லாபம் தரும் மரவள்ளி கிழங்கு சாகுபடி

By வி.தேவதாசன்

ஜவ்வரிசி, சேமியா, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக்கான மூலப் பொருளாக மரவள்ளிக் கிழங்கு திகழ்கிறது. மேலும், தொழிற் சாலைகளில் உற்பத்தியாகும் பல பொருள்களுக்கும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச்சு பவுடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மாத்திரைகளின் மேல்புறத்தில் உள்ள வெண்மை நிற கோட்டிங் மரவள்ளிக் கிழங்கின் ஸ்டார்ச்சு பவுடரைக் கொண்டே தயாரிக்கப்படுவதாக வேளாண் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பல்வேறு பயன் பாடுகளுக்காக மரவள்ளிக் கிழங்கின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும், அதனால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் எம்.செந்தில்குமார் கூறியதாவது:

``சேலம், நாமக்கல், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட் டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நீர் தேங்காத, காற்றோட்டமுள்ள மண் வகைகள் அனைத்தும் மரவள்ளி சாகுபடி செய்ய ஏற்றவை ஆகும். இதனால் தற்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை என பல மாவட்டங்களுக்கும் மரவள்ளி சாகுபடி பரவலாகி வருகிறது.

10 மாத பயிரான மரவள்ளி சாகுபடியில் மற்ற பயிர்களை விட பராமரிப்பு செலவு குறைவு. அதே நேரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த ஏத்தாப்பூர் 1 என்ற மரவள்ளிக் கிழங்கை கடந்த ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்து, பெரும் லாபம் சம்பாதித்தனர்.

மாவுப்பூச்சி உள்ளிட்ட சில வகை பூச்சிகளின் தாக்குதல் மரவள்ளியில் இருக்கும். எனினும் அவற்றை எளிமையான முறைகளில் கட்டுப்படுத்தி விடலாம். இறவைப் பாசனம் எனில் கார்த்திகை, மார்கழி மாதங்களிலும், மானாவரிப் பாசனம் எனில் சித்திரை, வைகாசி மாதங்களிலும் ஏத்தாப்பூர் 1 மரவள்ளி நடவு செய்யலாம்" என்கிறார் செந்தில்குமார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகேயுள்ள ஓவேல்குடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான எம்.செல்வநாதன், கடந்த 15 ஆண்டுகளாக மரவள்ளி சாகுபடி செய்து வருகிறார். நெல் உள்ளிட்ட பிற பயிர்களையும் சாகுபடி செய்து வரும் செல்வநாதன், "மற்ற பயிர்களை விட மரவள்ளி சாகுபடியில்தான் அதிக லாபம் கிடைக்கிறது" என்கிறார்.

"நான் நிலக்கடலையில் ஊடுபயிராகத்தான் மரவள்ளி சாகுபடி செய்து வருகிறேன். முதல் மூன்று மாதத்தில் நிலக் கடலை மகசூலுக்கு வந்து விடும். அதுவரை மரவள்ளிக்கென தனியாக எந்த பராமரிப்பு செலவும் தேவையில்லை. நிலக்கடலை மகசூல் எடுத்த பிறகுதான், மரவள்ளிக்கென தனியாக பார் அமைத்து உரமிட வேண்டும். அதன் பிறகு 15 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானது. இடையே மழை பெய்து விட்டால் அதுவும் தேவையில்லை. 10-வது மாதத்தில் மரவள்ளிக் கிழங்கு அறுவடைக்கு வந்துவிடும்.

கடந்த ஆண்டு நான் 4 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்திருந்தேன். ஏக்கர் ஒன்றுக்கு 15 டன் மகசூல் கிடைத்தது. கடந்த ஆண்டு ஒரு டன்னுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு விலை கிடைத்தது. நான் டன் ஒன்று ரூ.11 ஆயிரம் என்ற விலையில் விற்பனை செய்தேன்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விலை கிடைக் குமா எனத் தெரியவில்லை. எனினும் மற்ற பயிர்களை விட அதிக லாபம் கிடைக்கும் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். நான் இந்த ஆண்டும் 4 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்துள்ளேன். எனக்கு நிலக்கட லையால் கிடைக்கும் வருவாய் போக, மரவள்ளி சாகுபடியில் கிடைக்கும் வருவாயை கூடுதல் வருவாய் என்றே கருதுகிறேன்.

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆலைகளுக்கு மரவள்ளிக் கிழங்கை வாங்கிச் செல்கிறார்கள். நம் வயல்களுக்கே நேரடியாக வந்து மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்ய பலர் உள்ளனர். மேலும் மரவள்ளிக் குச்சியைத் தான் நடவு செய்கிறோம். ஆகவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் விதைக் குச்சிக்காக நாம் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை. நம்மிடம் உள்ள குச்சிகளையே சிறு துண்டு களாக நறுக்கி அடுத்த ஆண்டில் நடவு செய்யலாம்.

இதுதவிர பெருமளவில் குவியும் மரவள்ளி குச்சிகள் எரிபொருளாக பயன்படுகிறது. மரவள்ளி இலைகள் நம் கால் நடைகளுக்கு பசுந்தீவன மாகிறது. ஆக, பல்வேறு வகைகளில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி லாபம் தருவதாக உள்ளது" என்கிறார் செல்வநாதன்.

மரவள்ளி சாகுபடி தொடர்பான தனது அனுபவங்களை மற்றவர் களுடன் பகிர்ந்து கொள்ள செல்வநாதன் தயாராக உள்ளார். மேலும் விவரங்களுக்கு 94863 36342 என்ற செல்போன் எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல் மரவள்ளி சாகுபடி தொடர்பான தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளுக்கு 99760 99191 என்ற எண்ணில் உதவிப் பேராசிரியர் செந்தில் குமாருடன் பேசலாம்.

devadasan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்