Published on : 14 Dec 2022 12:12 pm
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநரிடம் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். பின்னர் தலைமைச் செயலர், ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் உதயநிதிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர், பதவியேற்பு உறுதிமொழியில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார். ஆளுநரும் கையொப்பமிட்டார். மலர் கொத்து வழங்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், அதிகாரிகள், உதயநிதியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மூத்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார்.
அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
‘மாமன்னன்’ தான் தனக்குக் கடைசிப் படம் என்றும், விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.