ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் 10

By செய்திப்பிரிவு

செவிலியர் பயிற்சி முறையை உருவாக்கியவர்

நவீன செவிலியர் முறையை உருவாக்கியவரும் செவிலியர்களுக்கானப் பயிற்சிப் பள்ளியை முதன் முதலாகத் தொடங்கியவருமான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த தினம் இன்று (மே 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரில் பிரிட்டிஷ் செல்வக் குடும்பத்தில் பிறந்தார் (1820). வீட்டிலேயே ஜெர்மன், லத்தீன், ஃபிரெஞ்ச் ஆகிய மொழிகளைக் கற்றார். ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டிருந்த இந்த சிறுமிக்கு 16 வயதை நெருங்கும்போது, செவிலியராக சேவையாற்றுவதுதான் இறைவன் தனக்கு விதித்துள்ள பணி என்று உறுதியாக நம்பினார்.

# 17 வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை நிராகரித்து, செவிலியராக சேவையாற்றப் போகிறேன் என்ற தனது முடிவை அறிவித்தார். 1844-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள லூத்தரன் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சியில் சேர்ந்தார். 1850-ல் லண்டனில் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார்.

# இவரது பணிகளால் மிகவும் கவரப்பட்ட மருத்துவமனை தலைவர் ஒரே ஆண்டுக்குள் இவரை செவிலியர் கண்காணிப்பாளராக நியமித்தார். அந்த சந்தர்ப்பத்தில் வேகமாகப் பரவி வந்த காலரா நோய் அந்த மருத்துவமனையில் நிலவிய சுகாதாரமற்ற சூழல் ஆகியவற்றால் இவரது பணி மிகவும் சவாலாக இருந்தது.

# கடுமையான உழைப்பு இவரது உடல்நலத்தை பாதித்தது. குணமாவதற்கு முன்னரே இவரது செவிலியர் வாழ்வில் மிகப் பெரிய சவாலான சூழலை இவர் எதிர்கொண்டார். ரஷ்யப் பேரரசுக்கும் பிரட்டிஷ் பேரரசுக்கும் இடையே, போர் மூண்டது. மிகவும் குறைவான வசதி கொண்ட க்ரிமியா என்ற இடத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

# சுகாதாரச் சீர்கேடு நிலவியது. இதனால் நோய்களும் பரவின. பயிற்சி பெற்ற ஒரு செவிலியர் குழுவுடன் வருமாறு இவருக்கு அழைப்பு வந்தது. உடனடியாக, 34 செவிலியர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு க்ரிமியா புறப்பட்டார்.

# தனது செவிலியர் குழுவுடன், ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உதவியுடன் அந்த மருத்துவமனை முழுவதையும் சுத்தம் செய்தார். தினமும் 20 மணிநேரம் நோயாளிகளுக்கு சேவையாற்றினார். இரவின் இருளில் கையில் விளக்கை ஏந்தியவாறு ஒவ்வொரு நோயாளியாகச் சென்று பார்த்தார்.

# காயம்பட்ட போர் வீரர்கள் தங்களைக் காக்க வந்த தேவதையாக இவரைப் போற்றினர். ‘த லேடி வித் தி லாம்ப்’ என்றும் ‘தி ஏஞ்சல் ஆஃப் தி க்ரிமியா’ எனவும் பாசத்துடன் இவரைக் குறிப்பிட்டனர். இங்கு, தான் பெற்ற அனுபவங்களை மொத்தம் 830 பக்கம் கொண்ட குறிப்புகளாக எழுதிவைத்தார். அது நூலாக வெளிவந்தது.

# 1856-ல் சொந்த ஊர் திரும்பினார். ஹீரோவாகப் போற்றப்பட்டார். அவருக்குப் பரிசுகளும், ரொக்கமும் வழங்கப்பட்டன. அந்தத் தொகையைகொண்டு, செயின்ட தாமஸ் மருத்துவமனையைத் தொடங்கினார்.

# அங்கு ‘நைட்டிங்கேல் ட்ரெய்னிங் ஸ்கூல் ஃபார் நர்சஸ்’ என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். இந்தியாவில் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். ஓய்வு இல்லாத கடுமையான உழைப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டார். ஆனாலும் படுக்கையில் இருந்தபடியே சுகாதாரம், செவிலியர் பயிற்சியில் மேம்பாடு, சீரமைப்புகளில் கவனம் செலுத்தினார்.

# நோயுடனும், அதீத சோர்வுடனும் போராடி வந்தாலும் இறுதிவரை மனிதகுல நலனுக்காக சேவையாற்றிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 90-வது வயதில் காலமானார். இவரது நினைவைப் போற்றும் வகையில் இவர் பிறந்த தினம் உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

- ராஜலட்சுமி சிவலிங்கம்





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்