அதிமுக Vs விசிக: திண்டிவனம் தொகுதி யாருக்கு சாதகம்?

புளியமரக்காடு அதிகளவில் இருந்ததால், முற்காலத்தில் ‘திந்திரிவனம்’ என அழைக்கப்பட்டு, நிகழ் காலத்தில் ‘திண்டிவனம்’ என அழைக்கப்படுகிறது.

‘திந்திரி’ என்றால் ‘புளி’, ‘வனம்’ என்றால் ‘காடு’ என பொருள். நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு, புளிய மரங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

‘திண்டீச்சரம்’ எனவும் அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற பழமையான திந்திரிணீஸ்வரர் கோயில், சோழர் கால நரசிம்மர் கோயில் என பல கோயில்களை உள்ளடக்கியது. மரக்காணத்தில் புகழ் பெற்ற உப்பளங்கள் இத்தொகுதியில் இருப்பது தனிச் சிறப்பாகும்.

தமிழகத்துக்கு முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை வழங்கிய பகுதி இது. இவரது சொந்த ஊரான ஓமந்தூர், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்டது.

சென்னை - தென் மாநிலங்கள் மற்றும் வட மேற்கு மாவட்டங்கள் - புதுச்சேரி மாநிலத்தை இணைக்கும் பகுதியாகும். ரயில் போக்குவரத்தும் உள்ளன.

1949-ல் பேரூராட்சியாக உருவாகி, 1970-ல் 2-ம் நிலை நகராட்சி, 1998-ல் முதல் நிலை நகராட்சி மற்றும் 2008-ல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி, ஒலக்கூர் மற்றும் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சுதந்திர இந்தியாவுக்குப் பிறகு திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 1952-ல் முதல் 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. திமுக, அதிமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும், உழைப்பாளர் கட்சி மற்றும் சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளது.

1952 முதல் 2006 வரை பொதுத் தொகுதியாக இருந்த திண்டிவனம், தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கடந்த 2011-ல் இருந்து பட்டியலின மக்களுக்கான தொகுதியாக மாற்றப்பட்டு, தேர்தலை சந்தித்து வருகிறது. வன்னியர்கள், பட்டியலின மக்கள் என 70 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

முதலியார், உடையார், நாயுடு, செட்டியார், மீனவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜெயின் சமுதாயத்தினரும் கணிசமாக வாழ்கின்றனர்.

2026 தேர்தலில் அதிமுக மீண்டும் களம் இறங்குகிறது. சிட்டிங் எம்எல்ஏ அர்ஜுனன் போட்டியிடுகிறார். 2021-ல் தோல்வி அடைந்த திமுக, இம்முறை கூட்டணி கட்சியான விசிகவுக்கு ஒதுக்கி இருக்கிறது. இக்கட்சி சார்பில் வன்னி அரசு போட்டியிடுகிறார்.

வானூர் தொகுதியில் கடந்த 2021-ல் பெற்ற தோல்வியால், திண்டிவனத்துக்கு வன்னி அரசு இடம்பெயர்ந்துள்ளார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் பேச்சிமுத்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சக்திவேல் ஆகியோர் களத்தில் உள்ளனர். இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்களை நாதக, தவெக தட்டி பறிக்கக்கூடும் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின், திண்டிவனத்தில் விசிக தலைவர் திருமாவளவன், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரது பிரச்சாரங்கள், விசிக வேட்பாளருக்கு துணை நிற்கிறது. விழுப்புரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பிரச்சாரத்துடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பிரச்சாரமும் அதிமுக வேட்பாளருக்கு வலு சேர்க்கிறது.

அதேநேரத்தில் நாதக, தவெக வேட்பாளர்கள் சுயம்புவாக பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களது கட்சி தலைவர்கள் வராததால் ஏமாற்றத்துடன் உள்ளனர். மேலும், தங்கள் கட்சியின் தேர்தல் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சென்று, நான்கு வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்கின்றனர்.

மக்களின் எதிர்பார்ப்புகள்

திண்டிவனம் அடுத்த வெண் மணியாத்தூரில் உள்ள சிப்காட்டில், சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. பெரிய அளவிலான தொழிற்சாலையை தொடங்கி, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கைகள் இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது.

திண்டிவனம் பகுதியில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூக்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. எனவே, திண்டிவனம் பகுதியில் சென்ட் தொழிற்சாலை தொடங்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

இதன் மூலம் விவசாய சாகுபடி பரப்பளவும் அதிகரிக்கும். காய்கறிகள் சாகுபடியும் அதிகம் உள்ளதால், காய்கறிகளை பதப்படுத்தும் கிடங்கு அமைத்து கொடுக்க வேண்டும். நெல் மற்றும் கரும்பு சாகுபடியும் அதிகளவு இருப்பதால், கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும். தேவைக்கு ஏற்ற இடங்களில் தாமதமின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். தானிய சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும்.

மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்கள் முக்கியத்துவம் பெற்றதாகும். இத்தொழிலில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை என்பது அவசியமாகிறது. மரக்காணத்தை ஒட்டி 13 மீனவ கிராமங்கள் உள்ளன. கடல் அலைகளால் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டும்.

மரக்காணம் சுற்றுப் பகுதியில் கடல் நீர் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு தன்மையுடன் இருப்பதால் விவசாயம் கைகொடுக்கவில்லை. சென்னை, புதுச்சேரிக்கு வேலைக்காக பலரும் இடம்பெயர்ந்துள்ளனர். எனவே, இளைஞர்கள் மற்றும் கிராம மக்களின் நலன் கருதி, மரக்காணத்தில் தொழிற்பேட்டை மற்றும் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கைவிடப்பட்டது. விழுப்புரம் பிரச்சாரத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட ரூ.1,500 கோடி மதிப்பிலான கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என உறுதி அளித்துள்ளார்.

அரசு வேளாண் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு ஐடிஐ தொடங்க வேண்டும். மூடப்பட்ட வேளாண் ஆராய்ச்சி மையத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.

ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை புனரமைக்க வேண்டும். திண்டிவனம் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுத்து, நகர பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும்.

ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து, தொலைதூரங்களில் இருந்து விரைவு, அதிவிரைவு ரயில்களை திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம் தொகுதியில் நீர் மேலாண்மையை பாதுகாக்க, ஏரி மற்றும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை புனரமைக்க வேண்டும்.

கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை காலங்களில் தடையின்றி கால்வாய்களில் தண்ணீர் சென்று ஏரிகளை நிரப்ப வழிகாண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள் - 1,07,496

பெண்கள் - 1,11,749

மூன்றாம் பாலினத்தவர் - 11

மொத்தம் - 2,19,256

அதிமுக Vs விசிக: திண்டிவனம் தொகுதி யாருக்கு சாதகம்?
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in