பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி சலசலப்பு - திமுகவில் ‘உள்ளடி’ அரசியலா?

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக உள்ளார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்காக, தொகுதியில் வாரத்துக்கு ஒரு முறை மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பழனிவேல் தியாகராஜன், அமைச்சராக பொறுப்பேற்றபோது, மத்திய தொகுதி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சியை கொண்டு ஓரளவு நிறைவேற்றிவிட்டார். ஆனால், போதிய வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது.

கட்சி நிதி, தேர்தல் செலவு என்று கூறி யாரிடமும் இவர் நிதி வசூல் செய்வதில்லை என்ற நல்ல பெயர் இவருக்கு இருந்தாலும், இவரது ஆதரவு மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள், இவரது உதவியாளர்கள் சொத்துவரி முறைகேடு முதல் பல்வேறு முறைகேடுகளில் சிக்கி கைது, பதவி பறிப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், தொகுதிக்குட்பட்ட திமுக கவுன்சிலர்களை இவர் மதிக்கவில்லை என்ற மனக்குறை கட்சியினரிடையே உள்ளது. அதனால், தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், மத்திய தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள், மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோரை அழைத்து மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மீண்டும் வெற்றிபெற வைக்க ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுவது உறுதியான நிலையில், பழனிவேல் தியாகராஜன் உற்சாகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரை தாண்டி திமுகவினரிடையேயும் எழுந்துள்ளது.

சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த முன்னாள் துணை மேயர் மன்னன், மதுரை மத்திய தொகுதி ‘சீட்’ தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அக்கட்சியில் இணைந்ததாகவும், அவர் அங்கு போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு திமுகவினரே மறைமுகமாக உதவுவார்கள் என்றும், மன்னனின் தேர்தல் பணி, திமுகவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், மன்னனுக்கு ‘சீட்’ வழங்க மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவின் ஆதரவு கிடைக்குமா என்பது தெரியவில்லை என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. பிரச்சினையைத் தவிர்க்க, இந்தத் தொகுதியை வழக்கம்போல் கூட்டணிக் கட்சிக்கு அதிமுக தலைமை ஒதுக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி சலசலப்பு - திமுகவில் ‘உள்ளடி’ அரசியலா?
விஜய் வருகையும், பள்ளி மாணவர்களின் ‘திடீர்’ அரசியல் ஆர்வமும் - ஆரோக்கியமா, ஆபத்தா?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in