ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை

By எஸ்.எஸ்.பூங்கதிர்

“நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க யாரோட அவ்வளவு சுவாரஸ்யமா போன்ல பேசிட்டு இருக்கீங்க?!” சுதா கேட்கிறாள்.

அதைப் பொருட்படுத்தாத அருண் போனில் நிதானமாக “நான் வீட்லதான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...!” என்று பேசிவிட்டு போனைத் துண்டித்தான்.

“இப்ப சொல்லு. என்ன உன் பிரச்சினை?... எதுக்கு நீ இப்ப இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கே?” அருண், மனைவியிடம் கேட்டான்.

அதற்கு சுதா, “என்னால இனி இங்க ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. நான் இப்பவே எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போகப்போறேன். நீங்க நாம தனிக்குடித்தனம் பண்ண வாடகை வீடு பார்த்த பிறகு வரேன்...” என்று சொல்லியவாறு தன் உடைகளை சூட்கேஸில் அடைக்கிறாள்.

அதை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அருண், “சுதா, நீ இப்ப நிலமை புரியாம அவசரப்படறே. உங்க அம்மா வீடு ஒண்ணும் தூரத்துல இல்லை. ஜஸ்ட் இங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்துலதான். அதை நீ மனசுல வைச்சுக்க...” என்றான்.

“எங்க அம்மா வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் தூரம் அதிகமில்லை தான். ஆனா, உங்க குடும்பத்துக்கும், எனக்கும் தூரம் அதிகமாயிடுச்சு. அது தெரியுமா உங்களுக்கு?” வெடுக்கென்று கேட்டாள் சுதா.

அவளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. பொறுமையுடன் காத்திருந்தான். சுதா தன் உடமைகளை மூட்டைகட்ட ஆரம்பித்தாள். அது முடிந்ததும் தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

நேரம் கடந்துகொண்டிருந்தது. ஒரு வழியாக தன்னை அழகு படுத்திக்கொண்ட சுதா, “நான் கிளம்பறேன். எனக்கு டாக்ஸி ஏற்பாடு பண்ணுங்க!” என்றாள்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு. டாக்ஸி வந்துடும்!” அருண் சொல்கிறான்.

டாக்ஸி வந்தது.

“சுதா, டாக்ஸி வந்துடுச்சு. நீ வா” அருண் அழைக்க சுதா பெட்டி, படுக்கையுடன் வெளியே வருகிறாள்.

டாக்ஸி கதவை அவள் திறக்கப் போகும்போது கதவு தானாக திறக்கிறது. டாக்ஸியில் இருந்து சுதாவின் அம்மா ஒரு சூட்கேஸுடன் இறங்கிக்கொண்டிருந்தாள். “என்னம்மா நீ இங்க?”சுதா பதறிப்போய் கேட்கிறாள்.

“வயசானாலும் உன் அப்பன் தொல்லை தாங்கலைடி. எங்கிட்ட தொட்டதுக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டே இருக்கார். அதான் என் கஷ்டத்தை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாப்பிள்ளைக்கிட்ட போன்ல சொல்லிக்கிட்டு இருந்தேன். அவர்தான், ‘நான் வீட்ல தான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...

மாமா நீங்க இல்லாத அருமையை உணர்ந்து, தானே வந்து உடனே உங்களை அழைச்சுட்டு போயிடுவாரு. நீங்க இல்லாம அவரால இருக்க முடியாது. டாக்ஸி அனுப்பறேன். வந்துடுங்க’ன்னு சொன்னாரு. அதான் வந்துட்டேன். பின்னாலயே உங்க அப்பா மாப்பிள்ளை சொன்ன மாதிரி ஓடி வரத்தான் போறாரு பாரு!”

அம்மா சொன்னதைக் கேட்ட சுதா, தன் கணவன் அருணைப் பார்க்க, “நீ இப்ப நிலைமை புரியாம அவசரப்படறே’ன்னு நான் முன்னாடியே சொன்னேன் இல்ல? நீ கேட்டியா?” அருண் சொல்ல, அவனை ஆசையுடன் வந்து கட்டிக்கொள்கிறாள் சுதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

22 mins ago

சுற்றுச்சூழல்

32 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

27 mins ago

விளையாட்டு

48 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்