’காலம் பொன் போன்றது’ என்பவர்கள்; ஊருக்கு நன்மை செய்பவர்கள், தப்பு செய்யாதவரை நல்லவர்களே! - சதயத்தின் குணங்கள்

By வி. ராம்ஜி

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 73 -

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

சதயம் நட்சத்திரம் பற்றிப் பார்த்து வருகிறோம்.

கடந்த அத்தியாயத்தில், சதயம் நட்சத்திரக்காரர்கள் குறித்த தகவல்கள் பலவற்றைப் பார்த்தோம்.

இந்த அத்தியாயத்திலும் இன்னும் பல தகவல்களைப் பார்ப்போம்.

சதய நட்சத்திரம், எமதர்மன் பிறந்த நட்சத்திரம். எனவே காலச் சக்கரத்தைப் பராமரிக்கக் கூடிய நட்சத்திரம். சதயத்தில் பிறந்தவர்கள் பணத்தைக் கூட வீண் செலவு செய்தாலும் செய்வார்களே தவிர, ஒருபோதும் நேரத்தை வீணாகச் செலவு செய்யமாட்டார்கள். சதய நட்சத்திரக்காரர்கள், காலம் பொன் போன்றது என்பதை அறிந்து வைத்திருப்பவர்கள். பணத்தை இழந்தால் சம்பாதித்துவிடலாம், ஆனால் நேரத்தை இழந்தால் அதைத் திரும்பப் பெறவே முடியாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள். அதேசமயம், நாமெல்லாம் கீழே விழுந்த காசை குனிந்து எடுப்பதற்குள், விழுந்த காசை விட, அந்த நிமிடத்தில் பத்துமடங்கு சம்பாதிக்கின்ற திறமை வாய்ந்தவர்கள்.

சதயம் நட்சத்திரம் கும்ப ராசியில் இருக்கும் என்பது தெரியும்தானே. கும்பம் கோபுரக் கலசத்தைக் குறிக்கும். சுப நிகழ்வுகளில் வைக்கப்படும் கும்ப கலசத்தையும் ஒத்ததுதான் சதய நட்சத்திரம். ஆகவே, கும்ப ராசிக்காரர்கள் எப்படியும் உயர்வான இடத்தை அடைவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். அதிலும் லட்சியம், குறிக்கோள் என்பதெல்லாம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கே அதிகம் உண்டு. எந்த வாய்ப்பையும் தவறவிடாதவர்கள் சதயக்காரர்கள். அதேபோல், கிடைத்த வாய்ப்பைக் கொண்டு தன் லட்சியத்தை நோக்கி முன்னேறுபவர்கள்.

வட்டவடிவமாக உள்ளவை எல்லாமே சதய நட்சத்திரத்தைக் குறிப்பது என்று பார்த்தோம்.கிணறு, தானியக் களஞ்சியம், கடிகாரம், செக்கு, ஆட்டுக்கல் (கிரைண்டர்), கயிறு, ரப்பர், பூமிக்கடியில் எடுக்கப்படும் பெட்ரோல், நிலக்கரி, பெட்ரோல் பங்க், அகழ்வாராய்ச்சி, உயர் கோபுரங்கள் என அனைத்தும் சதயத்தின் வடிவமே.

சதய நட்சத்திரத்திற்கு, சதய நட்சத்திரக்காரர்களுக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், இவர்களுக்கு மறுபக்கம் ஒன்று இருக்கிறது என்று கடந்த அத்தியாயத்தில் சொன்னேன்.

அது என்ன மறுபக்கம்?

சதய நட்சத்திரக்காரர்கள், நியாய தருமத்தின்படி நடந்து கொள்பவர்கள். மற்றவர்களிடமும் அதை எதிர்பார்ப்பார்கள் என்று சொல்லியிருந்தேன்.
இது அனைத்தும் மற்றவர்களிடம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்களே தவிர, தனக்கென வரும்போது இந்த நியாய தர்மங்களைக் காற்றில் பறக்க விடுபவர்கள். எந்த வழியிலும் சம்பாதிக்கத் தயங்காதவர்கள். இன்னொரு விஷயம்... தப்பு செய்யும் வாய்ப்பு வராதவரைக்கும் நல்லவர்களே. தப்பு செய்யும் வாய்ப்பு வந்தால் தயங்காமல் செய்பவர்கள்.

ஊருக்கு நன்மை செய்பவர்கள். மக்கள் நலனுக்காகப் பாடுபடுபவர்கள். ஒரு கட்டத்தில் அரசியல் போன்ற இயக்கங்களில் இணைந்து தன் மக்கள் பலத்தைக் காசாக்கி வளமாக வாழ்வதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு சதயத்தில்தான் பிறக்க வேண்டும் என்றில்லை. ராஜ கிரகங்கள் சதயத்தில் இருந்தாலே இது நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சில விஷயங்களை குறிப்பிட வேண்டும். எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி தரவேண்டியது ஜோதிட சாஸ்திரத்தின் கடமை என்பதால் முழுவதுமாகவே சொல்லிவிடுகிறேன்.

சட்ட விரோத செயல்கள், இருட்டில் நடக்கும் குற்றச் செயல்கள், களவுப் பொருட்களை வாங்குதல், பெண்பித்து, பாலியல் தவறுகள், முறை தவறிய நட்பு, வயதுக்கு மீறிய ரகசிய நட்பு, ஆடம்பரமான தோற்றம், பெரிய மனித தோற்றத்தில் செய்யும் திரைமறைவுச் செயல்கள், விளையாட்டுத் தனமாக செய்வதாக மற்றவர்களை நம்பவைத்து.. சிரித்துக்கொண்டே காலை வாரி விடும் செயல்கள்... என இவர்களின் மறுபக்கம் சற்று வித்தியாசமானதுதான்.

“நான்லாம் அப்படி இல்லையே” என்பவர்களுக்கு...

மீண்டும் சொல்கிறேன். தப்பு செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லையே தவிர, அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது நிச்சயம் அதை தவற விடமாட்டீர்கள், தவறாமல் செய்வீர்கள் என்பதுதான் ஜோதிட விதி.

சதயம் நட்சத்திரத்தினர் பொதுவாக நாத்திகம் பேசுபவர்களாக இருப்பார்கள், ஒரு கட்டத்தில் ஆன்மீகவாதிகளாக மாறுவார்கள். ஆலய திருப்பணிகளில் வலிந்து தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர்களாக இருப்பார்கள். நல்லவர்கள்தான், மற்றவர்களுக்கு உதவுபவர்கள் தான். ஆதரற்றவர்களை ஆதரிப்பவர்கள்தான். யோசிக்காமல் வாரி வழங்குபவர்கள்தான். அடுத்தவர்களை கை தூக்கி விடுபவர்கள்தான்.

ஆனால், அதில் சிறிது சுயநலம் கலந்துதான் இருக்கும். புகழ் வெளிச்சம் தன்மீது படவேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கும். எல்லோரும் தனக்கு மரியாதை, மதிப்பு தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். மரியாதை இல்லாத இடத்தில் கணநேரம் கூட இருக்கமாட்டார்கள். கௌரவ பிரச்சினையில் வீம்பாகவே இருப்பார்கள். தன்னை மதிக்காதவர்களை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். தன்னை மதிப்பவர்களுக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பார்கள்.

இவர்களுக்கான தொழில், உத்தியோகம் என்ன என்று பார்ப்போம்.

சுய தொழில் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள், உத்தியோகத்தில் இருந்தாலும் குறுகிய காலத்தில் உயர் பதவிகளை பெறுவார்கள்.

செய்கின்ற பணியில் சரியான திட்டமிடல், செலவுகளை மிச்சப்படுத்துதல், உடன் இருப்பவர்களை உற்சாகப்படுத்துதல், குறித்த காலத்திற்கு முன் நிறைவேற்றுதல் என கனகச்சிதமாக பணியாற்றுபவர்கள். தனிப்பட்ட திறமையினாலேயே மேலிடத்தில் கவனத்தைப் பெறுபவர்கள். இந்த கவன ஈர்ப்பே இவர்களுக்கு தாமாகவே உயர் பதவிகளைப் பெற்றுத்தரும். எந்தப் பணியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவர்கள். அரசுப்பணிகளில் அதிகம் இருப்பார்கள். தனியார் நிறுவனங்களில் அதிகாரப் பதவிகளில் இருப்பார்கள்.

பெட்ரோலிய நிறுவனங்கள், நிலக்கரி நிறுவனங்கள், அகழ்வாராய்ச்சி, கனிமவள நிறுவனங்கள், நில அளவை, தூதரகப் பணி, அயல்நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதி, அரசுக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான தூதர் முதலான பணிகளில் இருப்பார்கள்.

சொந்தத் தொழிலாக எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். குறிப்பாக கமிஷன் தொழில், கட்டுமானத் தொழில், மொத்த டீலர், பெட்ரோல் பங்குகள், வெளிநாட்டு சுற்றுலாத் தொழில், நவரத்தின வியாபாரம், பழைய கார் விற்பனை, மருத்துவம் தொடர்பான தொழில், இதய நோய் நிபுணர், மூளை அறுவை சிகிச்சை நிபுணர், மனோதத்துவ நிபுணர், எலும்பு மூட்டு மருத்துவம், பங்குவர்த்தகம், முதலீடுகள் செய்தல், சிட்பண்ட், தவணைமுறை வியாபாரம் போன்ற தொழில் வாய்ப்புகள் அமையும்.
சதய நட்சத்திரக்காரர்கள், இன்னும் அறிய வேண்டிய தகவல்கள் ஏராளாமாக உள்ளன.

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்