முத்துக் குளிக்க வாரீகளா 11: நாவாய் மொழி!

By கவிக்கோ அப்துல் ரகுமான்

பிரளயத்தில் தப்பித்த நோவாவும் அவரு டைய குடும்பமும் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்பதைக் காட்டும் அரிய சான்று ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை’ நூலில் காணப்படுகிறது.

' பொய்யகல நாளும்

புகழ்விளைத்தல் என்வியப்பாம்

வையகம் போர்த்த

வயங்கொலிநீர் - கையகலகக்

கல்தோன்றி மண்தோன்றாக்

காலத்தே, வாளோடு

முன்தோன்றி மூத்த குடி.’

‘பூமியைப் போர்த்தியிருந்த வெள்ளம் வடிந்த போது, கல் அதாவது மலை நீரிலிருந்து வெளிப் பட்டு, மண் அதாவது தரை வெளிப்படாதிருந்த காலத்தில் கையில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்பது இதன் பொருள்.

நோவா செய்த பேழை (கப்பல்) ‘கோபர்’ (Gopher) மரத்தாலானது என்று பைபிள் கூறுகிறது.

ஹீப்ரு பைபிளில் ‘கோபர்’ என்ற சொல் எழுதப் பட்டிருந்தாலும் இச்சொல் ஹீப்ரு மொழியிலோ அதனோடு தொடர்புடைய மொழிகளிலோ காணப்படாததாகும்.

நோவாவின் பேழை இந்தியப் ‘ப்ளேன்’ (Plane) மரத்தால் செய்யப்பட்டது என்று குர்ஆன் விரிவுரையாளர் பைளாவி கூறுகிறார். (Dictionary of Islam, p. 436).

ப்ளேன் மரத்தின் தாவர இயல் பெயர் ‘Platanus Orientalis’ என்பதாகும். ’ஓரியண்டாலிஸ்’ என்ற சொல்லே இம்மரம் கீழை நாடுகளைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.

திராவிட இந்தியாவில் பழங்குடியினரே முதன்முதலாக மரக்கலம் செலுத்தியவர்கள் என்று கடலாய்வு செய்த ரஷ்ய அறிஞர் அலெக்ஸாந்தர் கோந்தரதோவ் கூறுகிறார். (The Riddles of Three Oceans, p.151).

தொல் திராவிடர்களின் இன்றைய வாரிசுகளாகக் கருதப்படும் தோதர்கள் பாடும் நாட்டுப் பாடல்கள் அவர்களுடைய முன்னோர்கள் கடல்வழியாக வந்தவர் என்று கூறுகின்றன. (மேற்காட்டிய நூல், ப.151).

நோவாதான் முதலில் கப்பலைக் கட்டியவர். மனிதர்கள் அதற்கு முன் கப்பலைக் கண்டதில்லை. எனவே நோவா கட்டிய கப்பலுக்கு 'நோவா' என்றே பெயர் சூட்டிவிட்டனர். அது தமிழில் ‘நாவாய்’ ஆயிற்று.

உலக மொழிகளிலெல்லாம் இந்த ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லே சிற்சில மாற்றங்களுடன் கப்பலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, கன்னடம்- நாவுகே; சமஸ்கிருதம், பாரசீகம், உருது, ஹிந்தி - நாவ்; ஹீப்ரு - ஓனிய்யாஹ்; இலத்தீன் - நாவீஸ்; பிரெஞ்சு - நாவிர் ; ஜெர்மன்- போர்ட் நெஹ்மன்; இத்தாலி- நாவ்; ருமேனியா- நாவா; ஸ்பானிஷ்- நாவியோ; அர்மேனியா -நாவ்.

இச்சொல்லாட்சி பல உண்மைகளை உணர்த்துகிறது. பிறமொழி அகராதிகளில் இச்சொல் பிறமொழிச் சொல் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், தமிழ் அகராதி ‘நாவாய்’ என்பதைப் பிறமொழிச் சொல் என்று குறிப்பிடவில்லை. எனவே, இச்சொல் தமிழில் இருந்தே பிறமொழிகளுக்குச் சென்றிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

பிரளயத்தில் தப்பித்த நோவாவின் சந்ததியினரே பல்கிப் பெருகிப் பல இடங்களில் குடியேறி வாழ்ந்தனர். அவர்கள் காலப்போக்கில் பல புதிய மொழிகளை உண்டாக்கிக் கொண்ட போதும் தங்கள் தாய்மொழிச் சொற்கள் பலவற்றை அப்படியே வைத்துக்கொண்டனர் என்று தெரிகிறது.

பைபிளின்படி நோவாவின் புதல்வர்கள் மூவர் ஷெம், ஹெம், எஃபத். தமிழ் பைபிள் ஷெம்மை சேம் என்றும் ஹெம்மை காம் என்றும் கூறுகிறது. இஸ்லாமியத் தொன்மத்தின்படி நான்காவது புதல்வனாக ‘யம்’ என்பவன் இருந்ததாகத் தெரிகிறது.

‘யம்’ இறைவனை ஏற்காதவன். தீயவன். பிரளயத்தில் அவன் மூழ்கி இறந்துவிட்டான்.

யமன் பற்றித் தமிழ்த் தொன்மம் ஒன்று இருக்கிறது. மனு என்னும் தமிழ் வேந்தனுக்கு இழை என்னும் ஒரு பெண் மகவும் இயமன் என்னும் ஓர் ஆண் மகவும் இருந்தனர். மனு தான் ஆண்டு வந்த நாட்டின் தென் பாகத்தை இயமனுக்கும் வட பாகத்தை இழைக்கும் அளித்தான்.

இயமன் ஆண்ட தென்னாடு கடல்வாய்ப் பட்டது. இது பற்றியே இயமனுடைய உலகம் தெற்கில் உள்ளது என்னும் ஐதீகம் இன்று வரையும் உள்ளது. கூற்றுவனாகிய யமனும், இவனும் ஒருவனாகப் பிற்காலத்தில் கருதப்பட்ட மையாற் போலும், இறந்தவர்கள் எமன் நாட்டில் (தெற்கில்) வாழ்கின்றார்கள் என்று கருதப்பட்டு அவர் ‘தென்புலத்தார்’ என வழங்கப்படலாயினர். வடக்கே இருந்த நாடு குமரிப் பெண்ணால் ஆளப்பட்டமையின் ‘குமரி நாடு’ என்று வழங்கப்பட்டது என்று டி. சவரிராயன் கூறுகிறார். (Tamil Antiquary. PP. 62-63)

லெமூரியாவில் மூழ்கி இறந்தவர்களே ‘தென்புலத்தார்’எனப்பட்டனர் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார். (The Primary Classical Language, PP. 37-38)

நோவா தொன்மத்தில் வரும் ‘யெம்’மும் டி.சவரிராயன் கூறும் தொன் மத்தில் வரும் இயமனும் ஒருவனே எனக் கொள்ள இடமுண்டு.

இன்றைய மனிதயினம் நோவாவின் புதல்வர்களா கிய ‘ஷெம்’, ‘ஹாம்’ என்பவர் களுடைய வழிவந்தவர் களே. அதனாலேயே மனித யின வரலாற்றறிஞர்கள் மனித யினத்தை இரண்டாகப் பிரித்து ‘ஷெம்’ வழி வந்த வர்களை ‘செமித்தியர்’ (Semite) என்றும் ‘ஹாம்’ வழி வந்தவர்களை ‘ஹெமித்தியர்’ (Hamite) என்றும் அழைக்கின்றனர்.

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கப் பேழையில் ஏறிய போது நோவா தம் புதல் வர்களிடம் இறைவன் தம் மைக் காப்பாற்றியதற்கு நன்றி செலுத்தும் வகை யில், ‘வெள்ளம் வற்றிக் கரையேறும் வரை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டார். ஆனால் காமன் (ஹாம்) அவர் கட்டளையை மீறித் தன் மனைவியோடு உடலுறவு கொண்டான். அதனால் கோபம் கொண்ட நோவா, காமனும் அவன் சந்ததியினரும் கருநிறம் பெறுவார்கள் என்றும், அவர்கள் வெண்ணிறம் உடைய சாமனின் (ஷெம்) சந்ததியினருக்கு அடிமைகளாக இருப்பர் என்றும் சபித்தார்.

இந்தியத் தொன்மத்தில் காமன் (மன்மதன்) கருநிறம் உடையவனாகச் சித்திரிக்கப்படுகிறான். அவன் காமத்தின் தெய்வமாகவும் கருதப்படுகிறான். இது நோவா தொன்மத்தோடு தொடர்புடையதாகவே தெரிகிறது.

திருத்தக்க தேவர் தனது சீவக சிந்தாமணியில் வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் உடைய இரு காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை வர்ணிக்கும்போது அவை ‘காமனும் சாமனும்’ போல இருந்ததாகக் கூறுகிறார். இது நோவாவின் தொன்மம் தமிழில் வழக்காற்றில் இருந்ததைக் காட்டுகிறது.

இத்தொன்ம ஒற்றுமைகள் வியப்பை அளிப்ப தோடு, நோவாவின் தொன்மம் உண்மை என்பதையும், அது நிகழ்ந்த இடம் குமரிக் கண்டம் என்பதையும் நிரூபிக்கின்றன.

இதுவரை காட்டிய சான்றுகளில் இருந்து குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனித யினத்தின் சந்ததியினரே இன்றைய தமிழினத் தவர் என்பதும் முதல் மனிதயினம் பேசிய மொழியின் பிற்கால வடிவமே தமிழ் என்பதும் உறுதியாகிறது.

- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

முந்தைய அத்தியாயம்: >முத்துக் குளிக்க வாரீகளா 10: மீன் தோணி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 mins ago

சினிமா

9 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

22 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்