‘நோ’ ஆட்சியில் பங்கு - காங்கிரஸை சீண்டும் ஸ்டாலின்!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் ஒத்துவராது என்று உறுதியாக சொல்லியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என கிளப்பி விட்டு, சிலர் சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அது எடுபடாது.

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும்” என பொட்டில் அடித்தாற்போல சொல்லியுள்ளார். இதற்கு உடனடியாக பதிலளித்த காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி, “இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கூட்டணி அரசை ஏற்கும் நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்காது? இந்தியாவில் மற்ற மாநில மக்களை போல் தமிழ்நாட்டு மக்களும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர். கூட்டணி ஆட்சி அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை’ எனத் தெரிவித்தார்.

இவரின் கருத்தை ஆமோதித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ‘மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது காங்கிரஸ் கட்சியின் தவறு’ எனத் தெரிவித்தார். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “முதல்வர் அவரின் கருத்தை கூறியுள்ளார். எங்கள் தேசிய தலைவர்களும், முதல்வரும் அமர்ந்து பேசி நல்ல முடிவை எடுப்பார்கள். கூட்டணியில் விரிசல் வருமா என பலரும் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.

திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி சலசலப்பு தொடர்கதையாகி வருவது அந்த கட்சிகளின் தொண்டர்களிடையே வார்த்தை மோதலுக்கும் வழிவகுத்துள்ளது. இவ்விரு கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலமாக தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின், அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல் காந்தி என் சகோதரர் போன்றவர் எனச் சொல்லியுள்ளார். ஆனால், ‘ஆட்சியில் பங்கு’ என குரலெழுப்பும் அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். ஆட்சியில் பங்கு இல்லை என உறுதியாக மறுத்திருக்கிறார் ஸ்டாலின். அடுத்தகட்டமாக காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.

‘நோ’ ஆட்சியில் பங்கு - காங்கிரஸை சீண்டும் ஸ்டாலின்!
வானில் ஓர் அபூர்வ நிகழ்வு... 6 கோள்கள் அணிவகுப்பு - என்ன ஸ்பெஷல்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in