வாய்ப்புகள் ஏராளம்

By ரவி சின்னதம்பி

பிக்டேட்டாவைப் பொறுத்தவரை தொழில்துறையில் பிக்டேட்டாவுக்கு முன், பிக்டேட்டாவிற்குப் பின் என்று காலத்தை பிரித்துப்பார்க்கும் அளவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றது எனலாம். தொழில் நிறுவனங்கள் தகவல்களை சேகரித்து அதை கூட்டமைப்பு செய்து கூட்டிக்கழித்து ஆராய்ந்து பார்க்கும் வழக்கம் 1950களில் ஆரம்பித்துவிட்டது எனலாம். நாட்கணக்கில் நேரம் செலவழித்து தகவல்களைத் திரட்டி (ஸ்மால் டேட்டாவை சேகரித்து) அதை மாதக்கணக்கில் நேரத்தை செலவு செய்து கூட்டமைப்பு செய்து பின் வாரக்கணக்கில் நேரம் செலவழித்து என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முயன்றது அந்தக்காலம்.

இதில் தகவல் என்பதில் நிறுவனத்தின் உள்ளே ஜெனரேட் ஆகும் தகவல்களே பெரும் பங்கு வகித்தது. வாடிக்கையாளர் டேட்டாக்கள் சர்வேக்களின் மூலம் (பேப்பர் மற்றும் பேனாவுடன் நேரடி சந்திப்பு வாயிலாக – சர்வே மன்ங்கி மூலமாக அல்ல!) திரட்டப்பட்டு வந்ததால் அதன் பங்கு குறைவாகவே இருந்தது. இதனை பிக்டேட்டா வெர்ஷன் 1.0 என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்த வகை டேட்டா திரட்டலையும் ஆய்வையும் பிசினஸ் இன்டெலிஜன்ஸ் என்றார்கள். பிசினஸ் இன்டெலிஜன்ஸை வைத்துக்கொண்டு நான் என்ன செய்கின்றேன், எதற்கு செய்கின்றேன், எப்படி செய்கின்றேன் என்று எனக்கு நன்றாகத்தெரியும் என்று நிறுவனங்கள் மார்தட்டிக்கொள்ள முடியும். அவ்வளவேதான்!

வெர்ஷன் 2.0

இணையதளங்களும் சோஷியல் நெட்வொர்க்குகளும் பெரிய அளவில் தலையெடுத்து வளர ஆரம்பித்த 2000க்கும் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது பிக்டேட்டா வெர்ஷன் 2.0 என்கின்றனர். முதலில் மக்கள் மத்தியில் இணையம் பிரசித்தி பெற ஆரம்பித்தது. அதன் பின்னர் சோஷியல் நெட்வொர்க்குகள் தலையெடுத்து மக்களை அடிமையாக்கிப்போட்டது. இணையம் பிரசித்தி பெற ஆரம்பித்த போது, இந்த சர்வேக்கு கொஞ்சம் பதில் சொல்ல முடியுமா என பாப் விண்டோக்கள் வந்துகொண்டிருந்தது. உங்களுக்கு இஷ்டம் இருந்தால் பதில் சொல்வீர்கள். இல்லாவிட்டால் பட்டென கிளிக் செய்து பாப் விண்டோவை குளோஸ் செய்துவிடுவீர்கள்.

பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு தெருத்தெருவாய் போவதை விட இது கொஞ்சம் பெட்டரான விஷயமாய் இருந்தது. ஆனால் நீங்கள் பிரியப்பட்டு இஷ்டப்பட்டால் மட்டுமே நிறுவனங்களுக்கு டேட்டா கிடைக்கும்.நிறுவனங்களின் டேட்டா பசிக்கு இது சரியான தீனி போடாவிட்டாலும் பேப்பர் பேனா காலத்தைக் காட்டிலும் கொஞ்சம் பெட்டர் தீனி கிடைத்துவந்தது. போட்டிகள் அதிகமாகி வியாபாரத்தின் வீச்சு அதிகரிக்க அதிகரிக்க நிறுவனங்களின் டேட்டா பசிக்கு அளவில்லாமல் போனது.

நீங்கள் என்ன இஷ்டப்பட்டு கொடுப்பது. நாங்களே நீங்க போற பாதையை வைத்து ஜட்ஜ்மெண்ட் பண்ணிக்கிறோம் என்ற வசதியைத் தரும் வகையில் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஏனைய சோஷியல் நெட்வொர்க் நிறுவனங்களும் உங்களைத் தொடர ஆயத்தமாயின. இல்லையில்லை! டேட்டாதானே வேணும். என் பின்னாடியே வா என நீங்களே வா போகலாம் என்று வாஞ்சையாய் சொல்லும் அளவிற்கு உங்களை வசப்படுத்தி மடக்கிப்போட்டன.

இதற்கான டெக்னாலஜி படுவேகமாய் வளர்ந்ததும் இந்த காலகட்டத்தில்தான். இந்த வகை டேட்டா சேகரிப்பை வைத்துக்கொண்டுதான் உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம், இந்த வேலை உங்களுக்கு பிடித்திருக்கலாம், இந்தக் கூட்டத்தில் நீங்கள் சேரப் பிரியப்படலாம், நீங்க படிச்ச ஸ்கூலில் கூடப் படிச்ச ஆள் இப்ப பிரின்சிபால் என பல்வேறு தகவல் பிட்டுகளை உங்கள் முன்னே போடுகின்றது பல சோஷியல் மற்றும் நெட்வொர்க் நிறுவனங்களும்.

தொழில்நுட்ப மாற்றம்

இந்தக் கால கட்டத்தில்தான் அனலிடிக்ஸை உபயோகித்து தற்போது நடப்பவற்றைப் பார்த்து ஏற்கெனவே நடந்தவற்றை வைத்து உடனுக்குடன் பரிந்துரைகள் செய்யப்பட ஆரம்பித்ததும். புரியலேல்ல! என்ன சொல்ல வரேன்னு தெரியலேல்ல! இப்ப புரியும் பாருங்க. உங்கள் ஸ்மார்ட் போனிலோ கம்ப்யூட்டரிலோ அமேசான் டாட் காமுக்கு போங்க.

அனலிடிக்ஸின்னு புத்தகம் சர்ச் பண்ணுங்க. பெரிய லிஸ்ட் வரும். அதில் ஒரு புத்தகத்தை கிளிக் பண்ணுங்க. அப்புறமா அந்த பேஜோட கடைசிக்குப் போய்ப்பாருங்க. நீங்க பார்த்த இந்தப் புத்தகத்தை வாங்கியவர்கள் கீழே தரப்பட்டுள்ள புத்தகங்களையும் இதனுடன் சேர்த்து வாங்கினார்கள் என்று காட்டும். இதில் நடப்பது என்பது நீங்க வாங்கலாமா என தற்சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் புத்தகம். நடந்தது ஏற்கனவே இந்தப் புத்தகத்தை வாங்கியவர்கள் அதனுடன் சேர்த்து வாங்கிய ஏனைய புத்தகங்கள் – என்றைக்கோ வாங்கி அமேசானின் டேட்டாபேசில் பதிந்து வைத்திருக்கும் பதிவு அது. உங்கள் ப்ரவுசரில் நீங்கள் தற்போது பார்க்கும் (வாங்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கும்!) புத்தகம் லைவ்வாக உங்கள் கண்ணில் தெரிகின்றது. நீங்கள் வாங்கினால் மட்டுமே அது டேட்டா பதிவாக மாறும்.

அதுவரை அமேசானின் கேட்லாக் டேட்டாபேசில் மட்டுமே அது இருக்கும். நீங்கள் அந்த புத்தகத்தைப் பார்க்க முயன்றவுடனேயே அலர்ட்டா இருடா ஒருத்தன் சிக்கப்போறான் என்று மணியடித்து ஏற்கனவே விற்ற மத்த புத்தகங்களை டேட்டா பேசிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து காட்டுவது அனலிடிக்ஸ் வித்தை. இப்போது புரிகின்றதா நடப்பதும் நடந்ததும். இந்த டெக்னாலஜி மாற்றங்களைத்தான் அனலிடிக்ஸ் 2.0 என்கின்றனர் வல்லுநர்கள்.

பலவகையில் உதவும்

இணையத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அனலிடிக்ஸ் சாத்தியமோ என்ற சந்தேகம் உங்களுக்கு அனலிடிக்ஸ் 2.0 குறித்த தகவல் தெரிந்தவுடன் வந்திருக்கும். அதுதான் இல்லை. அனலிடிக்ஸ் 3.0 என்பதை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கின்றோம் என்கின்றனர் வல்லுநர்கள். அது என்ன வெர்ஷன் 3.0 என்கின்றீர்களா? இணையத்தில் இருக்கும் வியாபாரங்கள் மட்டுமல்ல அனைத்து வியாபாரங்களுமே வெர்ஷன் 2.0 வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் செய்ய ஆரம்பிக்கும் என்பதுதான் அது.

அது என்ன இணையத்தில் இல்லாத நிறுவனங்கள். அப்படி ஒன்று உண்டா என நீங்கள் கேட்கலாம். வியாதியஸ்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை, மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கெட், பார்சல்களைக் கொண்டு செல்லும் கொரியர் நிறுவனம், இவையெல்லாம் இண்டர்நெட்டில் இயங்குவதில்லையே. மருத்துவமனைக்கு வரும் பல நோயாளிகள் சொல்லும் சிம்டம்ஸ்களை வைத்து டேட்டா பேசில் இருக்கும் பழைய கேஸ்களின் சிம்டம்ஸுடன் உடனுக்குடன் ஒப்பிட்டு டாக்டருக்கு இந்தெந்த நோயாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்று க்ளு கொடுக்கலாம், டாக்டரின் வேலை இதுதான் என்றாலும் அனலிடிக்ஸின் வேகம் மகத்தானதாக இருக்குமே!

இதுவும் போக மருத்துவம் வழங்கப்படும் விதம், தரம், போன்றவற்றைக்கூட அனலிடிக்ஸை வைத்து கண்டறியலாம். நோயாளிகள் காத்திருந்த நேரம், ஒரே விதமான நோய் அறிகுறிகள் இருக்கும் நோயாளிகள் குணமாக எடுத்துக்கொண்ட நேரம் போன்றவற்றை கம்ப்பேர் செய்து மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்படும் தரத்தை தொடர்ந்து கணிக்கலாம்.

சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் டேஸ்ட் எப்படி மாறுகின்றது என்பதையும், புது ப்ராடெக்ட்களை விரும்பி வாங்குபவர்களின் கன்சம்ப்ஷன் பேட்டர்ன் எப்படி இருக்கின்றது என்பதையும் கூட கணிக்கலாம்.

வர்த்தக வாய்ப்பு

மேலும் அனலிடிக்ஸ் 3.0 வேகமாக வளரும் காலத்தில் தொழில்களின் நடைமுறையில் பெரும்பாலான ரொட்டீன் முடிவுகளை எடுக்கத் தேவைப்படும் அனலிடிக்ஸ் (ஸ்டாட்டிஸ்டிகல்) மாடல்களை சாப்ட்வேர் பேக்கேஜாக எழுதி விற்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது என்கின்றனர். உதாரணத்திற்கு, பெட்ரோல் பங்க்கை எடுத்துக்கொள்வோம். நாட்டில் பல ஆயிரம் பங்க்குகள் இருந்தாலும் பிசினஸ் மாடல் என்னவோ அனைத்திற்கும் ஒன்று தானே. பெட்ரோல் பங்க் வியாபரத்தில் அனலிடிக்ஸை உபயோகிக்க நினைக்கும் அனைவரும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அனலிடிக்ஸ் தேவைதானே இருக்கும்.

இந்த மாதிரி நிறுவனங்களுக்கு ரெடிமேடாய் அனலிடிக்ஸ் மாடல்களை எழுதி பேக்கேஜாக விற்க முடியுமல்லவா? இந்த மாதிரியான வியாபார வாய்ப்புகளும் இருக்கின்றது என்கின்றனர் வல்லுநர்கள். இப்போது சொல்லுங்கள் இந்தத் துறையில் நீங்கள் வேலை பார்க்க விரும்புவதற்கான வாய்ப்பு அதிகமாகி இருக்கின்றது என்று உங்கள் மூளையில் இருக்கும் அனலிடிக்ஸ் சாப்ட்வேர் மணியடிக்கின்றதா இல்லையா என்று?

cravi@seyyone.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

26 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

24 mins ago

சினிமா

42 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

36 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

50 mins ago

வலைஞர் பக்கம்

54 mins ago

சினிமா

59 mins ago

மேலும்