இன்று அன்று | 1927 ஏப்ரல் 6: ரத்தக்கண்ணீர் படைப்பாளியின் பிறந்த தினம்

By சரித்திரன்

அது ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் ஒன்று. தொழுநோய் பாதிப்பால் அடையாளமே தெரியாமல் உருக்குலைந்து போன உருவத்துடன் எதிர்ப்படும் எம்.ஆர். ராதாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, உணவு தருவதற்காக வீட்டுக்கு அழைத்துவருவார் எஸ்.எஸ்.ஆர். திண்ணையில் அமர்ந்திருக்கும் எம்.ஆர். ராதா அந்த நிலையிலும் படு நக்கலாகப் பேசுவார்.

ராதா: ஏம்ப்பா, சாப்பாடு போடுறதும் போடுற. கறிச்சோறா போடு தம்பி, சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி...

எஸ்.எஸ்.ஆர்: அடடே, நாங்க கறி சாப்பிடறதில்லையேப்பா…

ராதா: ஏன், வீட்ல பத்தியமா?

எஸ்.எஸ்.ஆர்: இல்ல, நாங்க ஜீவகாருண்ய கட்சில சேந்திருக்கிறோம்.

ராதா: அடிசக்க! திங்கறதுக்குக் கூட கட்சி வச்சிருக்காண்டா யப்பா… ஜீவகாருண்ய கட்சின்னா என்ன தம்பி அர்த்தம்?

எஸ்.எஸ்.ஆர்: அதாவது, உயிர்களைக் கொலை செய்யக் கூடாது.

ராதா: ஆஹாங்!? நீங்க உயிரக் கொல்ற தேயில்லையா?

எஸ்.எஸ்.ஆர்: இல்லையே.

ராதா: ராத்திரில மூட்டப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?

எஸ்.எஸ்.ஆர்: ஒனக்கு உண்மையிலேயே திமிருதாண்டா…

இந்த வசனங்கள் எம்.ஆர். ராதாவின் பாத்திரம் எத்தகையது என்பதை உணர்த்திவிடும். முழுக்க முழுக்க அரசியல், சமூக விமர்சனங்கள், மூட நம்பிக்கைகளைப் பரிகசிக்கும் வசனங்கள் நிரம்பிய அந்தப் படம் வெளியானபோது, திரை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எனினும், பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம், சமூக நீதிக்கான போராட்டங்களின் தாக்கம் தமிழகத்தில் வெகுவாகப் பரவியிருந்த அந்தக் காலகட்டத்தில் ரத்தக்கண்ணீர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. முக்கியப் பாத்திரத்தில் நடித்த எம்.ஆர். ராதா, அநாயாசமான தனது நகைச்சுவையாலும், தொழுநோயாளியின் பாதிப்பின் அவஸ்தையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் தனது நடிப்பாலும் படத்தைத் தாங்கியிருப்பார். படத்தில் பேசப்பட்ட புரட்சிகரமான அந்த வசனங்கள் எம்.ஆர். ராதாவுடையவை என்று இன்றும்கூடப் பலரும் நினைக்கக் கூடும். ஆனால், அந்த வசனங் களை எழுதியவர் திருவாரூர் கே. தங்கராசு. படத்தின் கதை, திரைக்கதையும் அவர்தான்.

1927 ஏப்ரல் 6-ல் நாகப்பட்டினத்தில் பிறந்தவர் திருவாரூர் கே. தங்கராசு. அரசு ஊழியராகப் பணிபுரிந்த அவரது தந்தை குழந்தைவேலு, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆனால், தங்கராசு அதற்கு நேரெதிராக இருந்தார். நெற்றியில் பட்டையுடன்தான் காட்சியளிப்பார். கோயில்களுக்குச் செல்வார். திருவாரூரில் பன்னீர் கம்பெனியில் வேலை பார்த்தபோது, கடையில் மாட்டப்பட்டிருக்கும் கடவுள் படங்களுக்குத் தீபாராதனை காட்டியது முதல் கோயில்களின் ஸ்தல புராணங்களைப் பாராயணம் செய்ததுவரை பக்திமான்களுக்குரிய எல்லாச் செயல்களையும் செய்தவர். பின்னாட்களில் பெரி யாரின் கருத்துகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியபோது, புராணங்களை விமர்சிக்க, மேற்சொன்ன தனது பக்திமான் பண்புகள் உதவிகரமாக இருந்ததாக தங்கராசுவே கூறியிருக்கிறார்.

ஆசிரியர்களே வியக்கும் வகையில் ஆழ்ந்த கல்வியறிவு கொண்டிருந்த தங்கராசு, வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. திருவாரூரில் கணக்குப் பிள்ளையாக வேலைபார்த்தபோது, அவரது அறிவுத்திறன் அவரது பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் உதவியது. எனினும், அரசியல் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டது அவரது முதலாளிகளின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொடுத்தது. இதனால், அவர் இரண்டு முறை வேலையை இழக்க நேரிட்டது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மேடையில் பேசிவந்தார். பின்னாட்களில், திருவாரூர் நகர திராவிடர் கழகத்தின் தலைவர் சிங்கராயருடனான நட்பு, திராவிடர் கழகத்தின் பக்கம் தங்கராசுவை இழுத்துவந்தது. பெரியாரின் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்லத் தொடங்கினார்.

எம்.ஆர். ராதாவின் நாடகங்களில் கதை, வசனம் எழுதிவந்த கலைஞர் கருணாநிதி ஏதோ காரணத்துக்காக, அவரது குழுவிலிருந்து விலகிவிட, சிங்கராயர் மூலம் அந்த வாய்ப்பு தங்க ராசுவுக்கு வந்தது. ராசிபுரத்தில் உள்ள பேருந்து உரிமையாளரின் விருந்தினர் விடுதியில் ஒரு அறையில் தங்கியிருந்தபோது ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை எழுதினார் தங்கராசு. 1949 ஜனவரி 14-ல் திருச்சியில் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் அரங்கேறியது. ஒவ்வொரு முறையும் நாடகத்தின் காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, நாடகம் மெருகேற்றப்பட்டது.

சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞரை அறிமுகம் செய்த ‘பராசக்தி’ படத்தின் தயாரிப் பாளரான ‘நேஷனல் பிக்சர்ஸ்’-ன் பி.ஏ. பெருமாள், ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முன் வந்தார். அந்தப் படத்துக்கு எம்.ஆர். ராதா வாங்கிய சம்பளம் ரூ. 1 லட்சம். தங்கராசுவுக்கும் கணிசமான தொகை சம்பளமாகக் கிடைத்தது.

அத்துடன், தனது வசனங்கள் மாற்றப்படக் கூடாது என்றும் உறுதியாக இருந்தார். இப்படிப் பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தின் பின்னணியில் உண்டு. ‘ரத்தக் கண்ணீர்’ படம் இன்று தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் சேனல் மாற்றாமல் பார்க்கும் ரசிகர்கள் உண்டு. பல முறை மேடையேற்றப்பட்ட நாடகம் இது.

‘பெற்ற மனம்’, ‘தங்கதுரை’ஆகிய படங்களுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார் தங்கராசு. எனினும், தன்னை ‘சினிமாக்காரன்’ என்று சொல்லிக்கொள்ள அவர் விரும்பவில்லை. தனது கருத்துகளைப் பரப்பக்கூடிய வாகனம்தான் சினிமா என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவர். பெரியார் மீது பெரும் மதிப்பும், அவரது கொள்கைகளில் ஆழ்ந்த பற்றும் கொண்டவராகவே கடைசிவரை இருந்தார் தங்கராசு. அண்ணா, கருணாநிதி, எம்.ஆர். ராதா என்று பலருடன் நல்ல நட்பும், அதேசமயம் முரண்பட்ட கருத்துகளையும் கொண்டிருந்தார். தனது கருத்துகளை ஒளிவுமறைவில்லாமல் துணிச்சலாகப் பேசிய தங்கராசு, 2014 ஜனவரி 5-ல் தனது 87-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

17 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

15 mins ago

சினிமா

33 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

27 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

41 mins ago

வலைஞர் பக்கம்

45 mins ago

சினிமா

50 mins ago

மேலும்