எம்.பக்தவத்சலம் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் (M.Bhaktavatsalam) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நசரத்பேட்டையில் செல்வந்தர் குடும்பத்தில் (1897) பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது தந்தை காலமானார். தாய்மாமன்களின் ஆதரவில் வளர்ந்தார். சென்னையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

* சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அது, இந்திய விடுதலைப் போராட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவந்த நேரம். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், திலகர், விபின் சந்திரபால் ஆகிய தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

* வக்கீல் தொழிலை விட்டு, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். 1936-ல் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், ‘இந்தியா’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ‘தேசபக்தன்’ உட்பட பல பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

* ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்ட் புரட்சி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். சிறையில் ராஜாஜி நிகழ்த்திய பகவத்கீதை, கம்பராமாயண உரைகளைக் கேட்டார். அமராவதி சிறையில் இருந்தபோது பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்.

* தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத் துணைத் தலைவராக இருந்தார். சென்னை மகாஜன சபா செயலாளராக 4 ஆண்டுகள் செயல்பட்டார். மது ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்றார். சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ் தடியடியில் காயமடைந்தார்.

* நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

* திருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர். ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர் களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார்.

* தமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமையும், தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சிறந்த பக்தர். ‘எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர், ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்’ என்று கூறுவாராம். சிறந்த ஆற்றலும், அறிவுக்கூர்மையும் நிறைந்தவர்.

* ‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’ என்று இவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மனிதநேய உணர்வோடு வாழ்ந்தவர். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மை, தூய்மையைக் கடைபிடித்தவர். சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் வல்லவர்.

* மிக எளிமையானவர், எதிர்க்கட்சியினரும் விரும்பும் தலைவராக விளங்கியவர், தலைசிறந்த தேசியவாதி, மக்கள் நலனையே பெரிதாக நினைப்பவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் போற்றப்பட்ட எம்.பக்தவத்சலம் 90-வது வயதில் (1987) மறைந்தார். சென்னை யில் இவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்