திருப்பரங்குன்றம் தீர்ப்பு சொல்வது என்ன? - ‘பைபிள்’ மேற்கோள் முதல் அரசு மீதான விமர்சனம் வரை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்தது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் கோயில் செயல் அலுவலர், மதுரை ஆட்சியர், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். மலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க பொருத்தமான, அவசியமான நிபந்தனைகளை மத்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும். தமிழ் மாதமான கார்த்திகையில், வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும்.

தீபம் ஏற்றச் செல்லும் கோயில் தரப்பு குழுவுடன் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தீபம் ஏற்றும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது நடைமுறையில் இல்லாத வழக்கம் என்று அரசும், கோயில் நிர்வாகமும் கூறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அரசு அச்சப்படுவது அபத்தமானது.

அரசு தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் நிகழக் கூடும். எந்த அரசும், தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவுக்கு தரம் தாழக் கூடாது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக் கூடும் என்று மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம், அவர்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனையே தவிர வேறில்லை. ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்துக்கு எதிராக சந்தேகம் கொள்ள வைக்கவே இது செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு 170 பக்கங்கள் கொண்டது. தீர்ப்பின் தொடக்கத்தில் பைபிள் வசனத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். ‘கடவுள், ஒளி உண்டாகக் கடவது என்றார், உடனே ஒளி உண்டாயிற்று’- இது பிரபலமான விவிலியத்தில் ஆதியாகமம் 1:3-ல் இடம் பெற்றுள்ள வாக்கியமாகும். இதில் கடவுள் ஒளியைத் தம் வார்த்தையால் தோற்றுவிக்கிறார். இது படைப்பு, நம்பிக்கை மற்றும் தெய்வீக சக்தியைக் குறிக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு விவகாரம், துரதிருஷ்டவசமாக சில சக்திகளால் பூதாகர மாக்கப்பட்டுள்ளது. இதை வைத்து நீதித்துறையை மனச்சோர்வடையச் செய்யவும், இழிவுபடுத்தவும் முயற்சிகளும் நிகழ்ந்தன. இந்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்தபோது ​​மத்தியஸ்தம் மூலம் சுமுகத் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வ தற்கான வாய்ப்புகள் இருப்பதாக உணர்ந்தோம். இருப்பினும் வாதங்களை முன்வைக்கும்போது ​இரு சமூகங்கள் இடையே பகைமை நீடிக்கும் வரை தங்களுக்கு லாபம் என நினைத்து சூழலை கெடுப்பதற்கு பலர் காத்திருப்பதை நாங்கள் உணர்ந்தோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தீர்ப்பு சொல்வது என்ன? - ‘பைபிள்’ மேற்கோள் முதல் அரசு மீதான விமர்சனம் வரை
ஜனநாயகன் முதல் அரசன் வரை: கோலிவுட் 2026-ன் ‘மெகா’ லிஸ்ட்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in