திமுக vs அதிமுக... யாரு கெத்து? - இது தென்மாவட்ட நிலவரம்
தங்கள் பக்கம் வந்திருக்கும் ஓபிஎஸ்ஸை வைத்து திமுகவும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை வளைக்க ஒரு கணக்குப் போடுகிறது. இதுவரை பேசாமலே இருந்து பழகிவிட்ட ஓபிஎஸ், இந்தத் தேர்தலில் செலவே இல்லாமல் திமுக-வுக்கு பிரச்சார பீரங்கியாக இருக்கப் போகிறார். சாதிய கூட்டணி கணக்குப் போட்டு அன்று கருணாஸுக்கு சீட் கொடுத்தார் ஜெயலலிதா. பத்து ஆண்டுகள் கழித்து அதே ஃபார்முலாவை கையிலெடுத்து திமுக-வும் இப்போது அதே கருணாஸை உதயசூரியனில் நிறுத்துகிறது. ஓபிஎஸ், கருணாஸ் எல்லாம் மக்கள் தலைவர்கள் இல்லை என்றாலும் “முக்குலத்து தலைவர்களை திமுக கைவிடாது” என்று பேசவைப்பதே இதன் நோக்கம்.
கடந்த தேர்தலில் தினகரனுக்கு கைகொடுத்த எஸ்டிபிஐ கட்சியையும் சந்தடிச் சாக்கில் தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட்டது திமுக. இது மாத்திரமல்லாது, அடுத்து வரும் நாட்களில் சமுதாய அமைப்புகளை வரிசையாக அறிவாலயம் வரவைத்து. “எங்கள் ஆதரவு திமுக கூட்டணிக்குத் தான்” என சொல்லவைக்கவும் ஒரு பிளான் ரெடியாகிறது. இந்த மூவ்கள் எல்லாமே, பார்டரில் நிற்கும் திமுக கூட்டணியின் வேட்பாளர்களை ‘ஜஸ்ட் பாஸ்’ போட்டாவது கோட்டைக்கு அனுப்பி வைக்கும் என நம்புகிறார் ஸ்டாலின்.
ஆனால், கடந்த முறை பழனிசாமி மீதிருந்த கோபத்தில் தினகரனை ஆதரித்த தென் மாவட்ட முக்குலத்து மக்கள், இம்முறை ஓபிஎஸ் இருக்கிறார் என்பதற்காகவும் அவர் பேச்சை நம்பியும் திமுக-வுக்கு வாக்களிப்பார்களா என்பதை தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் தான் தெரியும். தென் மாவட்ட தொகுதிகளை தக்கவைக்க திமுக இப்படி மைக்ரோ லெவலில் சிந்தித்துக் கொண்டிருக்க, “எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்த தென் மாவட்ட மக்கள் இந்தத் தேர்தலில் என்டிஏ அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமையவும் துணை நிற்பார்கள்” என்கிறார் பழனிசாமி.
கூட்டணி பலமும் அரசுக்கு எதிரான அதிருப்தி அலைகளும் தமிழகம் முழுமைக்குமே தங்களை ஜெயிக்க வைக்கும் என நினைக்கும் அதிமுகவோ, திமுக அமைச்சர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் ஏவக் காத்திருக்கும் அம்புகளையும் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறது.