தங்க சேமிப்புக் கணக்கு: எம்எம்டிசி-பிஏஎம்பி தீவிரம்

By செய்திப்பிரிவு

தங்க நகை சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள எம்எம்டிசி-பிஏஎம்பி நிறுவனம் தங்க சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இதன்படி தங்கத்தை சிறிய அளவில் உபயோகிக்கும் பொதுமக்கள் தங்கள் வசமுள்ள தங்கத்தை சேமித்து வைக்கலாம். அதற்கு தங்கக் கணக்கு தொடங்கப்படும். இவ்விதம் சேமித்து வைக்கப்படும் தங்கத்தை இந்நிறுவனம் சுத்திகரித்து பயன் படுத்தும்.

அவ்விதம் பயன்படுத்தும் தங்கத்துக்கு பொதுமக்களுக்கு அவர்கள் கணக்கில் அளித்துள்ள தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப வட்டி வழங்கப்படும் என்று இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கோஸ்லா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை செயல் படுத்தினால் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) கணிசமாகக் குறையும். தங்கம் இறக்குமதி செய்யும் அளவும் குறையும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இம்மாதம் 12-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா சர்வதேச தங்க மாநாடு குறித்து விளக்கிய அவர், இந்த மாநாட்டில் தங்கத்தை சிறப்பாக நிர்வகிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என்றார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிக அளவில் தங்கம் உள்ளது. இது சுமார் 25 ஆயிரம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வீடுகளில் தங்க ஆபரணங்களாக உள்ளன. இதில் ஒரு சிறு பகுதி தங்க சேமிப்புத் திட்டத்துக்கு வந்தாலே அது மிகுந்த பயனை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா ஆண்டுதோறும் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. தங்க சேமிப்புக் கணக்கு மூலம் 1 சதவீத தங்கம் கிடைத்தாலே அது 200 டன் அளவுக்குக் கிடைக்கும். எஞ்சியுள்ள 700 டன் தங்கத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சுமையை சமாளித்துவிட முடியும்.

தங்க சேமிப்புக் கணக்கை, ரூபாய் சேமிப்புக் கணக்கைப் போல நிர்வகிக்க வேண்டும். இதற்கும் வட்டி அளிக்கப்படும். இதை நிர்வகிப்பதும் எளிது. குறைந்தபட்சம் 50 கிராம் தங்கத்தை கணக்கில் சேமிக்கலாம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் 90 சதவீத தங்க நுகர்வோரை சமாளிக்க முடியும்.

முதிர்வின்போது ரூபாயாக அளிக்காமல் தங்கமாக அளிக்கப்படும். இதன்மூலம் தங்கம் சேமிப்போருக்கு கூடுதல் தங்கம் வட்டியாகக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த யோசனையை ரிசர்வ் வங்கியும் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இருப் பினும் தங்கத்தின் தூய்மை குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

எம்எம்டிசி-பிஏஎம்பி நிறுவனமானது இந்தியாவின் முதலாவது சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுத்திகரிப்பு நிறுவனமாகும். புதிய தங்கக் கணக்குத் திட்டத்தைச் செயல்படுத்த புதிய சாஃப்ட்வேர் உருவாக்கும் பணியில் எம்எம்டிசி-பிஏஎம்பி தீவிரமாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் தயாராகிவிடும் என்று கோஸ்லா தெரிவித்தார்.

இந்தத் திட்டம் அமலுக்கு வர காலதாமதம் ஆகலாம். இருப்பினும் இதை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

48 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்