25 ஆண்டுகளாக அதிமுக வசம் உள்ள பொள்ளாச்சி தொகுதியில் வெல்லப்போவது யார்?

தமிழகத்தின் ‘தென்னை நகரம்’ என அழைக்கப்படும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, தென்னிந்தியாவின் மிகப்பெரிய கால்நடை சந்தை, தென்னை நார் மற்றும் அவற்றின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், தேங்காய், இளநீர் ஏற்றுமதியில் இந்திய அளவில் முக்கிய இடம்பெற்றுள்ள தொகுதியாகும்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆழியாறு அணை, பசுமை நிறைந்த வயல் வெளிகள், தென்னந்தோப்புகள் நிறைந்து காணப்படுவதால் இங்கு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதனால் ‘சின்ன கோடம்பாக்கம்’ எனவும் பொள்ளாச்சி அழைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி 1952 முதல் சட்டப்பேரவை தொகுதியாக இருந்து வருகிறது. இதுவரை 16 சட்டப்பேரவை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோயில், 300 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி மாரியம்மன், சூலக்கல் மாரியம்மன் கோயில்கள் இங்கு அமைந்துள்ளன.

அனுப்பர்பாளையம், சிக்கராயபுரம், சின்ன நெகமம், தேவம்பாடி, குள்ளக்காபாளையம், மண்ணூர், நல்லூத்துக்குளி, என்.சந்திராபுரம், புரவிபாளையம், புளியம்

பட்டி, ராமபட்டணம், ராசக்காபாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, திம்மங்குத்து, வடக்கிபாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, ஜமீன்முத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் என அதிகளவில் கிராமங்களை கொண்ட இந்த தொகுதியில் பொள்ளாச்சி நகராட்சியின் 36 வார்டுகளும், பெரிய நெகமம், ஆச்சிப்பட்டி ஆகிய நகர்ப்புற பகுதிகளும் மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்தின் ஒரு பகுதியும் இடம்பெற்றுள்ளன.

கொங்கு வேளாளர், செட்டியார், அருந்ததியர் மட்டுமின்றி பல்வேறு சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர். பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக 10 முறை வெற்றி பெற்றுள்ளது.

2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 5 தேர்தல்களில் தொடச்சியாக அதிமுக வெற்றி பெற்று 25 ஆண்டுகளாக தொகுதியை தக்க வைத்துள்ளது. இந்த தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன.

தொகுதியில் வளர்ச்சி பணியாக புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், மேற்கு புறவழிச்சாலை, கிட்டசூரம்பாளையம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், அறிவுசார் மையம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

தொகுதியின் முக்கியப் பிரச்சினைகள்

செவிலியர் கல்லூரி, நகராட்சியில் சொத்து வரி உயர்வை குறைத்தல், அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோதவாடி குளத்துக்கு பிஏபி தண்ணீர், தென்னை வளர்ச்சி வாரிய கிளை அலுவலகம் அமைத்தல் ஆகியவை நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.

ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பொள்ளாச்சி வருவாய் கோட்டம் 164 ஆண்டுகளாகியும் இன்னும் வருவாய் கோட்டமாகவே உள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பூர் வட்டம் பின்னாளில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டது. பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் நித்யானந்தன், நாம் தமிழர் கட்சியின் ஆர்.என்.எஸ். செந்தில்குமார், தவெக சார்பில் ஜி.ராமநாதன் மற்றும் சுயேச்சைகள் களத்தில் உள்ளனர். பொள்ளாச்சி ஜெயராமன் நான்கு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பற்றுகொண்ட கிராமத்து பெண்கள் மற்றும் முதியோர்களின் வாக்கு வங்கி தங்களது பலம் என அக்கட்சியினர் கூறுகின்றனர். 10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் தனி மாவட்டம் கோரிக்கையை நிறைவேற்றமால் விட்டது பலவீனமாக கருதப்படுகிறது.

திமுகவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், காலை உணவு திட்டம் ஆகியவை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. கொமதேகவின் நித்யானந்தன் 2011 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு 51 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

தற்போது பலமான கூட்டணியுடன் களமிறங்கும் கொமதேக, இம்முறை வென்றாக வேண்டும் என்னும் முனைப்பில் களப்பணியாற்றி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொகுதி திமுக வசம் இல்லாதது திமுகவினர் இடையே உளவியல் ரீதியாக ஒரு பின்னடைவாக உள்ளது.

கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் 6,402 வாக்குகள் பெற்றது. தவெக வேட்பாளர் ராமநாதன், கட்சியின் தலைவர் விஜயின் செல்வாக்கும், இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்கும் தன்னை கரை சேர்க்கும் என நம்புகிறார்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 96,061

பெண் - 1,09,919

3-ம் பாலினத்​தவர் - 35

மொத்த வாக்​காளர்கள் - 2,06,015

25 ஆண்டுகளாக அதிமுக வசம் உள்ள பொள்ளாச்சி தொகுதியில் வெல்லப்போவது யார்?
கணிக்க முடியாத காரைக்குடி தொகுதியில் கலக்கப் போவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in