நம்புநாயகி கேட்டரிங் சர்வீஸ்: மதுரையில் மணம் வீசும் திருநங்கைகளின் கைப்பக்குவம்

By செய்திப்பிரிவு

மதுரை

மதுரையின் புறநகர்ப் பகுதியில் உள்ளது உலகனேரி. அளவில் சிறிய அந்த ஊரில் யாரிடம் கேட்டாலும் நம்புநாயகி கேட்டரிங் சர்வீஸ் நிறுவனர் ஜெயசித்ராவின் வீட்டை அடையாளம் காட்டிவிடுவார்கள். திருநங்கையான ஜெயசித்ராவுக்கும் அவருடன் பணியாற்றும் 15 திருநங்கைகளுக்கும் உலகனேரியில் அப்படியொரு மரியாதை. ஜெயா அம்மா என்றே அவரை அன்புடன் ஊர்க்காரர்கள் அழைக்கின்றனர். காரணம் கை மணக்கவைக்கும் மனம் மகிழவைக்கும் அவர்களின் சமையல். கடந்த 7 ஆண்டுகளாகவே ஜெயசித்ரா இந்த கேட்டரிங் உணவகத்தை நடத்தி வருகிறார்.

இது குறித்து ஜெயசித்ரா கூறுகையில், "இங்கு ஜெயா அம்மா என்றால் எல்லோருமே சொல்லிவிடுவார்கள். எங்களுக்கு பெரும்பாலும் ஏழை மக்களிடம் இருந்துதான் ஆர்டர்கள் வருகின்றன. நாங்கள் கட்டுப்படியாகும் விலையில் கொடுப்பதுதான் அதற்குக் காரணம். அதுதவிர மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எனது சமையலின் கைப்பக்குவம் பரிச்சயம். அவ்வப்போது விழாக்களுக்கு அவர்களின் ஆர்டர்கள் வரும்" என்றார்.

மதுரையில் தனது ஆரம்பகால அனுபவத்தைப் பற்றி பேசிய ஜெயசித்ரா, "ஆரம்ப நாட்களில் ஏதேதோ வேலை செய்து பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தேன். ஒரு தொழிலதிபரின் வீட்டில் சமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்தான் சமையல் வேலை லாபகரமானது. அதனையே தொழிலாக மாற்றிக் கொள்ளுமாறு எனக்கு வழிகாட்டினார். எனக்குக் கிடைத்த முதல் ஆர்டரே ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்துக்கானது. அவர்கள் அன்று அந்த ருசியைப் பற்றி எல்லோரிடமும் பேச எனக்குப் பெயர் கிடைத்தது. அதன்பின் வரத்தொடங்கிய ஆர்டர் இன்றுவரை ஓயவில்லை" என அகம் மகிழ்ந்து கூறுகிறார்.

என்னதான் ஸ்பெஷல்?

ஜெயசித்ராவின் கைப்பக்குவத்தில் உருவாகும் ஸ்பெஷல் உணவு வகைகளில் முதன்மை இடம் சிக்கன் பிரியாணி. இதுதவிர மட்டன் கோலா உருண்டை, மீன் குழம்பு, நண்டு கிரேவியும் ஜெயா அம்மாவின் கடையில் சிறப்பு உணவுகள்.

திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள் விழாக்களில் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கும் ஜெயசித்ராவின் உணவகத்திலிருந்து உணவு செல்கிறது.

அந்தப் பகுதிவாசி பாமா கூறும்போது எங்கள் பகுதியில் எந்த ஒரு சுபநிகழ்ச்சி என்றாலும் முதல் அழைப்பு ஜெயா அம்மாவுக்குத்தான். அவரை நாங்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவே பார்க்கிறோம்" என்றார்.

சமூகம் மாற வேண்டும்..

ஜெயசித்ரா தனது தொழில் மீது பெருமிதம் கொண்டிருந்தாலும் சமூகம் இன்னும் நிறைய மாறவேண்டியிருக்கிறது எனக் கூறுகிறார். எங்கள் உணவின் சுவையைப் பலரும் பாராட்டுகின்றனர். எங்களுக்கு நன்றாக பரிச்சயமானவர்கள் மீண்டும் மீண்டும் அளிக்கும் வாய்ப்பே எங்களுக்குப் பெருந்துணை. புதிய ஆர்டர்கள் கேட்டுச் செல்லும்போது பல இடங்களில் எங்களுக்கு அவமானமே நிகழ்கிறது.

திருநங்கைகள் கையால் சமைத்த உணவை உண்பதை தரக்குறைவாக சிலர் கருதுகின்றனர். நாங்கள் கவுரமான தொழில் செய்துவாழ சமூகத்தின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பெரும்பான்மை சமூகம் எங்கள் மீதான பார்வையை மாற்ற வேண்டும். இருந்தாலும் இவற்றால் நாங்கள் சோர்ந்துவிட மாட்டோம். எங்களின் இலக்கை எட்டியே தீர்வோம்" என்றார்.

ஜெயசித்ராவும் 15 திருநங்கைகளும் வங்கிக் கடன் பெற்றுதான் அவர்கள் வாழும் வீட்டைக் கட்டியுள்ளனர். தற்போது கூட்டாக உழைத்து கடனையும் அடைத்துக்கொண்டு கவுரவமாக வாழ்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

தமிழகம்

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்