தவெகவில் செங்கோட்டையன் ஐக்கியம் | விஜய் ‘பலம்’ கூடுமா?
‘செங்கோட்டையனின் வருகை தவெகவுக்கு நிச்சயமாக கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது உண்மை. ஏனென்றால், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல மாற்றுக் கட்சியினர் தேமுதிகவில் இணைந்தனர். கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோதுகூட பல முன்னாள் அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் அவரின் கட்சியில் இணைந்தனர்.
ஆனால், விஜய் கட்சி ஆரம்பித்து இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எந்த மாற்றுக் கட்சியினரோ, திரைப் பிரபலமோ, முன்னாள் அரசு அதிகாரிகளோ தவெகவில் இணையவில்லை. அந்தக் குறையை ஒருவழியாக போக்கியுள்ளார் செங்கோட்டையன். எனவே, இது உறுதியாக தவெகவுக்கு பலமாக மாறியுள்ளது’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
குறிப்பாக, ‘செங்கோட்டையன் கொங்கு மண்டலத்தில் நன்கு அறிமுகமான நபர். அதுமட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் முழு ‘மேப்’பும் அவருக்கு அத்துப்படி. அதுபோல கொங்கு மண்டலத்தின் நாடித்துடிப்பு என்ன? பிரச்சினைகள் என்ன என்பதெல்லாம் அவருக்கு முற்று முழுதாக தெரியும். எனவே, செங்கோட்டையனின் அனுபவத்தை பயன்படுத்தி கொங்கு மண்டலத்தில் வலுவாக கால் பதிக்க தவெக முயற்சி செய்யும்.
ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டங்களை சிறப்பாக மேலாண்மை செய்த வியூகவாதியாக செங்கோட்டையன் இருந்தார். கரூர் கூட்டநெரிசல் போன்ற நெருக்கடியான சூழலில் இருக்கும் விஜய்க்கு, சீனியரான செங்கோட்டையனின் வியூகங்கள் நல்ல வழியை காட்டும். ஆனால், இதற்கு புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் வழிவிடுவார்களா என்பதே கேள்விக்குறி’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.