நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல்
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!
Updated on
1 min read

நெல்லை: திருநெல்வேலியில் ரூ.56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 21-ம் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தமிழர்களின் பண்பாடு, ஆரம்ப காலம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை முதல்வரே தேர்வு செய்தார்.

இந்த அருங்காட்சியகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ம் தேதி அடிக்கல் நாட்டியதுடன் ரூ.56.36 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார். இதற்காக வருவாய்த் துறை மூலம் 13.2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப் பணித்துறையின் மூலம் மொத்தம் 7 கட்டிடத் தொகுதிகளாக (நிர்வாக கட்டிடம், சிவகளை கட்டிடம், கொற்கை கட்டிடம் ஏ மற்றும் பி, ஆதிச்சநல்லூர் கட்டிடம் ஏ மற்றும் பி, சுகாதார வசதி கட்டிடம்) பிரிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

மலையை ஒட்டி இருக்கும் இந்த இடம் இயற்கையாகவே அழகானது. தோட்டக்கலை நிபுணர்களைக் கொண்டு பூந்தோட்டம் அமைக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தின் உள்ளே, தொல்பொருட்களை காட்சிப்படுத்துதல் மற்றும் அவற்றை பற்றிய படங்கள் காட்டுதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதைவிட இது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கொற்கையில் முத்துக் குளித்தலையும், அதன் அபாயங்களையும், முத்துக்கள் எப்படி ரோமாபுரி போன்ற நாடுகளுக்கு சென்றன என்பதையும் பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோல காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இந்தியாவில் மும்பைக்கு அருகிலுள்ள ஆய்வகங்களில் ஆய்வு செய்தபோது, அந்த பகுதிகளில் இரும்பு பயன்பாட்டின் காலம் 5,300 ஆண்டுகள் பழமையானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆய்வகங்களின் முடிவுகளும் ஒரே நேரத்தில் வந்திருப்பது தமிழர்களின் தொன்மையை உறுதிப்படுத்துகிறது.

தற்போது அருங்காட்சியக பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள உள் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன. அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 21-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, நிதித்துறை முதன்மை செயலர் உதயச்சந்திரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!
“அப்டேட் இல்லாத உதயநிதி” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in