சசிகலாவின் அரசியல் வாழ்க்கை இனி..?

“அதிமுக-வை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசிவருகிறேன்” என திரும்பத் திரும்பச் சொல்லி வரும் சசிகலா, யாருடன் பேசுகிறேன்... என்ன பேசுகிறேன் என்பதை ‘சஸ்பென்ஸாகவே’ வைத்திருக்கிறார். அதனால், என்றைக்காவது விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் அவர் பின்னால் நின்ற ஒரு சிலரும் இப்போது தங்களுக்கான வழிகளைத் தேடி போய்விட்டார்கள்.

அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த சசிகலாவுடன் அவரது உதவியாளர் மட்டுமே வந்திருந்தார். மற்றவர்கள் எங்கே என்று கேட்டதற்கு, “சின்னம்மா தான் யாரையும் வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்று சால்சாப்பு சொன்னார்கள்.

இந்தத் தேர்தலையும் விட்டுவிட்டால் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகி விடலாம். தினகரன், ஓபிஎஸ் பற்றி எல்லாம் பேசும் பாஜக, ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. சித்தியைப் பற்றி தினகரனும் கவலைப்படுவதில்லை.

தன்னை அரியணையில் அமர்த்தி அழகுபார்த்த சின்னம்மா பற்றிய பேச்சை ஓபிஎஸ்ஸும் எடுப்பதில்லை. இவர்கள் இருவரும் தங்களுக்கான வழியைத் தேடுவதில் பிஸியாக இருக்கிறார்கள். இவர்களை ஆளாக்கி பேராக்கிய சசிகலா தான் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறார் பாவம்.

சசிகலாவின் இன்றைய நிலை குறித்து நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் சிலர், “இன்று சின்னம்மாவுக்கும் தினகரனுக்கும் விசுவாசமாக இருப்பவர்களில் பலரும், அதிகாரத்தில் இருந்தபோது அவர்களால் எந்தப் பலனும் அனுபவிக்காதவர்கள் தான்.

இவர்கள் இருவராலும் பலனை அடைந்தவர்கள் தான் இப்போது இவர்களுக்கு எதிராக கச்சைகட்டி நிற்கிறார்கள். அதனால் தினகரன் தனி வழி போக ஆரம்பித்து விட்டார். ஓபிஎஸ் அதிமுக-வுக்குள் குடியேற அமித் ஷாவுக்கு அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருக்கிறார். சின்னம்மா தான் போகும் வழி தெரியாமல் நிற்கிறார்” என்றார்கள். - ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சசிகலாவின் அரசியல் வாழ்க்கை இனி..?
யார் இந்த ஈஷா சிங் ஐபிஎஸ்? - புதுச்சேரி காவல் அதிகாரியின் பின்புலம்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in