ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவரா, இல்லையா? - புதுச்சேரி ‘புது’ சர்ச்சை
புதுச்சேரியில் ரங்கசாமி அரசு மீது கடும் விமர்சனத்தை வைப்பதுடன் பாஜக அல்லாத தொகுதிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்து, பின்னர் அதிலிருந்து விலகிய இவர், விரைவில் கட்சி தொடங்க இருக்கிறார்.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள வாக்காளர்களுக்கு கடந்த சில தினங்களாக செல்போனில் புது எண்ணில் இருந்து பரவலாக ஒரு அழைப்பு வருகிறது. அதை எடுத்தால் பதிவு செய்யப்பட்ட ஆடியோ எதிர்முனையில் பேசுகிறது.
அதில், “ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அவர் ‘நல்லவர்’ என்றால் எண் ஒன்றை அழுத்தவும்... ‘நல்லவர் அல்ல’ என்றால் எண் இரண்டை அழுத்தவும். அவரை நீங்கள் முன்பே அறிந்திருக்கிறீர்களா..? அறிந்திருந்தால், அவரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன..?’ என்று கேட்கப்படுகிறது.
வாக்காளர்களை குறிவைத்து, அவர்களின் செல்போன் எண்களை குறுக்கு வழியில் பெற்று, இவ்வாறு தொல்லை தருவதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஜோஸ் சார்லஸ் தீவிரமாக பணியாற்றும் ஜான்குமாரின் தொகுதியான காமராஜர் நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் புதுச்சேரி சைபர் க்ரைமில் இதுபற்றி புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், “எங்களுடைய செல்போன் எண்களை வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான எஸ்ஐஆர் மனு தொடங்கி வங்கிப் பரிவர்த்தனை, ஆதார் வரை பல இடங்களில் கொடுத்திருக்கிறோம்.
திடீரென்று எங்கள் எண்ணில் இப்படி அழைப்பு வருகிறது. ஒரு தனிநபர் போட்டியிட, அவரது செல்வாக்கை அறிய இப்படி சர்வே எடுக்கிறார்கள். எங்கள் தகவல்களை திருடிய ஜோஸ் சார்லஸ் மீது நடவடிக்கை தேவை” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். புதிய கட்சி தொடங்க இருக்கும் சூழலில், ஜோஸ் சார்லஸ் மீதான இந்தக் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே, ஜான்குமார் மகன் ரீகன் தரப்பில் இருந்து, “எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் கெட்ட பெயர் ஏற்படுத்த, திட்டமிட்டே இப்படி யாரோ செய்கிறார்கள். அவர்கள்தான் சர்வே எடுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என காவல் துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. - செ.ஞானப்பிரகாஷ்