கலாம் நெஞ்சமெலாம் 2: எனக்குள் விதைத்த கனவு

By மு.சிவலிங்கம்

அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறுவதற்கான வழிமுறைகளைத் தெளிவாக விவரிக்கும் 'விஷன் 2020' திட்டத்தைப் பள்ளிக் குழந்தைகளிடம் விளக்கினால்தான் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்பது கலாமின் அசாத்திய நம்பிக்கை.

சாதாரண பேச்சுவழக்கில் சொல்வது என்றால், 'இது என்ன சிறுபிள்ளைத் தனமானப் பேச்சு' என்றுதான் எல்லோருக்கும் தோன்றும். அவரது அணியினர் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அவர் கூறிய பதில் நடைமுறை சார்ந்ததாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருந்தது. 2000-மாவது ஆண்டில் இந்தத் திட்ட ஆவணம் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.

'இனி வரப்போகும் நாட்களில் எத் தனையோ அரசுகள் மாறலாம், ஆட்சித் தலைவர்களின் முன்னுரிமைகள் மாறலாம். ஆனால் இப்போது பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்தான் இன்னும் 20 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், பொறியியல், அறிவியல், அரசியல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற பல்வேறு களங்களில் செயல்படப் போகிறார்கள். அவர்கள் மூலமாக 'விஷன்-2020' திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முடியும்' என கலாம் பதில் அளித்தார்.

குழந்தைகளைக் கனவு காணச் சொன்ன அப்துல் கலாம், சராசரித் தனமான இலக்குகள் குறித்து அல்லா மல், மிக உயர்ந்த லட்சியங்கள் குறித்து கனவு காணச் சொன்னார். இது வறட்டு உபதேசம் அல்ல. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், 'ராணுவ விமானம் ஓட்ட வேண்டும்' என, தான் கண்ட கனவைவிட மிக உயர்ந்த நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்ட வாழ்க்கை அனுபவத்தில் இருந்து அவர் சொன்ன ஆலோசனை இது.

பள்ளிக் குழந்தை களுக்கு மட்டு மல்லாமல்; சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்டுள்ள எத்தனையோ பேருக்கும் உன்னத இலக்குகளை வகுத்துக்கொடுத்த இந்தக் கனவு நாயகன், எனக்குள்ளும் ஒரு கனவை விதைத்தார்.

ஆங்கிலத்தில் வெளிவந்த அவரது வாழ்க்கை வரலாறு 'Wings of Fire' என்ற நூலுக்கு 'அக்னிச் சிறகுகள்' என தமிழ் வடிவம் கொடுத்ததாலும், மொழிபெயர்ப்புக்காக அவரது மேலும் மூன்று ஆங்கில நூல்களை (Ignited Mind, Envisioning an Empowered Nation, Guiding Souls) மீண்டும் மீண்டும் ஆழமாக வாசித்ததாலும் அவரது சிந்தனைகள் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. நாளுக்கு நாள் இந்தத் தாக்கம் வலு வடைந்து வந்ததால், ஒரு செயல்திட்டம் வெகு இயல்பாக என்னுள் சூல் கொண்டது. ஒருவேளை 'அக்னிச் சிறகுகள்' என்கிற அப்துல் கலாமின் நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போயிருந்தால், என்னுள் இந்த மாற்றம் கிளை விரித்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட '1998 பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனை'யை அடுத்து அப்துல் கலாம் சாதனைகளை விவரிக்கும் ஒரு செய்திக் கட்டுரை 'இந்தியா டுடே' இதழில் வெளிவந்தது. அதில் இடம் பெற்றிருந்த, அவர் வீணை இசைக்கும் அரைப் பக்கப் புகைப்படத்தில் லயித் துப் போனேன். தமிழகத் தைச் சேர்ந்தவர், அதிலும் குறிப்பாக நான் பிறந்த அதே பிரிக்கப்படாத சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது கூடுதல் பற்று ஏற்பட்டது. அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும். அவரது வாழ்க்கை வர லாற்றை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடிக்கடி இது பற்றி சிந்திக்கும் போதெல்லாம், 'சென்னை யில் இருந்து சொந்த ஊர் சென்று வரும் செலவைச் சமாளிக்கவே படாதபாடு படும்போது டெல்லி போவ தெல்லாம் நம்மால் முடியுமா?' என்று தோன்றும். ஆனாலும் இந்தப் பேராசை அவ்வப்போது தலைதூக்கும். கலாம் பற்றி வரும் செய்திகளை ஆர்வத்துடன் படித்து என் இயலாமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கிக் கொள்வேன்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு ஆங்கில இதழில் கலாமின் சுயசரிதை 'wings of Fire' என்ற ஆங்கில நூலாக வெளிவரப்போவதாக துணுக்குச் செய்தி வந்தது. ஆர்வக் கோளாறால் இந்தத் தகவலை சரிவரப் படிக்காமல், இந்த நூல் வெளிவந்துவிட்டதாக 'கண்ணதாசன் பதிப்பகம்' நிறுவனத் தினரிடம் தெரிவித்தேன். அந்த சமயத்தில் 4 ஆங்கிலப் புத்தகங்களை இந்த பதிப்பகத்துக்காக நான் மொழிபெயர்த்திருந்ததால், ''Wings of Fire' நூலின் தமிழ் வடிவத்தை வெளியிட நீங்கள் முயற்சி செய்யலாமே'' என காந்தி கண்ணதாசனிடம் சொன் னேன். பின்னர் அவர் என்னிடம் அந்தப் புத்தகம் இனிமேல்தான் வெளி வரவுள்ளது என்ற சரியான தகவலைக் கூறினார்.

'Wings of Fire' வெளிவந்த உட னேயே, செயல் வேகம் கொண்டவரான அவர், இதன் தமிழ் பதிப்புரிமையைப் பெற்றுவிட்டார். மொழிபெயர்ப்பு வேலையை என்னிடம் ஒப்படைத் தார்.

புத்தகத்தை நான் பெற்றுக்கொண்ட அந்த மாலை நேரத்தில், ஏதோ ஒரு மிகப் பெரிய விருதை, கவுரவத்தைப் பெற்ற பெருமிதம் என்னைப் பற்றிக்கொண்டது. மனக் குதிரை அதிவேகமாகப் பறக்க, கால்நடையாக வீடு வந்து சேர்ந்தேன். இரவு வெகுநேரம்வரை வாசித்தேன். அடுத்தடுத்த நாட்களிலும் என் வாசிப்பு தொடர்ந்தது. பல தடவை கண்கள் ஈரமாயின. தனது வாழ்க்கைக் கதையை கலாம் என்னிடம் நேரில் சொல்வது போன்று உணர்தலா அல்லது கற்பனையா என பகுத்துப் பார்க்கத் தெரியாத ஒரு நிலை என்னை ஆட்கொண்டது. வாசிக்கும்போதே, இந்த அசாதாரண மனிதர் தன் வாழ்க்கையை தான் விரும்பியபடி கட்டமைத்துக் கொண்ட சூட்சுமங்கள் குறித்து எத்தனையோ கேள்விகள் எனக்குள் விழுதுவிட்டன.

'இந்தப் புத்தகம் (Wings of Fire) வாயிலாக கலாமின் தோழமையை நீங்கள் அனுபவிக்க முடியும்'என மூல நூலை எழுதிய அருண் திவாரி குறிப் பிட்டுள்ளது என்னைப் பொறுத்தவரை யில் நிஜமானது. ஆனால் மொழி பெயர்ப்புக்காக நிரந்தர வருமானம் வரும் எனக்கு, 'மிகவும் பிடித்த ஒரு வேலையைத் துறப்பதா… வேண்டாமா?' என்ற குழப்பத்தில் சிக்கினேன்.

- சிறகு விரியும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: mushivalingam@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்