பிரேமலதா பிடிவாதம்... அதிமுக அப்செட்... அமையுமா கூட்டணி?
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக, பாமகவை விட தங்களுக்கு ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என்று கேட்பதால் அந்தக் கட்சியுடனான கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது. கடலூர் மாநாட்டில் கூட்டணி யாருடன் என அறிவிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார்.
ஆனால், சொன்னபடி மாநாட்டில் கூட்டணியை அறிவிக்காத அவர், “யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டோம், ஆனால், இப்போது அறிவிக்கப் போவதில்லை. இதுவரை சத்ரியர்களாக இருந்த நாம் இனிமேல் சாணக்கியராகவும் இருப்போம்” என சஸ்பென்ஸ் வைத்து மாநாட்டை முடித்துவிட்டார். இந்நிலையில், அதிமுக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக, தங்களுக்கு பாமக-வை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக தலைமையுடன் தொடர்பில் இருக்கும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பிரேமலதா வைக்கும் டிமாண்டுகள் எங்களை யோசிக்க வைக்கிறது. அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை இன்னும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், ‘அவர்களுக்கு கொடுப்பதை விட கூடுதலாக ஒரு தொகுதியாவது மாநிலம் முழுக்க கட்சி அமைப்பை வைத்திருக்கும் எங்களுக்கு வேண்டும்’ என நிபந்தனை வைக்கிறார் பிரேமலதா.
அத்துடன், சில குறிப்பிட்ட தொகுதிகள் கண்டிப்பாக தங்களுக்கு வேண்டும் எனவும் கேட்கும் அவர்கள், வேறு சில ‘ஒத்துழைப்பு’களையும் கேட்கிறார்கள். அதை எல்லாம் ஓரளவுக்கு செய்து கொடுக்க அதிமுக தரப்பில் ஒத்துக்கொண்டாலும் தொகுதிகள் விஷயத்தில் அவர் பிடிவாதமாக இருக்கிறார். பிரேமலதா கேட்டபடி பாமகவை விட ஒரு தொகுதி கூடுதலாக தேமுதிகவுக்கு கொடுத்தால் எந்த நோக்கத்துக்காக பாமகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தோமோ அந்த நோக்கமே வடமாவட்டங்களில் அடிபட்டுப் போய்விடும்” என்றார் அந்த அதிமுக முக்கிய நிர்வாகி.
அதேவேளையில் பிரேமலதாவோ, “இந்தத் தேர்தலுக்கு பின் அமையும் ஆட்சியானது, மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது விளைவிக்கும். கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். நாங்கள் அதை கவனத்தில் எடுத்துள்ளோம். தேமுதிக நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்கின்ற மகத்தான கூட்டணியை அமைக்கும்.
இந்த நேரத்தில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ளவர்கள் தொடர்கிறார்கள், புதிதாக யாரும் இணையவில்லை. அதிமுக கூட்டணியிலும் இன்னும் யார் உள்ளார்கள் கூறவில்லை, இவ்வாறு இரண்டு கூட்டணியும் இன்னும் உறுதியாகவில்லை. அப்படி இருக்கும்போது சிறிது சிந்தித்து ஒரு தெளிவான நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியுள்ளனர். நிச்சயம் ஒரு நல்ல முடிவை எடுப்போம். பொங்கலுக்குப் பின் தமிழகத்தில் அரிய மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்கள் கூட்டணியை உறுதி செய்யும்” என்று சொல்லி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த்.