Thiruchitrambalam: உங்கள் ஷோபனாவை கண்டு கொண்டீர்களா? | திரை தேவதைகள் 05

Thiruchitrambalam: உங்கள் ஷோபனாவை கண்டு கொண்டீர்களா? | திரை தேவதைகள் 05
Updated on
5 min read

‘விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவை கண்டு கொண்டேன்...’ என்று காதல் முகத்தை தூரத்து வெண்ணிலாவாக உருவகப்படுத்தி வரிந்து எழுதப்படும் கவிதை வரிகளை கேட்டுக் கேட்டு பழக்கப்பட்டுப் போனவர்கள் என்பதாலோ என்னவோ, நமக்கு வரும் காதல் உறவானதும் அத்தகைய ரொமான்டிசைஸ்டு மெனக்கெடல்களோடு நம் கைகூட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நியூ நார்மலாகிவிட்டன

அதன் விளைவு, அவள் வருகையில் தென்றல் கவரிகள் வீச வேண்டும், தூரத்தில் தெரிகையில் மணியோசை கேட்க வேண்டும்; கூடவே மின்சார பல்புகளாவது ஒளிர்ந்து அது காதல் தான், அவள்தான் நமக்கானவள் என்று அறிகுறிகளால் உணர்த்த வேண்டும், பின்னர் என் மூச்சவள், பேச்சவள் என உருக வேண்டும் என்றெல்லாம் தெருமுனை காதல்கூட சினிமாட்டிக் காதல் ஜிகினாவாகிக் கிடக்கிறது.

தேவதைக்கு வெள்ளை ஃப்ராக்கும், முதுகுக்குப் பின்னால் றெக்கைகளும், கைகளில் மந்திரக் கோலும் கொடுத்து வைத்திருக்கும் நாம்தான் காதலுக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸையும் கொடுத்து வைத்திருக்கிறோம்.

உண்மையின் முகம் உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது போலவே காதலும் அத்தனை எளிமையானது. ஆனால்,‘திரு’-வுக்கு ஷோபனாவின் காதல் தெரியாமல் போனதுபோல் நம்மில் நிறைய பேருக்கு அருகிலிருக்கும் ஷோபனாக்களைத் தெரிவதில்லை.

காதலர் தினத்தை ஒட்டி,‘திருச்சிற்றம்பலம்’ ஷோபனாவை கொண்டாடுவது காதலை ஐன்ஸ்டீன் சமன்போடு போல் கடினமாக்கி வைத்திருப்போருக்கு, ‘நாம் அன்பை எங்கெங்கோ, எப்படி எப்படியோ, தூர தூரமாகத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த அன்பு நம் அருகிலேயேகூட இருக்கலாம்’ என்பதை உணரவைக்கும்.

மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனன் தனது ஷோபனா கதாபாத்திரத்துக்காக தேசிய விருது பெற்றார்.

இனி கதை அலசலுக்குள் பயணிப்போம். திரு (தனுஷ்) - ஷோபனாவுக்கு (நித்யா மேனன்) இடையே குழந்தைப் பருவம் தொட்டே நட்பு. ஷோபனா படித்து ஐடி வேலைக்குச் சென்றுவிடுகிறாள். திரு, உணவு டெலிவரி பணியில் இருக்கிறான். திருவும் பள்ளியில் க்ளாஸ் டாப்பராகவே இருந்துள்ளான். ஆனால், ஒரு விபத்து திருவையும், அவனது குடும்பத்தையும் மொத்தமாகப் புரட்டிப்போட்டு விடுகிறது. பேக் அப் ஏதுமில்லாது மாதச் சம்பளத்தில் குடும்பம் நடத்தும் மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் வாழ்க்கையை முட்டுச்சந்தில் நிறுத்திவிடுபவையாகவே இருக்கின்றன.

அப்படி தனித்துவிடப்பட்ட திரு, தன் தாயையும், தங்கையையும் இழந்த திருவுக்கு நடந்த விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்கிற ஆதங்கம் தந்தை பிரகாஷ் ராஜ் மீது கடுங்கோபமாக திரும்பிவிடுகிறது.

திருவுக்கு அதுவரை பால்ய சிநேகிதியாக இருந்த ஷோபனாவோ அம்மா, தங்கை விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புபவள் போல் ஆகிவிடுகிறாள். வீட்டில் அந்த வெற்றிடத்தை சமையல் தொட்டு அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் தாத்தா திருச்சிற்றம்பல(ழ)ம் நிரப்புகிறார். எந்த சண்டைக்கும் போகாமல், பீர் அடித்தால்கூட வீட்டிலேயே குடித்துவிட்டு கம்மென்று படுத்துக் கொள்பவனாகவே திரு வளர்ந்து நிற்கிறான்.

இந்த நேர்க்கோடு வாழ்க்கையில் ஷோபனாவை தன் குடும்பத்தில் ஒருத்தியாக, தனது ஆத்மார்த்த தோழியாக நினைக்கிறான். அதனால், அவனது காதல் தேடல்கள் வெளியில் நீள்கிறது.

திருவின் காதல் தேடல்கள் வெளியே இருந்தாலும்கூட, படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஷோபனாவுக்கும் திருவுக்குமே நல்ல பொருத்தம் தானே என்று நமக்கு தோன்றும். காரணம், திரு மீது ஷோபனா காட்டும் அன்பானது காதலுக்கான கெமிஸ்ட்ரியிலிருந்து நுணுக்கமாக ஒரு இன்ச் மட்டுமே விலகி நிற்கும்.

அது நமக்குப் புரிந்த அளவுக்கு திருவுக்கு புரியாத நிலையில், தனது பள்ளிப் பருவ க்ரஷ்ஷை சந்தித்ததையும், அவளது தொலைபேசி எண்ணைப் பெற்றதையும் கூட ஷோபனாவிடம்தான் முதலில் பகிர்வான். க்ரஷ்ஷுடனான முதல் ‘டேட்டிங்கை’ சிலாகித்துப் பேசுவது, காதலை சொல்ல ஐடியா கேட்பது என அனைத்துக்கும் அவன் அணுகுவது ஷோபனாவை மட்டும்தான்.

இதுபோன்ற முக்கோணக் காதல் கதைகள் இந்திய சினிமாவில் நிறைய உண்டு. அதிலும் தமிழில் காதலிக்காக தன் காதலை தியாகம் செய்யும் ‘பூவே உனக்காக’ போல, காதலை அடைந்தே தீர ‘பார்த்தேன் ரசித்தேன்’ சிம்ரன் உள்ளடி வேலைகள் போல என்று பல ரகங்கள் உண்டு. ஷோபனா இவற்றில் எதிலும் பொருந்தமாட்டாள்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியில் ஆமீர் கான் - ஊர்மிளா - ஜாக்கி ஷெராஃப் நடிப்பில் வெளியான ‘ரங்கீலா’ வேண்டுமானால் திருச்சிற்றம்பலத்துடன் சற்றே ஒத்துப் போகும். பாலிவுட் ஹீரோயின் கனவில் இருக்கும் மிலி மீது சிறு வயதில் இருந்தே ஈர்க்கப்பட்ட முன்னாவின் காதலும், அவன் பிரிந்து செல்வதாகச் சொல்லும்போதே மிலிக்கு புரியும்.

ஆனால், ஷோபனாவோ மிலியை விட மிதமிஞ்சிய முதர்ச்சி கொண்டவள். அவளுடைய காதலும் அப்படியே.

நட்போ, உறவோ, காதலோ... அது எந்த வடிவ அன்பாக இருந்தாலும் அதில் நம் மீதான அக்கறையை நாம் முன்னிறுத்துவது முதிர்ச்சி. ஒருவேளை ஷோபனாவுக்கு அந்த முதிர்ச்சி இல்லாமல் போயிருந்தால் ஈகோ சிக்கல் தொடங்கி பல மனப் போராட்டங்களுக்கு ஆளாகும் சராசரி ஹீரோயின் ஆகியிருப்பாள்.

மன முதிர்ச்சியின் காரணமாகவே, தியேட்டரில் தன்னை ஒருவன் இழிவுபடுத்த, அதை வேடிக்கைப் பார்த்து திரும்பும் திருவிடம் மவுனமாக தனது அதிருப்தியை தெரிவிப்பதோடு, ‘நீ எனக்காக நின்றிருக்க வேண்டாமா?’ என்று கோபமாகவும் கேட்டுச் செல்வாள். ஆங்கிலத்தில், ‘ascertain yourself' என்றொரு சொற்றொடர் உண்டு. அது செல்ஃபிஷ் என்ற சுயநலத்தைபோல் அல்லாது தன்னை நிறுவுவது என்று பொருள்படும். ஷோபனா நட்பு, அன்பு என்று திரு மீது நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு பழகினாலும், தன்னை நிறுவுவதில் எங்குமே சறுக்க மாட்டாள். எல்லாக் காதலிலும் / உறவிலும் அது அவசியம்.

தான் நேசிக்கும் ஒருவன் தன்னை நட்பாக மட்டுமே பார்க்கிறான் என்பதால் அவள் நட்புக்குள் தன் காதல் ஆசைகளை மூடிவைத்துக் கொள்வாள். திருவுக்கு அவனது க்ரஷ் அனுஷா டிப்ஸ் பணம் கொடுக்க முயற்சித்ததைக் கேட்டு முதலில் சிரித்தாலும், ‘என்னோட ஃப்ரெண்ட நான் ப்ரொட்டக்ட் பண்ண ட்ரை பண்றேன் டா’ என்று தன் ‘ஹார்ம்லெஸ் பொசஷிவனஸை’ க்யூட்டாக பார்வையாளர்களுக்குக் கடத்துவாள்.

நாம் யாரை வேண்டுமானாலும் விரும்பலாம், ஆனால் எதிரில் உள்ளவர்கள் நம் மீது இயல்பாகக் காதல்வயப்பட வேண்டும். அதற்காகத்தான் ஷோபனா பப்பி லவ் காலத்தில் இருந்தே காத்திருக்கிறாள். நாம் விரும்புபவர் நம் மீது கடுகளவேனும் காதல் கெமிஸ்ட்ரி காட்டாவிட்டால் அதை நிர்பந்தித்து, திணிக்க முயற்சிக்காமல் இருப்பது என்பது மெச்சூரிட்டியின் உச்சம் எனலாம். அதுதான் ஷோபனா.

ஷோபனா உணர்ச்சிகளுக்கு தன்னை இழக்காதவள் என்பதற்கு இன்னொரு காட்சியையும் சுட்டிக்காட்டலாம். திருவை அவனது தந்தை அடித்ததை அறிந்து பிரகாஷ் ராஜிடம் பேசும் ஷோபனா, அவர் கையிலிருந்து ஷூவை பறித்து வீசிவிட்டுச் சென்றாலும், திரும்ப வந்து ‘நீங்க பெரியவங்க, உங்களுக்கு என்னை அட்வைஸ் பண்ண வச்சிறாதீங்க’ என்று சொல்லி அந்த ஷூவை பாலிஷ் போட்டு கையில் கொடுத்துச் செல்வாள். காதலோ, கோபமோ ஷோபனாவின் கண்களை எப்போதுமே மறைக்காது.

நகரத்து காதல் எபிசோடுக்கு அனுஷா ‘ஃப்ளர்டிங் வேற காதல் வேற’ என்று விளக்கி முற்றுப்புள்ளி வைக்க. கிராமத்துக்கு செல்லுமிடத்தில் ரஞ்சனி மீது ஈர்ப்பு வருகிறது திருவுக்கு. ‘காதல் வாரதா’ என்று எப்பவும் தயாராக இருப்பவனிடம், ‘நாம ஏன் டச்சில் இருக்க வேண்டும்’ என்று பார்த்தவுடன் வந்த ஈர்ப்புக்கு அடிகொடுத்து திருவை அனுப்பிவைப்பாள் ரஞ்சனி. அந்த சந்திப்புக்குகூட ஷோபனாவே உதவியிருப்பாள். திருவின் சோகத்தை உணர்ந்து ‘சாப்டியா டா?’ என்ற கனிவான விசாரிப்புகளோடு நிறுத்துவாள். அவனுக்கு தனிமை தேவைப்பட்டால் தயங்காமல் அதைத் தருவாள்.

ஷோபனா எத்தனை மெச்சூர்டு வெர்ஷனோ அதேபோல் தான் திருவின் தாத்தாவாக வரும் ‘பழமும்’. ‘காதல்’ தோல்விகளால் திரு தடுமாறும் போதெல்லாம் அவர் தான் அவனுக்கு ஆலோசகர்.

ஏற்கெனவே, திருவின் கவிதையை ‘மனநோயாளிகளாக டா நீங்க’ என்று கேட்கும்போது லவ் என்ற பெயரில் இளைஞர்களின் க்ரிஞ்ச் ஆட்டிட்யூட்களை போகிறப் போக்கில் கலாய்த்திருப்பார். அவரே, ரஞ்சனி நோ சொன்ன பிறகு திருவுக்கு ஏற்படும் பிரேக் அப் மனநிலையையும் டீகோட் செய்வார்.

“ஒரு பொண்ணு அழகா இருந்தா போதுமே. அவளுக்குப் பிடிக்கிற மாதிரி நம்மள மாத்திக்கிட்டு, அவளுக்குப் பிடிச்சதுதான் நமக்கும் பிடிக்கும்னு நம்பிக்கிட்டு, அவ கிடைச்சா போதும்னு அவ போகிற போக்கில் போயி, அதுதான் லவ்வுனு நினைச்சிக்க வேண்டியது. அதனால்தான் லவ்வும், காதலும் பாதியிலேயே பிச்சுக்கிட்டு போயிடுதுன்னு. அது வெறும் ஹார்மோன் சேஞ்ச். கண்ணுக்கு முன்னாடி இருப்பது உங்க கண்ணுக்கு எங்கடா தெரியுது”

இப்படி தற்கால காதல் தேடல்களைப் பற்றிச் சொல்வார் பழம்.

திருவை தவிர அவனது தந்தை, தாத்தா என எல்லோருக்குமே ஷோபனாவை அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்திருக்கும். ஆனால், ஷோபனாவைப் போலத்தான் யாருமே அவனிடம் அதை அழுத்த மாட்டார்கள். தாத்தா கூட ‘ட்ரை பண்ணிப் பாரு’ என்றுதான் சொல்வார்.

ஹார்மோன்களுக்கு காது கொடுக்கும் இக்கால யுவன், யுவதிகள் பெரும்பாலானோர் அறிவுக்கு செவி கொடுப்பதில்லை. பருவம் வந்ததுமே துணை இல்லாவிட்டால் ‘பழம்’ என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பதற்றத்திலேயே ஏதாவது உறவில் சமரசம் செய்து கொள்கின்றனர். அப்படித்தான் நம் திரு என்ற பழமும் எதிலாவது ஃபிட் இன் ஆக மெனக்கிடுகிறான். ஆனால், அவனை அவன் போக்கிலேயே விட்டு அட்வைஸ் மழையெல்லாம் பொழியாமல், அழுத்தம் தராமல் நெறிப்படுத்துகின்றனர்.

காதலுக்காக ஏங்கும் திரு, என்றாவது ஒருநாள் ஏதேனும் ஒரு தருணத்தில் தன் காதலை உணர்வான் என்று பல ஆண்டுகளாக காத்திருக்கிறாள் ஷோபனா. ஆனால், “இந்த காபி மாதிரி நாம் ஏன் லைஃப் ஷேர் பண்ணிக்கக் கூடாது?” என்று திரு மெக்கானிக்கலா கேட்கும்போது, அதை லாவகமாக நிராகரிக்கிறாள். தான் திருவுக்கு வெறும் ஆப்ஷனாக அல்லாது எல்லாமுமாக இருக்க வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள்.

சில நேரங்களில் அளவுக்கு அதிகமா அன்பையும், ஆதரவையும் அள்ளித் தரும்போது, நமது மதிப்பை சம்பந்தப்பட்டவர்கள் குறைத்து எடைபோட்டு, கண்டுகொள்ளாமல் போவது உண்டு. அதுதான் நமக்கும் நேர்ந்திருக்கிறது.

காதலில் முக்கியம் எமோஷனல் சப்போர்ட் என்பதை திருவுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் அவன் கூட இருந்து மீட்ட ஷோபனா, தனது ஆதரவை இழக்கும்போதுதான் அதன் மதிப்பு அவனுக்குத் தெரிய வரும் என்பதை உணர்ந்து ஒரு முடிவு எடுப்பாள்.

இதுபோன்ற உறவுச் சிக்கல்கள் ஏற்படும்போது ஸ்பேஸிங் ரொம்ப முக்கியம். சற்றே விலகியிருத்தல் இருவருமே யோசிக்க இடம் தரும். தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அந்த இடைவெளியை திருவுக்கு தந்துவிட்டு அவனை விட்டு வெளிநாடு கிளம்பிப் போவாள்.

சில, பல மாதங்கள் ஓடிவிட ஷோபனாவின் பிரிவு திருவுக்குள் மிகப் பெரிய வெற்றிடத்தை தருகிறது. தன் அருகிலேயே இருந்த பொழுது தெரியாத ஷோபனாவின் அருமையை, அவள் பிரிவில் பூரணமாக உணர்கிறான். அவள் பொத்திவைத்திருந்த காதலை அவள் சகோதரன் மூலம் அறிந்து, தான் நடந்துகொண்ட விதங்களை எண்ணி வெட்கப்படுகிறான்.

காலம் கனியும்போது, ஷோபனாவுக்காக மெனக்கெட்டு பயணப்பட்டு அவள் அலுவலகத்துக்கே செல்லும் திரு, தனது காதலும் ஆத்மார்த்தமானது என்று நிரூபிக்கிறான்.

ஒருவருக்காக இன்னொருவர் தன்னை மாற்றிக் கொண்டு அதில் கட்டுப்பட்டுக் கிடந்து திணறி, மூச்சு முட்டுகையில் பிரிந்து செல்வதல்ல காதல். உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்காக ஒருவர் நின்று, தேவைப்படுகையில் நகர்ந்தும் வாழ்தலே காதல்!

இப்படியான காதலை அகத்தில் கொண்டிருக்கும் ஷோபனாக்கள் உங்கள் அருகிலேயே இருக்கிறார்கள். அவர்களை நீங்கள்தான் பெரிதாக கண்டுகொள்வதே இல்லை. இது பெண்களுக்கும் பொருந்தும்.

முதிர்ச்சியான ஒரு காதலை நம் பக்கத்து வீட்டில் நடக்கும் காட்சிகள் போல் ரொம்பவே எளிமையாக, ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய படம்தான் ‘திருச்சிற்றம்பலம்’.

| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Thiruchitrambalam: உங்கள் ஷோபனாவை கண்டு கொண்டீர்களா? | திரை தேவதைகள் 05
Dear Men: இருண்ட உலகமும், சயானி போன்ற மீட்பர்களும்! - திரை தேவதைகள் 04

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in