யார் இந்த தாரிக் ரஹ்மான்? - வங்கதேச அரசியலில் திருப்பம்!

வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் மகனும், BNP எனப்படும் வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி​யின் செயல் தலை​வருமான தாரிக் ரஹ்​மான் 17 ஆண்​டு​களுக்கு பிறகு ​நா​டு திரும்பி​னார். லட்சக்கணக்கானோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தது, வங்கதேச அரசியலில் முக்கியத் திருப்பமாக பார்க்கப்படுகிறது. யார் இந்த தாரிக் ரஹ்மான் என சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிவோம்.

வங்கதேசத்தில் மாணவர்​களின் போராட்​டத்​தால் பிரதமர் பதவியை ராஜி​னாமா செய்த ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். வங்கதேசத்தில் தற்​போது முகமது யூனுஸ் தலைமையி​லான இடைக்​கால அரசுஉள்ளது. அங்கு பிப்​ரவரி 12-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. தற்​போதைய சூழலில் வங்​கதேச தேசி​யவாத கட்சி, மாணவர் சங்​கங்​கள் உரு​வாக்​கிய தேசிய மக்​கள் கட்சி, அடிப்​படை​வாத கட்சியான ஜமாத்-இ-இஸ்​லாமி ஆகியவை தேர்​தல் களத்தில் உள்​ளன.

இதனிடையே, வங்​கதேச முன்​னாள் பிரதமரும், BNP கட்​சி​யின் தலை​வரு​மான 80 வயது கலீதா ஜியா உடல்​நலக் ​குறை​வால் பாதிக்​கப்​பட்டுள்​ளார். இந்தச் சூழலில்தான் கலீதா ஜியா​வின் மகனும், BNP கட்​சி​யின் செயல் தலை​வரு​மான தாரிக் ரஹ்​மான் பிரிட்​டனில் இருந்து வங்​கதேச தலைநகர் டாக்கா​வுக்கு திரும்​பி​னார்.

அவாமி லீக் கட்சி கூட்​டத்​தில் கையெறி குண்​டு​களை வீசிய வழக்​கில் கடந்த 2004-ம் ஆண்​டில் தாரிக் ரஹ்​மானுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. அதோடு அவர் மீது 84 ஊழல் வழக்​கு​களும் பதிவு செய்​யப்​பட்​டன. இதில் பல்​வேறு வழக்​கு​களில் அடுத்​தடுத்து தண்டனை​கள் விதிக்​கப்​பட்​டன. கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் கைது செய்​யப்​பட்​டார்.

அப்​போதைய பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுடன் ரகசி​ய​மாக உடன்​பாடு செய்துகொண்ட தாரிக், கடந்த 2008-ம் ஆண்டு செப்​டம்​பரில் ஜாமீனில் விடு​தலை​யா​னார். அதே ஆண்டு செப்​டம்​பரில் மனை​வி, குழந்​தை​யுடன் இங்கிலாந்து தலைநகர் லண்​டனில் அவர் குடியேறி​னார். சுமார் 17 ஆண்​டு​கள் அரசி​யல் துறவறம் பூண்​டிருந்த அவர் மீண்​டும் வங்​கதேச அரசி​யலில் கால் பதிக்​கிறார். வரும் பொதுத்​ தேர்​தலில் BNP கட்​சி​யின் பிரதமர் வேட்​பாள​ராக அவர் களமிறங்குகிறார்.

டாக்கா விமான நிலை​யத்​தில் லட்சக்கணக்கான BNP தொண்​டர்​கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்​மானை வரவேற்​றனர். அவரது மனைவி ஜூபை​தா, மகள் ஜைமா ஆகியோ​ரும் உடன் வந்​துள்​ளனர். குண்டுதுளைக்​காத பேருந்​தில் தாரிக் ரஹ்​மானும் குடும்​பத்​தினரும் டாக்காவில் உள்ள வீட்​டுக்கு அழைத்​துச் செல்லப்​பட்​டனர்.

டாக்கா திரும்​பிய பிறகு, தாரிக் ரஹ்​மான், இடைக்​கால அரசின் தலை​வர் முகமது யூனுஸை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது, போதிய பாது​காப்பு வழங்​கியதற்​காக அவர் யூனுஸுக்கு நன்றி தெரி​வித்​தார்.

வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான், “வங்கதேச நலனுக்கான திட்டத்துடன் வந்திருக்கிறேன். இதை நடைமுறைப்படுத்த வங்கதேச மக்களின் ஆதரவு தேவை. நம் நாட்டில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவரும் உள்ளனர். அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பான தேசமாக வங்கதேசத்தை உருவாக்குவோம்” என்று முழங்கியிருக்கிறார் தாரிக் ரஹ்மான்.

பிப்​ர​வரி 12-ம் தேதி பொதுத் ​தேர்​தலில் ஹசீ​னா​வின் கட்சி போட்​டி​யிட தடை வி​திக்​கப்பட்டு உள்ள நிலை​யில், BNP வெற்​றிபெற்​று கலீ​தா ஜியா​வின்​ மகன் தா​ரிக்​ ரஹ்​மான்​ பிரதம​ராக பதவி​யேற்​க வாய்ப்​பு உள்ள​தாக அரசியல்​ நோக்​கர்​கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த தாரிக் ரஹ்மான்? - வங்கதேச அரசியலில் திருப்பம்!
வன்முறை, கலவரம், அச்சம்... வங்கதேசத்தில் நடப்பது என்ன?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in