100 நாள் வேலைத் திட்டம் - மாற்றங்கள் என்னென்ன?

கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எம்ஜிஎன்ஆர்இஜிஏ (MGNREGA) எனப்படும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இந்த திட்டத்தின் பெயரை, ‘விக்‌ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் - கிராமின்’ (VIKSIT BHARAT - GUARANTEE FOR ROZGAR AND AJEEVIKA MISSION - GRAMIN) என என பெயர் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் சுருக்கம் விபி-ஜி ஆர்ஏஎம் ஜி (VB-G RAM G) என்பதாகும்.

இது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று, மகாத்மா காந்தி பெயரில் உள்ள திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, “மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் அவர் என் குடும்ப உறுப்பினரைப் போன்றவர். இது ஒட்டுமொத்த நாட்டின் உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

புதிய மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, காங்கிரஸ் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இப்போதைய திட்டம் ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு 100 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கும் நிலையில், புதிய மசோதா 125 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கிறது.

இப்போதைய திட்டத்துக்கான முழு நிதியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், புதிய மசோதாவின்படி, மத்திய அரசும் மாநில அரசுகளும் 60 இஸ்ட் 40 என்ற விகிதத்தில் நிதிச் சுமையை ஏற்க வேண்டும். அதேநேரம், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலையை ஒட்டிய மாநிலங்கள் 10 சதவீத நிதி வழங்கினால் போதும்.

ஊரக வேலை திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என புகார் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விவசாயப் பணி உச்சத்தில் இருக்கும் காலங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை மாநில அரசுகள் நிறுத்தி வைக்க புதிய மசோதா வகை செய்கிறது.

புதிய ஊரக வேலை திட்டப் பணிகள், விக்‌ஷித் பாரத் தேசிய ஊரக கட்டமைப்பு திட்டத்துடன் இணைக்கப்படும். குறிப்பாக, தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், ஊரக உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான கட்டமைப்பு பணிகள், மோசமான காலநிலையை மட்டுப்டுத்தும் பணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மட்டுமின்றி, ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் ஒட்டுமொத்த திட்டமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.

100 நாள் வேலைத் திட்டம் - மாற்றங்கள் என்னென்ன?
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in