தலைவர் தம்பி தலைமையில் - ‘பொங்கல் வின்னர்’ எப்படி?

மலையாளத்தில் கடந்த 2023-இல் வெளிவந்த ‘ஃபேலிமி’ (Falimy) படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நித்திஷ் சகாதேவின்

முதல் நேரடித் தமிழ்ப் படம்தான் ‘தலைவர் தம்பி தலைமையில்’. தமிழ் சினிமாவில் பொங்கல் வின்னராக வலம் வரும் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் எப்படி என்று பார்ப்போம்.

கதை தென் தமிழகத்தில், திருநெல்வேலி அருகேயுள்ள மாட்டிப்புதூர் என்கிற கிராமத்தில் நடக்கிறது. அந்த ஊரில் மணியாக வரும் தம்பி ராமையாவும், இளவரசும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஒருகாலத்தில் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குச் செல்லும் அளவுக்கு இருவரும் நெருக்கமானவர்கள். ஆனால், இப்போது மனதில் புகைந்துகொண்டிருக்கும் பகையுடன் இருக்கிறார்கள்.

இளவரசின் மகள் சௌமியாவுக்கு மறுநாள் காலை 10.30 மணிக்குத் திருமணம். கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்திலிருந்து மணமகன் கன்னியப்பன் தன்னுடைய குடும்பத்தாருடன் வேனில் மாட்டிப்புதூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், மாட்டிப்புதூர் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரான ஜீவரத்தினமாக வரும் ஜீவா, கல்யாண வீட்டுக்கு வந்து, இளவரசுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்.

இந்தச் சமயத்தில் பக்கத்துவீடான மணி வீட்டில் ஓர் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மணியின் வயது முதிர்ந்த தந்தை செல்லப்பன் இறந்துவிடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று பழைய பகையை மனதில் ஏந்தும் மணி, சௌமியா திருமணம் நடக்கும் அதே 10.30 மணிக்குத் தன்னுடைய தந்தையின் சவ ஊர்வலத்தை நடத்தப்போவதாகக் கூறுகிறார்.

பஞ்சாயத்துத் தலைவரான ஜீவா, எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தும் பகையில் ஊறிக்கிடக்கும் தன்முனைப்பில், மணி - இளவரசு இருவருமே பிடிவாதம் பிடிக்கிறார்கள். ஒருபக்கம் திருமணக் கொண்டாட்டம், மறுபக்கம் மரண ஓலம். திருமணமும் இறுதி ஊர்வலமும் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடந்ததா, இல்லையா என்பதுதான் கதை. திருமணமும் இறுதிச் சடங்கும் ஒரே தெருவில், அடுத்தடுத்த, அக்கம் பக்கத்து வீடுகளில் நடந்தால் ஏற்படும் கலாட்டாக்கள்தான் கதைக் களம்.

இருதரப்பையும் நடுநிலையுடன் சமாதானம் செய்யும் முயற்சியில் முதன்மைக் கதாபாத்திரமான ஜீவாவுக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதை நோக்கி நகர்கிறது திரைக்கதை. அதை நையாண்டியாகவும் சமூக பகடியாகவும் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது படக்குழு. இப்படத்தின் மிகப் பெரிய பலமே, அதன் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைதான். மணமகன் கன்னியப்பன் தொடங்கி ‘ஒன்சைட் லவ்வர்’ வரை அனைத்து துணைக் கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கதையிலும் தாக்கம் செலுத்துகின்றனர்.

திரைக்கதை எதற்கும் அவசரப்படவில்லை. முதல் பாதியில் கதாபாத்திரங்களை நிறுவிக் காட்டிவிட்டு, இரண்டாம் பாதியில் முரண்பாடுகளை ஒவ்வொன்றாக வெடிக்கச் செய்யும் நித்திஷின் மலையாள கதைசொல்லல் பாணி, ஒரு சோகமான நிகழ்வு, ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம் இரண்டையும் காட்சிக்குக் காட்சி சமூக நையாண்டியாக மாற்றியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, இளவரசின் மகள் சௌமியாவுக்கு நலங்கு செய்ய வரும் கிராமத்துப் பெண்கள், மணி வீட்டின் சாவைப் பற்றிக் கேள்விப்பட்டு, தலையிலிருக்கும் மல்லிகைப்பூ சரத்தை மட்டும் எடுத்துவிட்டு, ஆடைகளையும் தலைமுடியையும் கொஞ்சம் கலைத்து விட்டுக்கொண்டு சாவு வீட்டுக்கு ஒப்பாரி வைக்கச் செல்லும் காட்சியைக் கூறலாம்.

ஜீவரத்தினமாக வரும் ஜீவா நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘சிவா மனசுல சக்தி’ காலத்து ஜீவாவை நினைவூட்டுகிறார். மனிதர்களின் எல்லாச் சிறுமைகளும் மலிந்த ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக அவர் படும் பாடு மிகையோ, சினிமாத்தனமோ இல்லாமல், அவரை, ஒரு கதையின் நாயகனாகத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. சௌமியாவாக வரும் பிரார்த்தனா நாதன் அழகாகவும் அளவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.

படத்தின் மையக் கதாபாத்திரங்கள் என்றால், தம்பி ராமையா மற்றும் இளவரசு ஆகியோர்தான். ஈகோ பிடித்த நடுத்தர வயதுக்காரர்களாக இவர்கள் செய்யும் அலப்பறைகள், கதையை முடிவுக்குக் கொண்டு வரமுடியாமல் நகர்த்திச் செல்ல உதவுகின்றன.

தமிழ்நாட்டுக்கே உரிய மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை வடிவமைத்தது, கல்யாண மற்றும் சாவு வீட்டை ‘செட் அப்’ செய்தது என்று கதையோடு இயைந்த கலை இயக்கம், இந்தப் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து அசத்தியிருக்கிறார் சுனில் குமரன். அதேபோல் இயக்குநரின் திரைமொழிக்கும் மதிப்பளித்து அழகான வரிசையில் அட்டகாசமாகக் கோத்துக் கொடுத்திருக்கிறார் எடிட்டர் அர்ஜுன் பாபு. விஷ்ணு விஜயின் இசையும், பப்லூ அஜுவின் ஒளிப்பதிவும் படத்துக்கு என்ன தேவையோ அவற்றை வழங்கியுள்ளன.

ஹீரோயிசம், பஞ்ச் வசனங்களை நம்பாமல், சூழ்நிலை நகைச்சுவை, சமூக விமர்சனம் இரண்டையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட திரைப்படத்தில், தமிழர்கள் குடிப் பழக்கத்தை தங்களின் அன்றாடங்களில் ஒன்றாக ஆக்கியிருப்பதைப் பல காட்சிகளின் வழியாக மவுனமாக விமர்சனம் செய்திருக்கிறார் இயக்குநர் நித்திஷ்.

ஈகோவும், உள்ளீடற்ற குற்றச்சாட்டுகளும் பகையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மனித முட்டாள்தனங்களில் முதன்மையானது என்பதை நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டே சொல்லும் ஒரு சமூகக் கண்ணாடிதான் இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’. ஆங்காங்கே சில பல லாஜிக் குறைகள் இருப்பினும், மலையாள சினிமாவின் யதார்த்தத் திரைக்கதை பாணியுடன் ஒரு சுவையான அவியலாக வந்திருக்கும் பொங்கல் வின்னரான தலைவர் தம்பி தலைமையில் படத்தை குடும்பத்தோடு அமர்ந்து, ரசித்துப் பார்க்கலாம்.

தலைவர் தம்பி தலைமையில் - ‘பொங்கல் வின்னர்’ எப்படி?
‘வா வாத்தியார்’ திருப்தி தந்ததா? - திரைப் பார்வை

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in