பயிர்க் கடன் தள்ளுபடியில் தொடரும் குளறுபடி - நடப்பது என்ன?

குத்தகைதாரர்களுக்கு கைவிரிப்பு | விவசாயிகள் அலைக்கழிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க் கடன் தள்ளுபடியில், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தின் குளறுபடியால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். குத்தகைதாரர்கள் கைவிரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர். இதையடுத்து தமிழக அரசு ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.

இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு 5 நாட்களாகிறது. ஆனால், ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றிருந்தால் ரூ.35 ஆயிரம் தான் தள்ளுபடி செய்யப்படும்.

உரிய அரசாணை பெற்ற பின்னர் மீதமுள்ள தொகை ரூ.40 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூட்டுறவு சங்க நிர்வாகம் தெரிவிக்கிறது. இதனால் விவசாயி கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர் மற்றும் பயிர் நகைக்கடன் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.75 ஆயிரம் தள்ளுபடி போக மீதத்தொகையை செலுத்தச் சென்றனர்.

அப்போது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், ரூ.35 ஆயிரம் கடன் தள்ளுபடி மட்டுமே அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். கடைசியாக வழங்கிய அரசாணைப்படி எங்களுக்கு உத்தரவு அதிகாரிகளிடமிருந்து வரவில்லை.

அதனால் ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள், ரூ.35 ஆயிரம் தள்ளுபடி தொகை தவிர்த்து மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். அரசாணைப்படி அதிகாரி களின் உத்தரவு வந்தபின்னர் தள்ளுபடியில் கூடுதல் தொகையான ரூ.40 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பயிர்க் கடன் பெற்றிருந்தாலும், அதன் தவணை ஓராண்டு உள்ளது என்றில்லாமல், அதனை நவம்பர் 30 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப் படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தாண்டு நேரடி பட்டாதாரருக்கு மட்டுமே பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் பெற தகுதி இருந்தும் அவர்களுக்கு பயிர்க் கடன் வழங்க உத்தரவு வரவில்லை எனக் கூறுகின்றனர்.

விவசாயிகள் மத்தியில் கூட்டுறவு வங்கி நிர்வாகம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே பலமுறை போராடி ஒவ்வொரு கட்டமாக வந்து, கடைசியாக 4-வது கட்டமாக ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி என அரசு அறிவித்தது.

இதனால் ஓரளவு மகிழ்ச்சியடைந்த நாங்கள், பெற்ற கடனை திரும்ப செலுத்தச் சென்றால் அதிகாரிகள் வேண்டுமென்றே தவறான தகவல்களை கூறி அலைக்கழிப்பு செய்கின்றனர். மேலும், கடந்த டிசம்பரில் நாங்கள் பெற்ற கடனை 30.11.2026-க்குள் திரும்ப செலுத்துவதற்கு நிர்பந்திக்கின்றனர்.

அப்படி செலுத்தவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும். பயிர்க் கடன் தள்ளுபடியும் கிடையாது என எச்சரிக்கும் தொணியில் கூறுகின்றனர்.

எனவே, கூட்டுறவு நிர்வாகம் வங்கி செயலாளர்களுக்கு அரசாணைப்படி சிறப்பு உத்தரவு வழங்கி, பயிர்க் கடனை குறித்த காலக்கெடுவுக்குள் விவசாயிகள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்த தள்ளுபடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 பயிர்க் கடன் தள்ளுபடியில் தொடரும் குளறுபடி - நடப்பது என்ன?
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ்: ரூ.56 கோடிக்கு 5 டெண்டர்கள் வெளியீடு

X