மேம்பட்ட திரைப்பட விமர்சனங்களுக்கான தேவையும் வழிமுறையும் என்னென்ன?

திரைப்பட விமர்சனங்களின் போதாமைகள் 'தி இந்து'வால் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டு விட்டதால், மேம்பட்ட திரைப்பட விமர்சனங்களுக்கான தேவையையும் அதை உருவாக்குவதற்கான பல வழிமுறைகளில் ஒன்றையும் மட்டும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

திரைப்படங்களை நம்மால் நுகரப்படும் கலையாக மட்டுமில்லாமல், சந்தையில் ஒரு உற்பத்திப் பொருளாகவும், தகவல் தொழில்நுட்பத்துறை போல திரைத்துறையை ஒரு தொழில்துறையாகவும் பார்ப்பது அவசியம். முறைப்படுத்தப்பட்ட தொழில்துறையாக இங்கு திரைத்துறை இயங்கவில்லை என்றாலும் அந்த இலக்கை நோக்கி அது சென்று கொண்டு இருக்கிறது.

தமிழகம் எங்கும் பெருகிவரும் திரைத்துறை சார்ந்த படிப்புகளும், கல்வி நிறுவனங்களும் அதில் ஆவலாய் இணையும் மாணவர்களுமே இதற்கு சாட்சி. இப்படி உருவாகும் வருங்கால நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என்ன மாதிரியான கலைக்களஞ்சியங்களையும், அறிவுச் செயல்பாட்டையும் பாடமாக அளிக்கப் போகிறோம்? அவர்கள் இப்போது வெளியாகிக் கொண்டு இருக்கும் விமர்சனங்களைப் படித்தால் அவர்களின் சிந்தனை, படைப்பாற்றல் எப்படி மேம்படும்?

திரை விமர்சனங்கள் மக்களின் ரசனை அடிப்படையில் மட்டுமே இப்போது எழுதப்பட்டு வருகின்றன. அதுவே பெரிய குறையாக இருக்கும் போது அதையாவது நாம் ஒழுங்காகச் செய்கிறோமா என்பது அடுத்த வினா. படைப்பாளிகளுக்கு புதிய தாக்கங்களையும், மாணவர்களுக்கு புதிய கேள்விகளையும், ரசிகர்களுக்கு புதிய விஷயங்களையும் விமர்சனங்கள் அளிப்பதில்லை.

திரைப்படங்களை பார்த்த பிறகு பல்வேறு வகையான தரப்புகளை விமர்சனங்களாகப் பார்க்கும் போது , வாசிப்பவர்களுக்கு தன் புரிதல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது பிடிபடும். ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை சிறந்த திரைப்படங்களுடனும், கலைஞர்களுடனும் ஒப்பிட்டு எழுதும்போதுதான் வாசிப்பவர்களின் தேடல் அதிகமாகும்.

திரைப்படம் பேசும் தத்துவ சிக்கல், கதாபாத்திரங்களின் உளவியல் அம்சங்கள், கதைக்களன் உருவாக காரணமாக இருந்த வரலாற்று சமூக கலாச்சார அரசியல் பொருளாதார பின்னணி போன்றவை ஆராயப்படுகின்றனவா என்பதும் யோசிக்கப்பட வேண்டிய விஷயங்கள். இந்நிலையில் நாம் என்ன செய்யலாம் என பார்க்கலாம்.

ஃபிலிம் ஸ்டடீஸ் (film studies) என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளில் தனியாக கல்வித்துறைகள் துவங்கப்படுவதற்கு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆந்த்ரே பஸீன் (Andre Bazin) மற்றும் அவரது சகாக்களின் சிறு பத்திரிகை சார்ந்த விமர்சன செயல்பாடுகள் முக்கியக் காரணம் எனலாம். இவர்கள் விமர்சகர்களாக மட்டுமல்லாமல் கோட்பாட்டாளர்களாகவும் இருந்தனர். இவர்களின் வரிசையில், தமிழ் சிறு பத்திரிகை உலகில் குறியியல் (semiotics), உளப்பகுப்பாய்வு (psychoanalysis) மற்றும் பிற கோட்பாடுகள் சார்ந்த மற்றும் கோட்பாடுகள் சாராத திரைப்பட ஆய்வுக்கட்டுரைகளும் , விமர்சனங்களும் வெளிவருகின்றன.

ஆக, வலைப்பூ மற்றும் சமூக ஊடகங்கள் தவிர்த்து திரைப்பட விமர்சனம் மற்றும் ஆய்வுகளில் தீவிரமாக இயங்குவது மூன்று தளங்களை சார்ந்த நிபுணர்கள். ஒன்று. இலக்கியவாதிகள். இரண்டு ஊடகவியலாளர்கள். மூன்று கல்வித்துறை ஆய்வாளர்கள்.

தமிழ்ச்சூழலில் கறாரான திரைப்பட விமர்சனங்களை வைப்பதோடல்லாமல், உலகத் திரைப்படங்கள் மற்றும் திரை ஆளுமைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வைக்கும் சாரு நிவேதிதா , முக்கியமான தமிழ், மலையாள திரைப்பட இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் ஜெயமோகன், 'உலக சினிமா' புத்தகம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களை இலக்கிய தளத்தில் இருந்தும், சிறந்த திரைப்பட விமர்சகருக்கான தேசிய விருதினைப் பெற்ற நம்ரதா ஜோஷி, பரத்வாஜ் ரங்கன் போன்றவர்கள் ஊடக தளத்தில் இருந்தும், கமல்ஹாசனை வைத்து திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சிப்பட்டறை நடத்திய ஐஐடி, மெட்ராஸ் பேராசிரியர் ஆய்ஷா இக்பால், தமிழ் திரைப்படங்களைப் பற்றி பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் அ.ராமசாமி போன்றவர்களை கல்வித்தளத்தில் இருந்தும் அழைத்து திரைப்பட விமர்சனங்களுக்காகவே சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்.

அதற்கு தியடோர் பாஸ்கரன் போன்ற அமைப்பு சாராத மூத்த அறிஞர்களையும், சிஎஸ்டிஎஸ் ரவி வாசுதேவன் போன்ற மத்திய ஆய்வு அமைப்புகளை சேர்ந்த திரைப்பட ஆய்வாளர்களையும், புனே திரைப்பட கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களயும், ஃபிலிம் ஸ்டடீஸ் என்ற தனி கல்வித்துறை இருக்கும் ஜவஹர்லால் நேரு, ஜாதவ்பூர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக பேராசிரியர்களையும், மாணவர்களையும், தன்னார்வத்துடன் செயல்படும் சமூக ஊடக, இணைய விமர்சகர்கள் மற்றும் பிற ஆர்வலர்களையும் அழைக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல் திரைப்படம் உருவாக காரணமாக இருக்கும் அனைத்து தொழில்நுட்பத் துறைகளில் இருந்தும் திரைப்படத்துறையில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த கலைஞர்களும், புதிய முறையில் திரைப்படக்கலையை அணுகும் இளம் கலைஞர்களும் இடம்பெற வேண்டும். இவ்வாறு பலதரப்பினரும் ஒன்று சேர்ந்து சித்தாந்த, கோட்பாட்டு ரீதியிலான மோதல்கள், வாக்குவாதங்கள் நடந்தால் தான் கருத்துக்கள் செழுமையடைந்து திரைப்பட விமர்சனங்கள் மெருகேறும்.

தொடர்புக்கு: ramvinothbabu@gmail.com>

வாசகர்களே! உங்களுக்குத் தோன்றும் கருத்துகள், எண்ணங்கள், சிந்தனைகள், சுவாரஸ்யமான கட்டுரைகள், யோசனைகளை online.editor@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். வித்தியாசமான, பயனுள்ள பகுதிகள் தி இந்து தமிழ் இணையதளத்தில் வெளியிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்