மாநில அரசியல் ‘நோக்கும்’ கனிமொழி... குழப்பத்தில் திமுக தலைமை?!
திமுக துணை பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழியின் பிறந்தநாளையொட்டி சென்னையில் திமுக-வினர் 20 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி கொண்டாடினர். இது வழக்கமானது தான். ஆனால், ‘புறம் காத்தது போதும்... அகம் காக்க வா’ என்று கேக்கில் இருந்த வாசகங்கள்தான் அனைவரையும் அர்த்தத்துடன் யோசிக்க வைத்திருக்கிறது.
தேர்தல் காலம் என்பதால் இம்முறை சென்னையில் கனிமொழியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட களைகட்டியிருந்தன. கட்சியின் தென்மண்டல பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரும் கனிமொழிக்கு வரிசைகட்டி வந்து நின்று வாழ்த்துச் சொல்லிச் சென்றனர். அதிலும் குறிப்பாக, தேர்தலில் சீட் கேட்கும் திட்டத்துடன் இருப்பவர்கள் ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டு வந்து வாழ்த்துச் சொன்னார்கள். சென்னை மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலும் கனிமொழியின் பிறந்தநாளை பல்வேறு இடங்களில் திமுக-வினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
ஆரம்பத்தில் இருந்து டெல்லி அரசியலை மையப்படுத்தியே கனிமொழி செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசியலில் அவர் தடம் பதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் கனிமொழி ஆதரவாளர்களுக்கு இருக்கிறது. அதற்கு கட்டியம் கூறும் விதமாக, அவரது பிறந்தநாள் கேக்கில் ‘புறம் காத்தது போதும், அகம் காக்க வா’ என்ற வாசகங்களை போட்டு தலைமையையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர், “திமுகவுக்கு பெண்களின் ஆதரவை திரட்டுவதற்காக கனிமொழியை கட்சி தலைமை முன்னிலைப்படுத்தி வருகிறது.
உதயநிதியை முதல்வராக்க கனிமொழி ஆட்சேபம் செய்துவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, தற்போது அவருக்கும் மாநில அரசியலில் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கனிமொழி தமிழக அரசியலுக்கு திரும்பி தனக்கான இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதையே அவரது ஆதரவாளர்கள் கேக் வாசகங்கள் மூலம் சூசகமாக உணர்த்தி இருக்கிறார்கள்” என்றார் அந்த திமுக நிர்வாகி.
இதனிடையே, திமுக உள்ளரசியல் வட்டாரத்தில் கனிமொழியின் திட்டம் குறித்த சலசலப்புகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. ‘சென்னைக்குள் இருக்க வேண்டாம் என்பதால்தான் கனிமொழியை டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள். அதற்காக அவர் எந்தச் சூழலிலும் சங்கடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே டெல்லியை மையப்படுத்தியும், தென் தமிழகத்தை மையப்படுத்தியும் பிரதானப் பொறுப்புகளையும் அவருக்கு வழங்கினார்கள். எனினும், கனிமொழிக்கு திருப்தியாக இல்லை’ என்கிறார்கள்
“எத்தனை காலம் தான் இப்படி டெல்லிக்கும் சென்னைக்குமாக ஓடிக்கொண்டிருப்பது?” என நெருக்கமான வட்டத்தில் ஆதங்கப்பட்டு வருகிறாராம் கனிமொழி. பேசாமல், மாநில அரசியலில் தனக்கும் ஓர் இடத்தைப் பிடித்து, இங்கேயே இருந்துவிட வேண்டும் என யோசிக்கிறாராம். தனது இந்த விருப்பத்தை தலைமையிடமும் அரசல் புரசலாக சொல்லியும் விட்டாராம்.
ஒருவேளை, கனிமொழி மாநில அரசியலுக்குத் திரும்பினால் சென்னையிலேயே ஒரு தொகுதியில் போட்டியிடுவதிலும் ஆர்வமாக இருக்கிறாராம். அது நடக்காத பட்சத்தில், தென் மண்டலத்தில் இருக்கும் ஒரு தொகுதியைக் கேட்கும் யோசனையையும் வைத்திருக்கிறாராம். ஆனால், இந்த விருப்பத்துக்கு இதுவரை ஓகே சொல்லாத தலைமை, இது குறித்து முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதாக கட்சிக்குள் சொல்கிறார்கள்.