ஓர் ஆசிரியர் தொழில் முனைவர் ஆனார்

By வி.தேவதாசன்

கர்நாடக மாநிலம் தக்சின் கன்னடா மாவட்டம் பல்லதக்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவ கௌடா. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். இவர் பள்ளியில் பணியாற்றிய காலத்தில் தனது வீட்டிலிருந்த பசுக்களை பராமரிக்க மிகவும் சிரமப்பட்டார். குறிப்பாக பசுக்களில் பால் கறப்பது இவருக்கு மிகவும் சவாலான பணியாக இருந்தது. நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதோடு, ஆறு, ஏழு பசுக்களில் பால் கறப்பது உடல் ரீதியாக மிகவும் சிரமமாக இருந்தது. வேலைக்கு ஆள் வைத்தாலும் அடிக்கடி அவர்கள் வேலையை விட்டு நின்று விடும் நிலை.

இந்த சூழலில்தான் பால் கறக்கும் இயந்திரத்தை வாங்கலாம் என அவர் தேடியபோது, பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள்தான் சந்தைகளில் இருந்தன. அவை மிக அதிக விலைக்கு இருந்ததால் அவரால் வாங்க முடியவில்லை. நாமே ஏன் ஒரு இயந்திரத்தை வடிவமைக்கக் கூடாது என்ற எண்ணம் ராகவ கௌடாவுக்கு உருவானது. நீண்ட முயற்சிக்குப் பின் பால் கறக்கும் இயந்திரத்தை வடிவமைத்தார். அவர் முதலில் வடிவமைத்த இயந்திரம் பசுக்களுக்கு அவ்வளவு ஏற்றதாக இல்லை.

அதனைத் தொடர்ந்து தனது இயந்திரத்தில் அடுத்தடுத்து பல மாற்றங்களை உருவாக்கி, பசுக்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்காத, அதே நேரத்தில் சில நிமிடங்களில் எளிதாக பால் கறப்பதற்கான இயந்திரத்தை 2002-ம் ஆண்டு அவர் வடிவமைத்தார்.

அவரது இந்த கண்டுபிடிப்பு குறித்து அறிந்த, புதிய கண்டு பிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான தேசிய நிறுவனம் (National Innovation Foundation) ராகவ கௌடாவுக்கு உதவ முன் வந்தது. அவரது கருவியின் வடிவமைப்பை மேலும் எளிமைப்படுத்த உதவிய அந்த நிறுவனம், இந்த கண்டு பிடிப்புக்கான காப்புரிமையையும் ராகவ கௌடாவுக்குப் பெற்றுத் தந்தது. மேலும், இந்தக் கண்டு பிடிப்புக்காக 2005-ம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து தேசிய விருதையும் ராகவ கௌடா பெற்றார்.

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கு விப்பதற்கான தேசிய நிறுவனம் ராகவ கௌடாவின் கண்டுபிடிப்பை வணிக ரீதியாக மேம்படுத்துவதற்கும் பல உதவிகளை செய்தது. கையால் மிக எளிதாக இயக்கக் கூடிய பால் கறவை இயந்திரம் மட்டுமல்லாது மின்சாரத்தால் இயங்கக் கூடிய இயந்திரத்தையும் ராகவ கௌடா இப்போது உருவாக்கியுள்ளார். 2002-ம் ஆண்டிலிருந்து இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் விற்பனை ஆகியுள்ளதாக அவரது குடும்பத் தினர் தெரிவிக்கின்றனர்.

சீரா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ள ராகவ கௌடா, தனது இயந்திரத்தை இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று விட்ட ராகவ கௌடா, பால் கறவை இயந்திர உற்பத்தியிலும், விற்பனையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கையால் இயக்கக் கூடிய இயந்திரம் ரூ.15 ஆயிரத்துக்கும், மின்சாரத்தால் இயங்கும் கருவி ரூ.31 ஆயிரத்துக்கும் விற்பனை செய்கிறார்கள்.

தொடர்புக்கு: 099942 10295, 094499 05944.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்