நாதகவுக்கு இது ‘டஃப்’ தேர்தல்... வெற்றி கணக்கை தொடங்குவரா சீமான்?

இந்த முறையும் தனித்துப் போட்டி என முடிவெடுத்து முதல் ஆளாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் சீமான். நாம் தமிழர் கட்சி இம்முறையாவது சட்டப்பேரவைக்குள் நுழையுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. 2016 முதல் படிப்படியாக வாக்கு வங்கியை உயர்த்தினாலும், நாம் தமிழர் கட்சியால் இதுவரை ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை. குறைந்தபட்சம் சீமான் நிற்கும் தொகுதியில் கூட இதுவரை வெற்றி வசமாகவில்லை என்பதுதான் கள நிலவரம். இந்த முறை விஜய்யும் களத்துக்கு வந்துள்ளதால், நாம் தமிழர் கட்சி நெருக்கடியில் இருப்பது கண்கூடு.

விஜயகாந்துக்குப் பின்னர் தமிழகத்தில் வலுவான மூன்றாவது பெரிய ஆளுமை யாரும் இல்லாத சூழல் இருந்தது. அந்த இடத்தை சீமான் நிரப்பி வந்தார். எனவேதான், திமுக, அதிமுகவை விரும்பாத வாக்காளர்களின் முக்கிய தேர்வாக நாம் தமிழர் கட்சி இருந்தது. ஆனால், இம்முறை மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களுக்கு விஜய் என்னும் இன்னொரு தேர்வும் உள்ளது. எனவே, இம்முறை இவர்களின் ஆதரவை இருவரில் யார் கூடுதலாக பெறுவார் என்பதே எதிர்பார்ப்பு.

சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, எளிய மக்களுக்கு வாய்ப்பு, பிராமணர்கள் முதல் பிறமொழியினர் வரை அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பு, சூழலியல் சிக்கல்களை முன்வைத்து பிரச்சாரம், கொள்கைகளை முன்வைத்த அரசியல் என சமீபத்தில் சீமான் நடத்திய ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ பெரும் பேசுபொருளானது. எவ்வித எதிர்பார்ப்பும் அற்று, கைக்காசை போட்டு இந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் லட்சத்தை தாண்டியது மற்ற கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது.

கூட்டம் கூடுகிறது, கொள்கை இருக்கிறது, நட்சத்திர பேச்சாளர்கள் சொல்மழை பொழிகின்றனர், சீமானின் எழுச்சிமிகு பேச்சு இருக்கிறது என்பதெல்லாம் நாதகவின் பலம். ஆனால், இம்முறை நிச்சயம் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் ஆழமாக நம்புகின்றனர். அதற்கேற்ப வியூகம் சீமானிடம் உள்ளதா?

சீமான் இம்முறை தன் சொந்த தொகுதியான காரைக்குடியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாக களமிறங்காது என்பது பிளஸ். பாஜக, காங்கிரஸ், தவெக என மும்முனைப் போட்டியை சீமான் எதிர்கொள்ள வேண்டும். அதனையும் தாண்டி சீமான் வெற்றிபெற சில வாய்ப்புகள் கண்முன்னே தெரிகிறது. முதல்முறையாக சீமானை சட்டப்பேரவைக்கு அனுப்பலாமா என்பதை காரைக்குடி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். காரைக்குடியைப் போல தென் தமிழகத்தில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த சில தொகுதிகளில் நாதகவின் பலம் அதிகமாக உள்ளது. அங்கே தவெகவும் வாக்குகளைப் பிரிப்பதால் தங்களால் சில தொகுதிகளை வெல்ல முடியும் என்று சீமான் கணக்குப் போடுகிறார்.

அதேபோல, மற்ற கட்சிகளையெல்லாம் தாண்டி நாதகவினர் விஜய்யை ரவுண்டு கட்டி விமர்சித்து வருகின்றனர். எனவே விஜய்யின் தாக்கத்தை சமாளித்து, குறைந்த பட்சம் இம்முறை 8.2 சதவீத வாக்குகளையாவது நாதக தக்கவைக்க வேண்டும். அதனையும் மனதில் வைத்தே சீமான் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். இப்போதைய சூழலில், திமுக - அதிமுக பிரதான போட்டி என மாறி நிற்கிறது. அடுத்தடுத்த இடங்களை பிடிக்க தவெக - நாதக மல்லுக்கட்டுகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்த தேர்தல் நிச்சயமாக நாதகவுக்கு மிகப் பெரிய அக்னிப் பரீட்சைதான், அதில் சீமான் வெல்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நாதகவுக்கு இது ‘டஃப்’ தேர்தல்... வெற்றி கணக்கை தொடங்குவரா சீமான்?
ஈரான் போர் தாக்கம்: கச்சா எண்ணெய் ‘நெருக்கடி’யை சமாளிக்குமா இந்தியா?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in