புத்தகத் திருவிழா 2020; பியூர் சினிமாவின் முக்கிய நூல்: நடிப்பு 100 பயிற்சிகள் 

By க.நாகப்பன்

சென்னை புத்தகக் காட்சியில் சினிமா நூல்களுக்கென்று தனியாக இருக்கும் ஒரே அரங்கம் எது என்று கேட்டால் பியூர் சினிமா அரங்கைச் சொல்லலாம்.

சினிமா தயாரிக்கும் கலை, ஷாட் பை ஷாட், ஸ்டோரி போர்ட் A-Z,ஃபிலிம் மேக்கிங் A-Z,திரைக்கதை A-Z, ஜீரோ பட்ஜெட் ஃபிலிம் மேக்கிங், ஆர்ட்டிகிள் 15, திரைக்கதை வழிகாட்டு, 101 திரைக்கதை எழுதும் கலை, படத்தொகுப்பு, லென்ஸ், மாண்டேஜ் என்று தொழில் நுட்பம் சார்ந்தும் ரசனை சார்ந்தும் நிறைய நூல்கள் பேசாமொழி பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன. தமிழ் ஸ்டுடியோ அருண் முன்னெடுத்து வரும் இம்முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

பேசாமொழி பதிப்பகத்தில் நடிப்பு குறித்து ஜெயராவ் சேவூரியின் இந்திய நடிப்பு இலக்கணம், நடிப்பு 100 பயிற்சிகள் என்ற இரு நூல்கள் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு 100 பயிற்சிகள்:

பிரேசில் நாட்டின் மிக முக்கிய நாடகவியலாளராகத் திகழ்ந்த அகஸ்தா போல் Theatre of the Oppressed எனும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கை நிறுவி அதை ஒரு புத்தகமாகவும் எழுதினார். அந்தப் புத்தகம் நடிப்பு உலகில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது.

அகஸ்தா போல் தன்னுடைய நடிகர்களுக்கு பல நடிப்பு யுக்திகளைப் பயிற்சி அளித்ததோடு ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாட்டைப் பயன்படுத்தி நடிப்புப் பயிற்சிகளை உருவாக்கியுள்ளார். நடிப்பைக் கற்றுக்கொள்கிறவர்களுக்கு ஸ்தானிஸ்லாவ்ஸ்கிதான் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறார் என்ற நிலையில், அவரது கோட்பாட்டின் அடிப்படையில் பயிற்சிகளை உருவாக்கியிருப்பது நடிகர்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும்.

நடிகனின் குரல், மனம், கூர்ந்து கவனிக்கும் திறன், உடல் நெகிழ்வுத் தன்மையை எப்படித் தயார் செய்வது, நடிகர்கள் எப்படி சுயமாகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும், ஒரு நடிகன் கதாபாத்திரமாக மாறுவதற்கு என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நடிப்பை விளையாட்டுகளின் வழியே கற்றுக்கொள்வதற்காக 100 எளிய பயிற்சிகளை அகஸ்தா போல் உருவாக்கி The Games for actors and Non-actors என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். அதில் உள்ள சில நடிப்புப் பயிற்சிகளை தமிழில் மொழிபெயர்த்தும், நடிப்பு சார்ந்து இணையத்தில் கிடைக்கிற பயிற்சிகள், கட்டுரைகளை உள்ளடக்கி தமிழில் தீஷா எழுதியுள்ள புத்தகமே 'நடிப்பு 100 பயிற்சிகள்'.

நடிகர்களாக வர விரும்புபவர்கள் தனியாகவும், ஒரு குழுவாகவும் இணைந்து ஒரு விளையாட்டுப் போல நடிப்பைக் கற்றுக்கொள்ள இந்நூல் உதவி செய்கிறது. நடிகர்களாக வர விரும்புபவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆற்றல் வாய்ந்த புத்தகம் என்றால் அது மிகையில்லை.

நூலில் இருந்து சில துளிகள்...

* நடிகர்களாக வர விரும்புபவர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கிற மனிதர்களின் குணநலன்களை, அங்க அசைவுகளை, நடை, உடை பாவனைகளைக் கவனிக்க வேண்டும். அவர்களைப் போலவே செய்து பார்க்க வேண்டும். அதாவது, ஒரு மனிதர் எப்படி நடக்கிறார்? என்பதைக் கவனித்து அவரைப் போலவே நடந்து பழக வேண்டும். ஒரு மனிதர் எப்படிச் சிரிக்கிறார் என்பதைப் பார்த்து அவரைப் போலவே சிரித்துப் பார்க்க வேண்டும்.

இப்பயிற்சியின் நோக்கம் ஒருவரைப் பார்த்து அவரைப் போலவே நடிப்பைப் பின்பற்றுதல் மட்டுமே என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். ஆனால், ஒவ்வொருவரின் அசைவுக்கும் இயக்கத்துக்கும் இயக்கவியலின் உள்ளிருந்து ஒரு புரியதலை அடைய வேண்டும். அவர்களாக நடக்கும்போது அவர்களின் பாவனையை மிக நெருங்கி அனுமானிக்க முடியும்.

* முதியவரைப் போல நடிப்பதைக் காட்டிலும் உங்களை நீங்களே முதியவராக உணர வேண்டும். கூன் விழுந்து மெதுவாக நடந்தால் மட்டும், முதியவர் ஆகிவிட முடியாது. அடுத்து, மிக முக்கியமான விஷயம் ஒரு முதியவர் தன் பாதத்தை தரையில் வைக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார். தனது முதல் சில அடிகளை மிகவும் கவனமாக எடுத்துவைப்பார். ஓய்விலிருந்த மூட்டுகளுக்கு முதல் சில அடிகளை எடுத்துவைக்கும்போது அதிக உணர்ச்சியை வெளிப்படுத்தும். அதாவது வலியைக் கொடுக்கும். எனவே, மெதுவாக நடந்து, அந்த மூட்டுக்கு ஒரு பயிற்சியைக் கொடுத்து, பின்பு படிப்படியாக கொஞ்சம் வேகமாக நடக்கத் தொடங்குவார்கள்.

இதுபோன்ற எண்ணற்ற பயனுள்ள குறிப்புகள் நூலில் உள்ளன. பெரும் உழைப்பைக் கொடுத்து தமிழில் தந்த தீஷாவுக்கு வாழ்த்துகள்.

நடிப்பைக் கற்றுக்கொள்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே சில கடினமான பயிற்சிகளைக் கொடுத்தால், அவர்கள் உள்வாங்கிக்கொள்ள சிரமப்படுவார்கள். எனவே, அவர்களை இலகுவான நடிப்புப் பயிற்சிக்குள் கொண்டுவந்து பின்பு தீவிரமான பயிற்சிகளுக்குப் படிப்படியாகக் கொண்டு செல்கிறது. நடிகர்களுக்கும் நடிகராக நினைப்பவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கையேடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நடிப்பு 100 பயிற்சிகள்

தமிழில்: தீஷா

விலை: ரூ.255

தொடர்புக்கு: பேசாமொழி பதிப்பகம்,
7, சிவன் கோயில் தெரு, (கமலா திரையரங்கம் அருகில்),
வடபழனி, சென்னை- 600 026,

பேச: 9840644916

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்