புதிய கட்சி தொடக்கம்... சசிகலா சொன்ன ‘ஃப்ளாஷ்பேக்’
முன்னாள் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா, 2017-ல் ஊழல் வழக்கில் சிறை சென்றதால், அந்தப் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். அதன்பின் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
2021-ல் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவில்லை. அதன் பின்னரும் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஓரணியில் இணைத்து, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என கூறி அமைதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மீண்டும் இணைக்கப்படுவர் என எதிர்பார்த்தனர். ஆனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்க முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதன் தொடர்ச்சியாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கப்பட்டார்.
அமைதியாக இருந்த சசிகலா, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். கடந்த அண்ணா பிறந்தநாளின்போது திமுகவை வீட்டுக்கு அனுப்பி மக்கள் விரும்பும் ஆட்சியை கொண்டு வருவேன் என்றார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை வழக்கமாக்கினார். அதிமுகவில் தனக்கு இடமில்லை எனத் தெரிந்துவிட்டதால் சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தது இப்போது நிஜமாகியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கோட்டைமேடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த சசிகலா, அண்ணா - எம்ஜிஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தார்.
இந்த நிகழ்வில் சசிகலா பேசிய சில ஃப்ளாஷ்பேக் விஷயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. “ஜெயலலிதா மரணத்தில் அரசியல் செய்தனர். இதில் எதிரிகள் என்னென்ன கதைகள் கட்டிவிட்டனர். ஜெயலலிதா மறைந்த அன்று இரவு மந்திரிகள், எம்எல்ஏ.க்கள் வந்து நீங்கள்தான் முதல்வராகவும், பொதுச் செயலாளராகவும் ஆக வேண்டும் என்றனர். ஆனால் நான், ஜெயலலிதாவுக்கு காரியம் செய்ய வேண்டியதிருக்கிறது. முன்புபோல் பன்னீர்செல்வமே முதலமைச்சராக இருக்கட்டும் என்றேன்.
முதலமைச்சரான பன்னீர்செல்வம் மீது அமைச்சர்கள் என்னிடம் தினமும் வந்து குறைகள் சொன்னார்கள். பிரச்சினைகள் புகைந்ததால் தடுக்க நான் முதல்வராக ஒப்புக்கொண்டேன். அவரையும் கேட்டுத்தான் முடிவு எடுத்தேன். பின்னர் பன்னீர்செல்வத்திற்கு என்ன ஆனது தெரியவில்லை. யாரோ சொல்லி, ஜெயலலிதா சமாதிக்கு சென்று தர்மயுத்தம் நடத்தினார். தற்போது அதுவே அவருக்கு சிக்கலாகி விட்டது.
அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், நிர்வாகிகள் நான் வேண்டாம் என்று சொல்லியும் என்னை தொந்தரவு பண்ணி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராக நியமனம் செய்தனர். நான் முதலமைச்சராக கடிதம் கொடுத்தபோது ஆளுநர் அங்கு இல்லை. கடிதம் கொடுத்தவுடன் நீதிமன்ற தீர்ப்பு சொல்லி வைத்தார்போல் சீக்கிரமாக வந்தது. அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. அதிமுக அரசை கலைக்கவிடக் கூடாது, பழனிசாமியை முதலமைச்சராக அமரவைத்து விட்டு ஜெயிலுக்கு போக வேண்டும் என உடனடி முடிவெடுத்தேன்.
புதிய கட்சியை விரைவில் ஆரம்பிக்கப் போகிறோம். இது ஒரு திராவிட கட்சியாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு ஆதரவாகவும் கட்சி இருக்கும். எதிரிகள், துரோகிகளை வேரறுக்கும் கட்சியாக அது இருக்கும். தற்போது கட்சி கொடியை மட்டும் அறிமுகம் செய்கிறேன். கருப்பு வெள்ளை சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம், அந்தக் கொடியில் இருக்கும். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்” என்றார் சசிகலா.