ஈரான் போர் தாக்கம்: கச்சா எண்ணெய் ‘நெருக்கடி’யை சமாளிக்குமா இந்தியா?
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரான் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ - கடற்படை முகாம்கள், தூதரங்களைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
இந்தப் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் கிழக்கு - மேற்கு இடையிலான 86 சதவீத எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிசக்தி சந்தை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. கடற்படை பகுப்பாய்வு நிறுவனங்களான விண்ட்வர்ட் மற்றும் கெப்லர் தரவுகளின்படி, இந்த நீர்வழிப்பாதை அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை என்றாலும், நடைமுறையில் அது முடங்கியே உள்ளது.
இந்த முடக்கம் சில நாட்களுக்குத் தொடர்ந்தால், கப்பல்களின் வரிசை அதிகரிக்கும் மற்றும் விநியோகம் முற்றிலும் சீர்குலையும். வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகை ஏற்கெனவே பலமடங்கு உயர்ந்துள்ளது. இது உலகளாவிய எரிபொருள் விலையில் பெரும் உயர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை சமாளிப்பது எப்படி என்பது பற்றி இந்தியா தீவிரமாக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது, எல்பிஜி சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோல, இந்தியன் ஆயில், எச்பிசிஎல், பிபிசிஎல் ஆகிய அரசு நிறுவனங்களின் குறிப்பிட்ட சில ஆலைகள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, கச்சா எண்ணெய் விநியோகம் பற்றி ஆய்வு செய்தார். பின்னர் அவர் எக்ஸ் தளத்தில், ‘நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நாட்டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து அவசியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என பதிவிட்டுள்ளார்.
இந்தியா தனது பெட்ரோல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், டீசல் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கையும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால், எல்.பி.ஜி தேவையில் மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி செய்கிறது. இதில் 85 முதல் 90 சதவீதம் வரை வளைகுடா நாடுகளிலிருந்தே வருகிறது. தற்போதுள்ள கையிருப்பு 14 நாட்களுக்குக் குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு சுமார் 74 நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று அமைச்சர் புரி கூறியுள்ளார். இதில் கச்சா எண்ணெய் 17 முதல் 18 நாட்களுக்கும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் 20 முதல் 21 நாட்களுக்கும், எல்என்ஜி 10 முதல் 12 நாட்களுக்கும் போதுமானதாக இருக்கும்.
ஈரானால் நீண்ட காலத்துக்கு போரைத் தொடர முடியாது என்றும், நிலைமை விரைவில் சீராகும் என்றும் சில நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் மேற்கு ஆசியப் போர் சில வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் இந்தியா தனது எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடும் சவால்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் எனத் தெரிகிறது.