சாமானிய மக்களின் தோழர் நல்லகண்ணு - ஓர் உறு​தி​மிக்க தலைவரின் அரசியல் பயணம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்​ல​கண்​ணு காலமானார். அவருக்கு வயது 101. மகத்தான அந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

எவருக்​கும் கிட்டாத அரிய வாய்ப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26 ​தான் நல்​ல​கண்​ணு​வின் பிறந்​த​நாளாகும். கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் நல்​ல​கண்​ணு​தான். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்றுமை இது. கம்​யூனிஸ்ட் கட்சி பிறந்த நாளில் பிறந்​தவ​ரான நல்​ல​கண்​ணு​வின் குடும்​பம், கம்​யூனிஸ்ட் இயக்​கக் குடும்​பம் அல்ல.

விடு​தலைப் போராட்​டத்​தின் எழுச்சியால் உந்​தப்​பட்ட ஆர்.நல்​ல​கண்​ணு, பள்ளி மாணவ​னாக இருந்த காலத்​தில் இந்​திய தேசிய காங்​கிரஸ் இயக்​கத்​தில் தன்னை இணைத்துக்​கொண்​டார். ஆனால், இளம் வயதிலேயே பெற்​றிருந்த தனது பரந்​துபட்ட வாசிப்பு ஆற்​றலால், சுதந்திரப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​போது சிறு வயதிலேயே கிடைத்த அனுபவங்​களால், பலவேசம் செட்​டி​யார் போன்ற தனது ஆசிரியர்​கள் தந்த வழி​காட்​டு​தலால் அவர் கம்யூனிஸ்ட் இயக்​கத்​தைத் தேர்ந்​தெடுத்​தார்.

1948-இல் இந்​தி​யா​வில் கம்​யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்​தில், ஏராள​மான சதி வழக்​கு​களில் கம்​யூனிஸ்ட் தலை​வர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். தமிழ்​நாட்​டில் ‘நெல்லை சதி வழக்​கு’, வரலாற்​றில் பதி​வான முக்கிய வழக்​காகும். இந்த வழக்​கில்​தான் நல்​ல​கண்ணு கைது செய்​யப்​பட்​டு, பல ஆண்​டு​கள் சிறை​யில் இருந்​தார். தமிழ்​நாட்​டைச் சேர்ந்த கம்​யூனிஸ்ட் தலை​வர்​களில் நல்லகண்​ணு​தான் நீண்ட காலம் சிறை​யில் இருந்​தவர். நல்ல​கண்​ணு​வின் இளம் வயதுப் போராட்​டங்​களை​யும், அவர் அனுப​வித்த சிறைக் கொடுமை​களை​யும் அறி​யும் அனை​வருக்​கும் அவர் மீது பெரும் ஈர்ப்பு உரு​வாகும் என்பது நிச்​ச​யம்.

குறிப்​பாக, அவருடைய வாழ்க்​கைப் பயணம் பற்​றி அறியும் இளம் தலை​முறை​யினர், மக்​களுக்​காகத் தொண்டு செய்ய இப்​படி​யும் ஓர் உறு​தி​மிக்க தலை​வர் இருக்க முடி​யுமா என்று வியப்​பில் ஆழ்ந்து போவதைத் தவிர்க்க முடி​யாது. அரசி​யலில் கொள்கை மாறு​பாடு​கள் இருக்​கலாம்; ஆனால், சாமானிய மக்​களைப் பாதிக்​கும் பொதுப் பிரச்​சினை​களில் அரசி​யல் பார்க்​காமல் எல்லோரும் இணைந்து ஓரணி​யில் மக்​களுக்​காகப் போராட வேண்​டும் என்​ப​தில் நம் அரசி​யல் தலை​வர்​கள் அனை​வருக்​கும் நல்​ல​கண்ணு முன்​னு​தா​ரண​மாகத் திகழ்ந்தவர்.

கடந்த நூறாண்​டு​களில், தமிழ்​நாட்​டில் குறுக்​கும் நெடுக்குமாக அவரது காலடி படாத ஊர்​களே இல்லை எனலாம். தமிழ்​நாட்​டின் கடந்த ஒரு நூற்​றாண்டு கால வரலாற்றை எழுதும்​போது, நல்​ல​கண்​ணு​வைத் தவிர்த்துவிட்டு எழுத முடி​யாது. ஏனெனில், அவருடைய வாழ்க்கை என்​பது தமிழ்​நாட்​டின் நூறாண்டு கால வரலாற்றோடு பின்​னிப் பிணைந்​திருக்​கிறது.

எல்லா மக்​களுக்​கும் எல்​லா​மும் கிடைத்​திடச் செய்ய வேண்​டும் என்ற உயரிய நோக்​கில், அரசி​யல், சமூகம், கல்வி, பொருளாதாரம், விவ​சா​யம், அறி​வியல், கலை, இலக்​கி​யம், பண்​பாடு என அனைத்​துத் தளங்​களி​லும் செயல்​படும் தமிழகத்​தின் முன்​னோடிகளோடு இணைந்து, நவீன தமிழ்​நாட்​டைக் கட்​டமைப்​ப​தில் பெரும் பங்​களிப்பு செய்​தவர் நல்​ல​கண்​ணு.

அரசி​யல் கட்​சிக்​கான வேலிகளை​யெல்​லாம் கடந்​து, தமிழ்​நாட்​டின் பொதுத் தலை​வ​ராகப் பரிணமித்த ​அந்த மாமனிதர் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் பகிர்ந்த தகவல்களை இனி பார்ப்போம்.

தூத்​துக்​குடி மாவட்டம் திரு​வை​குண்​டத்​தில் இராம​சாமி - கருப்​பாயி தம்ப​திக்கு மூன்​றாவது மகனாகப் பிறந்​தார் நல்ல​கண்ணு. பள்ளி​யில் படிக்​கின்​ற​போதே, தேச விடுதலையே தனது மூச்​சென்​றிருந்​தார். தேசப்​பிதா காந்தி​யின் எளிமை, நேர்மை ஆகியவை இவரை ஆட்கொண்டன. பொது வாழ்க்கைக்கு வந்த நாள் முதல் கடைசி வரை எளிமை​யின் சிகர​மாய் - நேர்​மை​யின் அடையாள​மாய் தொடர்ந்த இவரது வாழ்க்கை, ஆரம்பத்தில் காந்​தியப் பாதை​யில் பயணித்​தது.

அதன்​பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்​திவந்த இயக்கங்​களாலும், தோழர் ஜீவா பொதுக் கூட்​டங்​களில் ஆற்றிய உரைகளைக் கேட்டும் நல்ல​கண்​ணு​வின் கவனம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின்​பால் திரும்​பியது. அதனால் கல்லூரிப் படிப்​பைக் கைவிட்​டார். சின்னஞ்​சிறு வயதில் செங்​கொடியைக் கரங்​களில் ஏந்தி​ய​வர், கடந்த எண்பது ஆண்டு காலமாகத் தனது லட்சியப் பயணத்​தைத் தொய்வின்​றித் தொடர்​ந்தார்.

கட்சி தடை செய்​யப்​பட்​ட​போது தலைமறைவு வாழ்க்கையில், காடுமேடு​களில் அலைந்து திரிந்த நிலையில் காவல் துறை இவரின் ரகசிய இடமறிந்து கைது செய்​தது. காவல் அதிகாரி மற்ற தலைவர்​களைப் பற்றி விசா​ரித்த​போது அதற்கு நல்ல​கண்ணு பதில் சொல்ல மறுத்​தார். அதனால் அடித்து, உதைத்து, நையப்பு​டைத்து, தலைகீழாகத் தொங்​க​விட்டு அடித்​தும் வாய் திறக்கவே இல்லை. இனி என்ன செய்​ய​லாம் என ஆழ்ந்து யோசித்த காவல் அதிகாரி, இவருடைய மீசை ரோமத்தை ஒவ்வொன்றாகப் பிடுங்கி மகிழ்ந்​தார். இருப்​பினும் நல்ல​கண்​ணு​விட​மிருந்து பதில் எதுவும் கிடைக்க​வில்லை.

காவல் துறை​யினர் ஜோடித்த பொய்யான நெல்லை சதி வழக்​கில் ப.மாணிக்​கம், கே.பாலதண்​டா​யுதம், வாத்​தி​யார் ஜேக்கப் உள்ளிட்ட தலைவர்​களோடு தோழர் நல்லகண்ணுவுக்​கும் ஆயுள் தண்டனை வழங்​கப்​பட்​டது. சிறை​யில் நடந்த அனைத்​துக் கொடுமை​களை​யும் நெஞ்சுரத்​தோடு அவர் எதிர்​கொண்​டார்.

கட்சி​யில் உறுப்​பின​ராகத் தொடங்கி, விவசாயத் தொழிலாளர் சங்கத்​தின் மாநிலப் பொதுச் செயலா​ளராக நீண்ட காலமும்; கட்சி​யின் மாநிலச் செயலாளராக நான்கு முறை தேர்வு செய்​யப்​பட்டு 12 ஆண்டு​களும்; கட்சி​யின் தேசிய நிர்​வாகக் குழு உறுப்​பின​ராக​வும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவ​ராக​வும் பணியாற்றிய அனுபவம் மிக்​கவர்.

தன்னை நாடி வந்த நிதிகள் எதையும் இவர் தனதாக்​கிக் கொண்​ட​தில்லை. சான்​றாக, தமிழ்​நாடு அரசின் சார்​பில் அம்பேத்கர் விருது வழங்​கப்​பட்​ட​போது கொடுக்​கப்​பட்ட நிதி​யைக் கட்சி​யின் வளர்ச்​சிக்​கும், சங்க வளர்ச்​சிக்​கும் வழங்​கி​னார். 2022-இல் தமிழ்​நாடு அரசு ‘தகை​சால் தமிழர் விருது’ வழங்​கிய​போது, தனக்கு அளிக்​கப்​பட்ட 10 லட்சம் ரூபா​யுடன் மேலும் 5 ஆயிரம் ரூபாயை சேர்த்து, 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்வர் மு.க.ஸ்​டா​லினிடம் கரோனா நிதி​யாகத் திரும்ப அளித்​தார்.

இவரது எண்ப​தாம் ஆண்டில் விழா எடுத்த​போது கட்சி இவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்​தது. அதனை அதே மேடை​யில் கட்சிக்கு நிதியாக வழங்​கி​னார். இவருக்கெனச் சொந்​தமாக வாகன வசதி கிடை​யாது என்ப​தறிந்து, அடையாறு மாணவர் நகலக உரிமை​யாளர் ஆனாரூனா கார் ஒன்றைப் பரிசளித்​தார். அதன் சாவியை முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்​கி​னார். நல்லகண்ணு அந்த ஊர்தி​யை​யும் கட்சிக்கே அளித்​தார்.

இவரது தியாகத்​தைப் பலரும் பல கோணங்​களில் பாராட்டி மகிழ்ந்தது உண்டு. திமுக தலைவர் கருணாநிதி, தோழர் நல்ல​கண்​ணு​வின் எண்ப​தாம் ஆண்டு விழா​வில் பேசி​ய​போது, “இன்​றைக்கு நான் ஒரு உண்மை​யைச் சொல்​கிறேன், எனது இரண்டு கண்களில் ஒன்று பழுதாகிவிட்​டது, ஒரு கண் பார்​வை​தான் உண்டு, மற்றொரு கண் நல்ல​கண்ணு” என்றும், “என்னைவிட இரண்டு வயது இளையவர் என்றாலும், தியாகத்​தால் என்னைவிட மூத்​தவர்” என்றும் பெருமிதம் பொங்கக் கூறினார்.

பாஜக அணியில் திமுக இருந்த​போது திருச்​சி​யில் பத்திரி​கை​யாளர்கள் சந்திப்​பில் நிருபர்கள் கருணாநி​தி​யிடம், “நீங்கள் பாஜக அணியில் இருந்து விலகி வர வேண்டுமெனத் தொடர்ந்து நல்ல​கண்ணு பேசிவரு​கிறார், அது குறித்து உங்கள் பதில் என்ன?” என்று வினவிய​போது, கருணாநிதி சற்றும் தயக்கமின்றி, “நல்​ல​கண்ணு எப்போதும் நல்லதைத்​தான் சொல்​வார்” என்றார்.

தன் வாழ்​நாள் முழு​வதும் ஏழை, எளிய மக்களுக்​காக, உழைக்​கும் மக்களுக்​காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்​கொண்​ட​வர். தியாகத்​தால் புடம்​போட்ட தங்கமென ஜொலித்​தவர். மணல் கொள்​ளையை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் வழக்​குத் தொடுத்து, தானே நீதி​மன்றம் சென்று வாதாடி வெற்றி​யும் கண்ட​வர்.

பொது​வாழ்வு என்பது பொழுது​போக்​கல்ல, எளிமை​யும், நேர்​மை​யும், அர்ப்​பணிப்பும், ​தி​யாக​மும் நிறைந்​த​தாகும் என்​பதை ​வாழ்ந்து ​காட்​டியவர். சொல்​லுக்கும் செயலுக்கும் வேறு​பாடு இன்​றித் தன் ​வாழ்வை அர்ப்​பணித்​துக்​கொண்ட எளிமை​யின் சிகர​மாகத் திகழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு.

சாமானிய மக்களின் தோழர் நல்லகண்ணு - ஓர் உறு​தி​மிக்க தலைவரின் அரசியல் பயணம்
‘மக்கள் போராளி நல்லகண்ணு’ - தலைவர்கள் புகழஞ்சலி

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in