இண்டிகோ பிரச்சினையின் பின்புலம் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை
இண்டிகோ விமானங்கள் டெல்லி, சென்னை உள்படப் பல நகரங்களில் டிசம்பர் 2-ல் இருந்து எந்த முன்னறிவிப்பும் இன்றி சேவையை நிறுத்தின. இதனால், உள்நாட்டுப் பயணங்களுடன், வெளிநாட்டுப் பயணங்களும் தடைபட்டன. இந்த நெருக்கடியைப் பிற நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தின.
விமானிகளின் பற்றாக்குறையே இந்தப் பிரச்சினைக்கு அடித்தளம் எனக் கூறப்படுகிறது. விமானிகள் பணிச்சூழலால் அயர்ச்சிக்கு எளிதில் உள்ளாவதும், அது விபத்துகளுக்கு முக்கியக் காரணியாக இருப்பதாகவும் பேசப்பட்டுவந்த நிலையில், உள்நாட்டு விமானிகளின் பணி நேரத்தைக் குறைப்பது தொடர்பாகப் புதிய விதிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 2024-இல் அறிவித்தது.
இதன்படி, விமானிகளின் கட்டாய ஓய்வு வாரத்துக்கு 36-லிருந்து 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது; இரவுப் பணிக்கான நேரமும் குறைக்கப்பட்டது. விமானிகளுக்குச் சாதகமான இத்தகைய மாற்றங்களை இண்டிகோ எதிர்த்தாலும், அவை டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு மூலம் அமலுக்கு வந்தன.
தற்போது பிரச்சினை வெடித்திருக்கும் சூழலில், புதிய விதிமுறைகளை அமல்படுத்தும்போது தங்கள் தரப்பில் நிகழ்ந்த தவறான கணிப்புகளும் திட்டமிடலில் ஏற்பட்ட இடைவெளிகளுமே இதற்குக் காரணம் என டிஜிசிஏவிடம் இண்டிகோ கூறியது.
பயணிகளுக்குக் கட்டணத்தைத் திருப்பித் தருவது, மாற்றுப் பயணங்களுக்கு முன்னுரிமை அளித்து முன்பதிவு செய்வது போன்ற பணிகளை முன்னெடுத்திருப்பதாக இண்டிகோ தெரிவித்திருந்தாலும், அத்துடன் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வர இயலாது.
ஏற்கெனவே, இண்டிகோவின் கோரிக்கைக்கு ஏற்ப ஓய்வு குறித்த விதிமுறை ஜூலை 1, இரவுப் பணியைக் கட்டுப்படுத்தும் விதிமுறை நவம்பர் 1 என இரண்டு கட்டங்களாகவே செயல்படுத்தப்பட்டன. அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி, இண்டிகோ புதிய விமானிகளைச் சேர்க்காததே தற்போதைய முடக்கத்துக்குக் காரணம் எனப்படுகிறது.
விமானங்களின் நேரம் தவறாமையை அடிப்படையாகக் கொண்ட ‘ஆன் டைம் பெர்ஃபார்மன்ஸ்’ குறியீடு இண்டிகோ நிறுவனத்துக்கு நவம்பரிலிருந்தே அதலபாதாளத்தை நோக்கிச் சென்றதை டிஜிசிஏ ஏன் கவனிக்கவில்லை, புதிய விதிமுறைகளுக்கு எதிராக இண்டிகோ மறைமுக மிரட்டல் விடுக்கிறதா எனப் பல கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன.
முடக்கத்தைச் சமாளிக்க விமானிகளின் இரவுப்பணி குறித்த கட்டுப்பாட்டுக்குத் தற்காலிக விலக்கு அளிக்குமாறு அந்நிறுவனம் கோரியதை அடுத்து, 2026 பிப்ரவரி 10 வரைக்கும் டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் தற்காலிகத் தீர்வைவிட, நீண்ட காலப் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு காண்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.