7 தொகுதிக்கு ‘ஸ்கெட்ச்’ - சாதிப்பாரா சி.வி.சண்முகம்?
“உங்களுக்குத் தேவை ஏழு தொகுதிகளையும் அதிமுக வென்றெடுக்க வேண்டும் என்பதுதானே... அதற்கு நான் பொறுப்பு” என்று சொல்லி தனது மாவட்டத்தை துண்டு போடவிடாமல் பார்த்துக்கொண்டார் அதிமுக-வின் வடக்கு மண்டல தளபதி என வர்ணிக்கப்படும் சி.வி.சண்முகம். சொன்னபடி மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம் சண்முகத்துக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
ஆனால், கள நிலவரம் அவர் நினைப்பதை சாதித்துக் கொடுக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், இப்போதைய நிலவரப்படி, வானூர் தொகுதி மட்டுமே அதிமுக-வுக்கு சாதகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மற்ற 6 தொகுதிகளிலும் திமுக-வின் கையே ஓங்கி நிற்கிறது.
போதாக்குறைக்கு, உள்ளடி வேலைக்கும் அதிமுக-வில் ஆட்கள் தயாராய் இருக்கிறார்கள். கடந்த முறை கரைசேர முடியாமல் போனதால் இம்முறை விழுப்புரத்தை விட்டுவிட்டு மயிலம் தொகுதியில் சண்முகம் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அங்கேயும் திமுக தரப்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட்டால் சண்முகத்தின் வெற்றி சவாலாகலாம் என்கிறார்கள்.
இதையெல்லாம் கடந்து, தேர்தலில் அதிமுக-வை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுவர வேண்டுமானால், கடந்த முறையைப் போல சகோதரரின் பேச்சை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு தகுதியான, வலிமையான வேட்பாளர்களை களமிறக்க சண்முகம் தயாராக வேண்டும்” என்கிறார்கள் அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள். தானும் வென்று மற்றவர்களையும் ஜெயிக்க வைத்து சி.வி.சண்முகம் அதிமுக தலைமைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.