வைரஸ் படங்கள் 8: தி ஹேப்பனிங்- பரவும் தற்கொலைகள் 

By செய்திப்பிரிவு

வைரஸ் தாக்குதல்களை வைத்து வரும் படங்களில் இருவகையுண்டு. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்கள் மற்றும் கற்பனை கலந்த படங்கள். இதில் கற்பனை கலந்த படங்கள் சுவாரசியமாகவும் சில சமயம் நம்மையும் அறியாமல் மனதளவில் ஒரு பயத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். கற்பனைக் கதைகளை இயக்கும் இயக்குநர்கள் தங்களுக்கென தனி பாணியை வைத்திருப்பது வழக்கம்.

அப்படி மிகவும் வித்தியாசமான, அதே சமயம் சுவாரசியமான பாணியைக் கொண்டவர் இயக்குநர் எம்.நைட் ஷியாமளன். பாண்டிச்சேரியில் பிறந்த எம்.நைட் ஷியாமளன் ஹாலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவர். அவரது படைப்புகளான ‘சிக்ஸ்த் சென்ஸ்’, ‘அன்பிரேக்கபிள்’, ‘தி வில்லேஜ்’, ‘தி விசிட்’ போன்ற திரைப்படங்கள் ஹாலிவுட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைத் தன் திரைக்கதைகளில் லாவகமாக விவரிக்கும் ஷியாமளன் வைரஸ் பற்றியும் ஒரு படம் இயக்கினார். அதுதான் ‘தி ஹேப்பனிங்’. ஒரு வைரஸ் தொற்று நோயை மட்டும்தான் கொண்டு வரவேண்டுமா என்ன? வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் மூளையில் உள்ள நியூரான்கள் தறிகெட்டு மாறி உடனே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மேலோங்கினால் என்னவாகும்? இந்த வைரஸ் காற்றின் வாயிலாக ஊர் முழுக்கப் பரவினால் என்ன கதியாகும் என்ற விபரீதமான கேள்விகளால் உருவானதே 2008-ம் ஆண்டு வெளிவந்த ‘தி ஹேப்பனிங்’ திரைப்படம்.

பரவும் தற்கொலைகள்
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் மர்ம விஷப்பொருள் காற்றில் பரவ ஆரம்பிக்கும். முதலில் அதன் தாக்கம் நியூயார்க் நகரத்தில் உள்ள பூங்காவில் தெரியும். விஷத்தன்மை கொண்ட காற்றைச் சுவாசித்தவுடன் மூளையில் உள்ள நியூரோ ட்ரானாஸ்மீட்டர்களை பாதித்து உடனே தற்கொலை செய்து கொள்வார்கள். பூங்காவில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்வார்கள். வைரஸா, பயோ ஆயுதமா, தீவிரவாதிகளின் சதியா அல்லது இயற்கையான நிகழ்வா என்ற குழப்பம் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும்.

படத்தின் நாயகனான எலியாட், நியூயார்க் நகரத்தில் ஒரு பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிவார். நியூயார்க்கில் நிலைமை சரியில்லை என்று பிலடெல்பியா மாகாணத்துக்குத் தன் மனைவி ஜூயி, மற்றும் எலியட்டுடன் கணக்கு ஆசிரியராகப் பணிபுரியும் ஜூலியனுடன் ரயிலில் கிளம்புவார். ஜூலியனுடன் அவரது சிறு வயது மகள் ஜெஸ் வருவாள். ஜூலியனின் மனைவிக்கு சில வேலை பாக்கியிருப்பதால் அவர் அடுத்த ரயிலில் வருவதாகக் கூறியிருப்பார்.

பிலடெல்பியா சென்று சேரும் முன்பே ரயில் சேவைகள் நின்றுவிடும். சிறிய கிராமத்தில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்படும் மக்கள், வடகிழக்கு மாகாணங்கள் முழுதும் இந்த விபரீதம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவார்கள். ஜூலியன் தன் மகளை எலியாட் மற்றும் ஜெஸ் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு தன் மனைவியைத் தேடிக் கிளம்பிவிடுவார். தன் மனைவி, ஜெஸ் மற்றும் சிலரோடு பாதுகாப்பான இடத்தைத் தேடி அலைவார் எலியாட். அவர்கள் தப்பினார்களா? ஜூலியன் தன் மனைவியை ஆபத்தில் இருந்து மீட்டாரா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லி படத்தை தன் பாணியில் அட்டகாசமாக முடித்திருப்பார் இயக்குநர் எம்.நைட் ஷியாமளன்.

இத்திரைப்படத்தில் சில காட்சிகளில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை மனிதன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான் என்பது போன்ற சில வசனங்களால் ஷியாமளன் மனிதத்துக்கு தொண்டாற்றும் அறிவியலைக் கொச்சைப்படுத்துகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இத்திரைப்படத்தில், காற்றில் பரவும் வஸ்து என்ன என்பதைச் சரிவர ஷியாமளன் விளக்கவில்லை என்றும் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் ஷியாமளன் அமைதி காத்தார். வசூல்ரீதியாக படம் பெரும் வெற்றியடைந்தது.

சில ஆண்டுகள் கழித்து ‘தி ஹேப்பனிங்’ திரைப்படம் உலக சினிமா ரசிகர்களிடையே கொண்டாடப்படக் கூடிய படமாக மாறிப்போனது. இத்திரைப்படத்தில் நடக்கும் மர்ம விஷயங்களைப் பற்றி பலர் விளக்கி காணொலிகளை வெளியிட்டனர் (யூடியூப்பில் தேடிப்பாருங்கள்).

இயற்கையின் முன் நாம் எல்லாம் அற்பமான சிறு உயிரினங்களே. இயற்கையின் அரவணைப்பில் அதனை அழித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் நாம், அதே இயற்கையின் சீற்றம் சிறிது வெளிப்பட்டாலும் நம் கதி என்னவாகும் என்பதை உணர்ந்தால். உலகின் நிலை மாறும். அதைப் பூடகமாக உணர்த்தும் படம் தான் ‘தி ஹேப்பனிங்’.

-க.விக்னேஷ்வரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இணைப்பிதழ்கள்

23 mins ago

இணைப்பிதழ்கள்

34 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்