‘மா.செ’-க்களால் திணறும் தவெக... உள்ளடி அரசியலில் திமுக?

மன்றத்திலும் கட்சியிலும் பாடுபட்டு உழைத்த தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி தராதது ஏன் என கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் தலைவர் விஜய்யின் காரை தனது ஆதரவாளர்கள் சகிதம் மறித்து நியாயம் கேட்டதன் மூலம் ஒரு அக்மார்க் அரசியல் கட்சிக்கான அந்தஸ்தை பெற்றிருக்கிறது தவெக.

நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களில், விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்தவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தி இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேசி வந்தார். ஆனால், “உழைத்தவர்களுக்கு கட்சியில் உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. பேச்சுக்கு நேர்மாறாக ஆனந்த் செயல்படுகிறார்” என தவெக-வினர் புலம்பி வந்தனர்.

பதவி கிடைக்காத விரக்தியில் பல இடங்களில் நிர்வாகிகள் போர்க்கொடியும் தூக்கினர். இதையெல்லாம் சமாளிக்க, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றெல்லாம் கூட நியமனங்கள் நடைபெற்றன. இதனால் 120 மாவட்டங்கள் 128 மாவட்டங்களாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனங்கள் நடைபெற்றது. என்றாலும் உட்கட்சி மோதல்களும் பதவிச் சண்டைகளும் தவெக-வில் பஞ்சமில்லாமல் தொடர்ந்தன.

இந்த நிலையில் தான், தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகியான அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப் படாததற்கு காரணம் கேட்டு கடந்த 23-ம் தேதி பனையூரில் விஜய்யின் காரை வழிமறித்தும், கட்சி அலுவலக வாசலில் ஆதரவாளர்கள் சகிதம் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டது கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், சாதி, மதம் பார்த்து பதவிகளை வழங்குவதாகவும், பெண்களை உருவக்கேலி செய்வதாகவும் மதுரை மாவட்ட தவெக செயலாளர் கல்லாணை விஜய்யை கண்டித்து கட்சியின் பெண் நிர்வாகிகள் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அமைச்சரிடம் பணம் பெற்றுக்கொண்டு, மதுரையில் எவ்வித போராட்டத்தையும் முன்னெடுக்காமல் இருப்பதாகவும் அவர் மீது புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

மதுரையில் மட்டுமல்லாது இன்னும் பல மாவட்டங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் திமுக-விடம் சோரம் போய் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதாக புலம்பல்கள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. அண்மையில், வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ‘சுறா’ வேலு தங்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்காமல் தட்டிக் கழிப்பதாகவும் அம்மாவட்ட நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.

இப்படி வந்து குவியும் புகார்களால் தலைமையும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் உட்கட்சி பிரச்சினைகளே தலைமைக்கு பெரும் தலையிடியாக இருப்பதாக தவெக-வினர் சொல்லித் தவிக்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், திமுக தரப்பிடம் தொடர்பில் இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் குறித்த பட்டியலை கையில் வைத்துக் கொண்டு பேசிய தலைமை நிர்வாகிகள், அப்படியானவர்களை எல்லாம் நேரடியாகவே எச்சரித்ததாகவும் உட்கட்சி பிரச்சினைகள் ஏதும் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தியதாகவும் சொல்கிறார்கள்.

‘மா.செ’-க்களால் திணறும் தவெக... உள்ளடி அரசியலில் திமுக?
யார் இந்த தாரிக் ரஹ்மான்? - வங்கதேச அரசியலில் திருப்பம்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in