தப்பிய ட்ரம்ப்.. சிக்கலில் ஜனநாயக கட்சி

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சிக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. முதலில் அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கு நடந்த அயோவா கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மிகப் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது அக்கட்சி. யார் முதல் இடத்தைப் பிடித்தது என்பதில் ஏகப்பட்ட பிரச்சினை. அடுத்ததாக, அமெரிக்காவின் செனட் சபை, அதிபர் ட்ரம்ப் குற்றமற்றவர் என வாக்களித்துவிட்டது. அவர் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை எனக் கூறிவிட்டது. இதன் காரணமாக அவர் அதிபராகத் தொடர்கிறார். எதிர்க்கட்சிகளை தனது வழக்கமான பாணியில் தாக்குதல் நடத்தி ஒரு வழி பண்ணிவிடுவார். செனட் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இருந்தனர் ஜனநாயகக் கட்சியினர். ஆனால், செனட்டர் மிட் ரோம்னி தவிர, அனைவரும் ட்ரம்ப் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

ட்ரம்பை நீக்க 67 வாக்குகள் வேண்டும். அரசியல் அனுபவம் இல்லாதவர்கள்தான், 20 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்து அவரை பதவி நீக்கம் செய்ய துணை செய்வார்கள் என நினைத்திருப்பார்கள். அதைவிட, அயோவாவில் நடந்த சம்பவத்தால் ஜனநாயக கட்சியினர் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் இருக்கிறார்கள்.வாக்குகள்எண்ணிக்கையைக் கணக்கிட பயன்படுத்தப்பட்ட புதிய ஆப், சரியாக வேலைசெய்யவில்லை. அதுதான் குழப்பத்துக்கு காரணம் என்றும் புதிய ஆப்-ஐ பயன்படுத்தி சோதனை செய்திருக்கக் கூடாது என்றும் பலர் கூறி வருகிறார்கள். அதிபர் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் அயோவா தீர்மானத்தை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஜூலையில் மில்வாக்கியில் நடக்கும் கட்சி மாநாட்டில் அதிபர் வேட்பாளர் இறுதி செய்யப்படுவார். அதுவரை வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடு பிடிக்கும்.

நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென், 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது ஜனநாயகக் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிடென் முதல் இடத்தையோ அல்லது 2-வது இடத்தையோ பிடித்துவிடுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். இன்னமும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், முதலிடத்தில் சவுத் பெண்ட் நகரின் முன்னாள் மேயர் பீட் குட்டிகியக்கும் இரண்டாவது இடத்தை செனட்டர் பெர்னி சாண்டர்ஸும் பிடித்துள்ளதாகத் தெரிகிறது. மூன்றாவது இடத்தில் செனட்டர் எலிஸபெத் வாரன் பிடித்திருக்கிறார். நியூஹாம்ப்ஷையர், நெவேடா, சவுத் கரோலினா, டெக்சாஸ், கலிபோர்னியாவில் நடக்கும் வேட்பாளர் தேர்வு கூட்டங்களில் முன்னிலை பெற்றால்தான் பிடென் அதிபர் வேட்பாளராக ஆக முடியும்.

நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதற்குள் தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு இணையான வலுவானவரை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியினர் தேர்வு செய்தாக வேண்டும். இரு கட்சியினரும் சமமான பலத்தில் இருக்கும் மாகாணங்களில் ஆதரவை அதிகரிக்கும் வகையில் அந்த வேட்பாளர் இருக்க வேண்டும். முன்னணியில் இருக்கும் வேட்பாளர்களான பெர்னி சாண்டர்ஸும் செனட்டர் எலிஸபெத் வாரனும் இடதுசாரி சிந்தனையாளர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமதர்மத்தைப் போதிக்கும் சோசலிஸத்தை விமர்சித்து வரும்ட்ரம்ப், தனது தாக்குதலை தீவிரப்படுத்துவார். சோசலிஸம்தான் நாட்டைக் கெடுத்துவிட்டது. சுதந்திரம் நம் உள்ளங்களை ஒன்றுபடுத்தி விட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது என கடந்த 4-ம் தேதிதனது உரையில் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

பதவி நீக்க நடவடிக்கையை சந்திக்கும் மூன்றாவது அதிபர் ட்ரம்ப். இவரைப் போலவே கடந்த 1868-ம் ஆண்டில் ஆண்ட்ரூ ஜான்சனும் 1998-ல் பில் கிளிண்டனும் பிரதிநிதிகள் சபையால் நிராகரிக்கப்பட்டவர்கள். பின்னர் செனட் சபையால் குற்றமற்றவர்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலரும், பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு ட்ரம்ப் எந்த தப்பும் செய்துவிடவில்லை என்றுதான் நினைக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியினர் பதவி நீக்க விசாரணை ஏமாற்றுவேலை என விமர்சனம் செய்தால், ஜனநாயக நடவடிக்கையை கேலி செய்வதா என டிரம்ப் தாக்குதல் நடத்துகிறார். எது எப்படியோ, இந்த பதவி நீக்க நடவடிக்கையானது அதிபர் ட்ரம்ப் எப்படி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என்பதையும் ஆட்சி நிர்வாகத்தில் எப்படி தலையிடுகிறார் என்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டதாகவும் இது நவம்பர் 3-ம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் ஜனநாயகக் கட்சியினர் நம்புகின்றனர்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்
அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்,
தமிழில்: எஸ்.ரவீந்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 min ago

சினிமா

6 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்