்டங்கள் அதிகமாகுமே என்ற பயம். அதிக விதிகளுக்கு ஆளாகித் தொலையவேண்டுமே என்ற பயம். பெரிய கடையாகி பணம் வந்தால் அதிக வரி கட்டவேண்டுமே என்ற பயம். எதற்கு இந்த பயம், சின்னதாய் இருப்பதே ஜெயம் என்று வசன கவிதையாய் சின்னதாகவே இருந்து சின்ன வியாபாரியாகவே கதையை முடித்துக்கொள்கிறார்கள் பலரும்.

பிடிவாதம்

இதை நான் சொல்லவில்லை. உலகப் புகழ்பெற்ற ‘யேல் பல்கலைக் கழக’த்தின் ஆராய்சி வெளியீடு புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைக்கிறது. நிர்வாகத் துறை பேராசிரியர்கள் `சுதீர்’ மற்றும் `தேபப்ரதா தாலுக்தார்’ இருவரும் சுமார் இரண்டாயிரம் இந்திய கடைக்கார்களைச் சந்தித்து, பேசி, ஆராய்ந்து ‘The Peter Pan Syndrome in Emerging Markets’ என்ற ஆராய்ச்சி கட்டுரையாக எழுதியிருக்கின்றனர். வளரக்கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டு பலர் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றனர்.

இந்தியக் கடைக்காரர்கள் பெரும் பாலும் சின்னதாக இருக்கவே விரும்பு கின்றனர். கடை வளர்ந்து பெரியதாக கம்ப்யூட்டர், பார் கோடிங், அனலிடிக்ஸ் என்று புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அப்படிச் செய்தால் கடை வளரும், பணம் பெருகும், அதோடு கடுமையான சட்டதிட்டங்களுக்கு ஆளாகவேண்டும். அதிக வரி கட்டித் தொலைக்கவேண்டும். இந்த தொந்தரவெல்லாம் இல்லாமல் பேசாமல் ஓணான் போல் புதரில் ஒளிந்துகொண்டு சின்னதாகவே கடையை வைத்து நாமும் சின்னதாகவே இருந்து தொலைத்துவிடுவோம் என்று இருந்து விடுகின்றனர்.

ஊழல் ஒரு காரணம்

இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு என்கிறீர்களா? காரணமில்லா மல் இல்லை. அரசாங்கத்தில் மலிந்து கிடக்கும் ஊழல் இதற்கு முக்கிய காரணம். ஊழல் தலைவிரித்தாடும் நாடுகளில் சின்னக் கடைக்காரர்கள் ‘எதற்கிந்த தரித்திரம் பிடித்த ஊழல் பெருச்சாளிகள் கண்ணில் படுவது’ என்று சின்னதாக இருந்துவிடுகின்றனர். ஊழல் அதிகமில்லாத நாடுகளில் வியாபாரிகள் புதிய தொழில்நுட்பத்தை வரவேற்று ஏற்றுக்கொள்கின்றனர். பெரியதாகவேண்டும் என்று பரபரப் புடன் பணியாற்றுகின்றனர். இந்தியத் தாய்திருநாடு எந்த லிஸ்ட்டில் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்!

உலகெங்கும் பொருளாதார சித்தாந்தங்கள் தெளிவாக்கும் விஷயம் ஒன்று. புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, புதிய முதலீடுகளை புகுத்தும் வியாபாரங்களின் உற்பத்தித் திறன் உயர்கிறது. அப்படி உற்பத்தி அதிகரிக்கும் போது பெரிய போட்டிகளை சமாளிக்கும் சக்தியைப் பெறுகிறது. வியாபாரம் பன்மடங்கு வளர்கிறது. லாபம் லம்பாக உயர்கிறது.

கம்ப்யூட்டர் சார்ந்த புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் கடையின் உற்பத்தி சுமார் ஐம்பது முதல் எழுவது சதவீதம் உயர்கிறது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. புதிய தொழிற்நுட்பமும் அதனால் விளையும் பயன்களும் பெரிய கடைகளை விட சின்ன கடைகளின் விற்பனையைத் தான் அதிகப்படுத்துகின்றன என்றும் ஆராய்ச்சிகள் தெளிவாக்கியிருக் கின்றன.

மூட்டைப் பூச்சிக்கு பயந்து…

இருந்தும் வளர்வதற்கு பயந்து, அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அஞ்சி பல இந்திய கடைக்காரர்கள் சின்னதாகவே பிறந்து, சின்னதாகவே இருந்து, சின்னதிலேயே சிறைபட்டுக் கிடக்கிறார்கள். ஊழலுக்கு பயந்து வியாபாரத்தை வளர்க்காமல் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துகிறார்கள்!

மணிக்கு முன்னூறு மைல் வேகத்தில் மாற்றங்களை கண்டு வரும் மார்க்கெட் யுகத்தில் வாழ்கிறோம். புதிய தொழில்கள் புல்லுருவிகள் போல் பூத்து வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் புற்றீசல் போல் நுழைந்து வருகின்றன. வாடிக்கையாளர் தேவைகள் வசவச வென்று பெருகி வருகின்றன. போட்டி யின் உக்கிரத்தை சமாளிக்க குலதெய் வத்திற்கு பொங்கலிட்டு படையல் அளித்தால் மட்டுமே பத்தாது. கடையின் விற்பனையைக் கூட்டவேண்டும். புதிய தொழில் நுட்பத்தை புகுத்தவேண்டும். இது காலத்தின் கட்டாயம். காம்பெடிஷனின் சாபக்கேடு.

பழமொழி

தொழில்கள் சின்னதாகவே இருக்க அரசாங்க ஊழல் ஒரு காரணம் என்றால் அடுத்த வில்லங்கம் நம்மூர் பள்ளிகளிலும் பழமொழிகளிலும். ‘போதும் என்ற மனமே பொன் செய் மருந்து’ என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். அதனால் சின்னதாக இருத்தலே சிறந்தது என்றிருக்க பழகிவிட்டோம். எதை எதையோ மறந்துவிட்டோம். இந்த கன்றாவியை கழட்டி எடுத்து, தூர எறிந்து, மறந்து தொலைத்தால் தேவலை.

வளராதது வழக்கொழிந்து போகும்

அதிவேக மார்க்கெட் உலகில் வளர்வது அதிக லாபம் சம்பாதிக்க அல்ல. இருக்கும் பிசினஸை தக்கவைத்துக்கொள்ள. போட்டி நெருக்கும் பிசினஸில் வேகமாக பயணிப்பது தொலைதூரம் போக அல்ல; இருக்கும் இடத்தில் நிலைத்து நிற்க.

இதற்கு புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவது அவசியம். ப்ரொடக்டிவிடியை அதிகப்படுத்துவது அத்தியாவசியம். விதிக்கும் வரிக்கும் பயந்து சின்னதாக இருக்கும் வியாபாரங்கள் சீர் குலைந்து போய்விடும். வளராத பிசினஸ்கள் வழக்கொழிந்து போய்விடும்.

கடைக்காரர்களுக்கு கூறியது போதாதென்று, அரசாங்கத்திற்கும் அறிவுரை அளிக்கிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள். தலைவிரித்தாடும் ஊழலாலும், கடுமையான சட்டதிட்டங்களாலும் தொழில்கள் வளர வழி இருந்தும் வளராமல் இருப்பதால் அரசாங்கத்திற்கு வரி இழப்பு ஏற்படுவதையும் சுட்டுக் காட்டு கின்றனர். வியாபாரங்கள் வளராமல் இருப்பதால் வேலை வாய்ப்புகள் குறைவதையும் தெளிவாக்குகின்றனர். ப்ரொடக்டிவிடி குறைவதால் பொருள்களின் விலை ஏறி மக்கள் அவதிப்படுவதையும் அழகாக விளக்குகின்றனர்.

அரசாங்கம் விழித்துக்கொள்ளும் வரை வியாபாரிகள் காத்திருந்தால் வேலைக்கு ஆகாது. அலை எப்பொழுது ஓய்வது, எப்பொழுது குளிப்பது? அரசாங்கம் திருந்தட்டும், பிறகு வளர்கிறேன் என்றால் பெருகி வரும் போட்டியில் சிக்கி, சீர்குலைந்து, சின்னாபின்னமாகி தொழிலுக்கே முழுக்கு போட வேண்டிவரும்.

வளரவேண்டும் என்ற வைராக்கி யத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். பீட்டர் பான் போல் பிசினஸை சின்னதாக வைக்காதீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி, விருட்சமாய் வளர்த்து, விஸ்வரூபம் எடுக்க வையுங்கள். உங்களுக்கும் உங்கள் பிசினஸுக்கும் புண்ணியமாய் போகும்.

satheeshkrishnamurthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்