மீனும் செடியும் ஒன்றாக வளர்க்கலாம்!

By முகமது ஹுசைன்

இயற்கையை விட்டு விலக விலக நம்மில் பலருக்கும் அதன் மீது பிரியம் அதிகரித்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு அதிகரித்துவரும் விவசாய ஆசை. நெருக்கடி மிகுந்த அடுக்குமாடி வீடுகளிலும் தனி வீடுகளிலும் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப இடத்தில் மண் தொட்டிகளில் செடி வளர்க்கிறார்கள்.சிலர் மொட்டை மாடியில் தோட்டம் போட்டுத் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

அதைப் போலவே சிலருக்கு மீன் வளர்ப்பில் ஆசை இருக்கிறது. அடுக்குமாடி வீடுகளில்கூட வெறுமனே சுவரைப் பார்த்துக்கொண்டிருப்பதைவிட இந்த மீன் தொட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தால் மனதுக்கு ஓர் ஆறுதல் கிடைக்கிறது. மனத்துக்கு உகந்ததாக இருப்பதால் சிலர் கிடைக்கும் இடத்தில் கண்ணாடித் தொட்டிகளில் மீனும் வளர்க்கிறார்கள். இந்த இரண்டையும் சேர்த்துச் செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையின் விளைவே அக்வாபோனிக்ஸ் (Aquaponics).

அக்வாபோனிக்ஸ் மிகவும் எளிமையான முறைதான். நம் வீட்டினுள்ளேயே ஒரே அமைப்பில் மீன் வளர்ப்பையும் செடி வளர்ப்பையும் ஒருங்கிணைக்க இது உதவுகிறது. செடி வளர்க்கும் ஆசையையும் மீன் வளர்க்கும் ஆசையையும் ஒருசேரக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பு. இதில் மீன் மட்டுமல்ல; நத்தைகள், இறால்கள் போன்றவற்றையும் வளர்க்கலாம்.

எப்படி இருக்கும் அக்வாபோனிக்ஸ்?

இந்த முறைப்படி, மீன்கள் வளரும் தொட்டியும் (Aquaculture) நீர்த் தாவரங்கள் வளரும் தட்டுகளும் (Hydroponics) ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும். இந்த அமைப்பில் நீரானது இடைவெளியின்றி சுழற்சி முறையில் மீன் தொட்டியின் மேல் இருக்கும் செடி வளரும் தட்டுக்குச் சென்று, பின் அங்கு இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு பின் மீண்டும் மீன் தொட்டிக்கு வருகிறது.

மீனின் எஞ்சிய உணவும் மீனின் கழிவுகளிலிருந்து உண்டாகும் அளவுக்கு அதிகமான புரதச் சத்துக்களால் விஷமாகும் நீருமே மீன் வளர்ப்பின் முக்கியப் பிரச்சினை. நீர்த் தாவர வளர்ப்பின் பிரச்சினை வேளாவேளைக்கு உரமிட வேண்டும் என்பது. இந்த இரண்டு முறையையும் இணைப்பதன் மூலம், மீனின் கழிவு செடிக்கு உரமாகிறது, சுத்தமான நீரும் மீனுக்குக் கிடைக்கிறது. நீரில் உள்ள நுண்ணுயிரிகள், மீனின் கழிவை அம்மோனியாவாகவும், பின் அந்த அம்மோனியாவை நைட்ரேட்டாகவும் மாற்றுகின்றன. நைட்ரேட்ஸ் என்பது நைட்ரஜனின் வடிவம் ஆகும். அதைத் தாவரங்கள் உட்கொண்டு, தமது வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துகிறது. இவ்வாறாக அக்வாபோனிக்ஸ் முறையில் ஒன்றின் குறை மற்றதற்கு நன்மையாக மாறுகிறது.

என்னென்ன செடி வளர்க்கலாம்?

மண்ணில் செடி வளர்ப்பதற்குத் தேவைப்படும் நீரில் பத்தில் ஒரு பங்கு இதற்குப் போதும். அது மட்டுமின்றி இங்கே களையெடுப்பும் தேவையில்லை, உரமிட வேண்டிய தேவையுமில்லை. இது தவிரச் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் இது வெகுவாகத் தடுக்கிறது. எல்லாவிதமான தாவரங்களையும் வளர்க்க முடிந்தாலும், முட்டைக்கோஸ், கீரை, தக்காளி, மணி மிளகு, ஓக்ரா போன்றவை இந்த முறையில் வேகமாக வளரும். நன்னீர் மீன் வகைகள், கறி மீன்கள், இறால்கள் போன்றவற்றை இந்தத் தொட்டிகளில் வளர்ப்பது தாவர வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

நிறுவும் முறை

அக்வாபோனிக்ஸ் அமைப்பை நம் வீட்டினுள் அமைப்பது எளிது. நம் தேவைக்கு ஏற்ப, ரசனைக்கு ஏற்ப, முக்கியமாக இருக்கும் இடத்துக்கு ஏற்ப, கிடைக்கும் வெளிச்சத்துக்கு ஏற்ப குறைந்த பொருட்செலவில் நாம் இந்த அமைப்பை நிறுவலாம்.

இந்த அமைப்பில் நீரானது எப்போதும் சுழற்சி முறையில் ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். மிக முக்கியமாக, மீனையும் செடியையும் இதில் போடுவதற்கு முன், வெறும் நீரை 24 முதல் 48 மணி நேரம் சுழன்று கொண்டு இருக்கச் செய்ய வேண்டும். மீன் தொட்டியின் அடிப்பாகத்தைக் கற்கள் அல்லது களிமண் கூழாங்கற்கள் கொண்டு நிரப்ப வேண்டும். செடிகளை மிதக்கும் நுரை தட்டுகளில் (Foam Tray) வளர்க்கலாம். சிறு செடிகளுக்கு ஊட்டச்சத்து இழை உத்தியையும் பயன்படுத்தலாம். நீரின் சுழற்சி திருப்திகரமாக இருப்பதை உறுதிப்படுத்திய பின் வளர்க்க விரும்பும் மீனையும் செடியையும் இந்த அமைப்பினுள் அறிமுகப்படுத்தலாம்.

இதை நம் வீட்டில் அமைத்துத் தருவதற்கு நிறைய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. கொஞ்சம் பொறுமையும் ஆர்வமும் இருந்தால் இதை நாமே சுயமாகவும் அமைக்க முடியும். இந்த கரோனா காலத்தில், நமது நேரத்தை ஆக்கப்பூர்வமாகச் செலவிட அது உதவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

வலைஞர் பக்கம்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்