விடுதலைக்கான கனவு

By செய்திப்பிரிவு

நமது நிலப்பிரபுத்துவ, சாதிய மற்றும் ஆணாதிக்க சமூகம் அதன் நலன்களுக்கு உகந்த வகையில் உருவாக்கிய மதிப்பீடுகள் எவ்வாறு விடுதலைக்கு எதிராகத் திகழ்கிறது என்பதைக் கலைத்தன்மையோடு விவரித்த முக்கியமான படைப்பு இமையத்தின் ‘பெத்தவன்’ நெடுங்கதை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியான கதைகளுள் தமிழ் சமூகத்தின் சாதிய விழுமியங்களை விளங்கிக் கொள்ள உதவக்கூடிய முக்கியமான படைப்பாக ‘பெத்தவன்’ நெடுங்கதை திகழ்கிறது.

நிலப்பிரபுத்துவ அமைப்பு உடைந்து உலகமயமாக்கல் முழு வளர்ச்சி பெற்றிருக்கிற இன்றைய சூழலிலும் நமது கிராமங்களில் இன்னும் சாதியக் கட்டுமானங்கள் உடையவில்லை. சாதியப் பெருமைகளைக் காப்பாற்றுவதன் பெயரில் ஒரு அரசியலே இக்காலகட்டத்தில் வலுப்பெற்றுள்ளது. நகரமயமாக்கல் தலித்துக் களுக்கு அளித்திருக்கும் வேலை வாய்ப்புகளால் பொருளாதார ரீதியாக அவர்களுக்கு நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இதைச் சிதைக்கும் வகையில் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அதிகமாகியுள்ளன. சாதிய மேலாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகச் சாதி கடந்து மலரும் காதல் உறவுகள் பார்க்கப்படுகின்றன. சாதிப் பஞ்சாயத்து, ஊர்க் கட்டுப்பாடு, பிள்ளைகளின் விருப்பம் என எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது எனத் தடுமாறும் பெற்றோர்கள், கௌரவக் கொலை ஆகியவற்றை ஊடுபாவாகக் கொண்டு நெய்யப்பட்டிருக்கும் காத்திரமான படைப்புதான் பெத்தவன்.

பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய இக்கதையைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகப் பள்ளி மாணவர்கள் நாடகமாக அரங்கேற்றினர். இந்நாடகம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மூன்றாம் அரங்கொன்றின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது நாடகம். அரங்கிற்கும், பார்வையாளர்களுக்கும் இடைவெளியின்றி ஒரு சமூக அவலம் நம் கண் முன்னால் நிகழும்போது ஏற்படும் பதற்றத்தை, துக்கத்தை, கோபத்தை உருவாக்கியது இந்நாடகம். திடீரென்று பிரவேசித்த நாயும் ஏற்கனவே அவ்விடத்தில் இருந்த ஒரு ஓட்டு வீடும் மாமரங்களும் ஒரு கிராமப் பின்னணிக்கு நெருக்கம் ஏற்படுத்துவதாக இருந்தன.

இக்கதை வெளியான சில தினங்களில் தர்மபுரி நாயக்கன்கொட்டாயில் தலித் இளைஞன் இளவரசனுக்கும், மேல்¬ சாதியைச் சேர்ந்த திவ்யாவுக்கும் இடையே நடைபெற்ற காதல் திருமணம் தொடர்பாகக் கலவரம் ஏற்பட்டு, கடைசியில் இளவரசனின் தற்கொலையில் அடங்கியது. இக்கதைக்கும் தர்மபுரி சம்பவத்திற்கும் இடையே உள்ள நெருக்கம் ஒரு கலைஞனின் தீர்க்க தரிசனத்திற்கான அடையாளமாக இருக்கிறது. இக்கதையின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்வது நமக்கு வலியைத் தருகின்றது.

கதையில் வரும் தந்தை பழனிக்கும் அவன் மகள் காதலிக்கும் தலித் இளைஞன் குடும்பத்திற்கும் பெரிய அளவில் பொருளாதாரத்திலோ, கல்வியிலோ வேறுபாடு இல்லை. இக்காதலுக்குத் தடையாக இருப்பது சாதி மட்டும்தான். பழனியே தன் மகளை நல்ல வேலையிலிருக்கும் அந்த இளைஞனுக்குத் தர விரும்பினாலும் சாதி கௌரவம், சாதிப் பஞ்சாயத்து போன்றவை அவனது விருப்பத்திற்கு மாறாக தவம் இருந்து, வரம் வாங்கிப் பெற்ற மகளைக் கொலை செய்ய நிர்பந்திக்கிறது.

தந்தைவழிக் குடும்ப அமைப்பில் சாதியப் பெருமை பெண் மீது கட்டப்பட்டிருக்கிறது. ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண் சாதி கௌரவம் காப்பாற்றக்கூடியவளாக இருக்க வேண்டும். பழனியின் மனைவியை “பொண்ண எப்படி வளர்த்திருக்கிறா பாரு” என ஊர் தூற்றுகிறது. இங்கு ஆணின் நோக்கிலேயே நல்ல பெண் என்பதற்கான இலக்கணங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

சாதிப் பஞ்சாயத்துகளின் குரூரத்தை, வன்முறையை, நாகரிகமின்மையை நம் முகத்தில் காறி உமிழ்ந்து காட்டுகிறது ‘பெத்தவன்’ நாடகம்.

மானுட நலம், சமத்துவம், குடும்ப அறம் எனப் பல முனைகளிலிருந்தும் வாசிப்பதற்கான சாத்தியங்களை இப்படைப்பு தன்னகத்தே கொண்டிருப்பதை இந்நாடகம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது.

பாக்கியமாக நடித்திருக்கும் அருணாஸ்ரீ, பழனியாக சந்தோஷ், பழனியின் மனைவியாக நந்தினி, அம்மா துளசியாக ஜெயலட்சுமி, பாக்கியத்தின் சகோதரியாக சிவசிவமதி ஆகியோர் இந்தப் பாத்திரங்களுக்கு ரத்தமும் சதையுமாக உயிர் கொடுத்திருக்கின்றனர். இந்நாடகத்திற்கு இருளும் ஒளியும் கலந்து அழகு செய்த பேராசிரியர் ரவீந்திரன், நெறியாள்கை செய்திருக்கும் பேராசிரியர் ராஜு ஆகியோர்களின் உழைப்பு பாராட்டிற்குரியது. காட்சிகளுக்கு இசைத்துயர் கூட்டியிருக்கும் முருகவேல், சண்முகராஜா, வினாயகம், ஆனந்தன் போன்றோரின் பங்களிப்பும் மதிக்கத்தகுந்தது.

நிகழ்வு

நாடக்கலைஞர் முருக பூபதியின் புதிய நாடகமான, பைசாச முக மூடியின் ஸ்பானியச் சதிர், புதுச்சேரியில் நிகழ்த்தப்பட உள்ளது. இந்நிகழ்வை மணல் மகுடி குழுவினர் ஒருங்கிணைக்கின்றனர்.

தேதி : மே 24, 25

மாலை 6:30 மணி

இடம் : இண்டியானா ஸ்ட்ரோம்ஸ் நாடக அரங்கம் 07, ரோமைன் ரோலண்ட் தெரு, புதுச்சேரி.

தொடர்பு எண்: 99941 22398

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

வணிகம்

45 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்