வேளச்சேரி தொகுதியில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார்?
தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசை பட்டியலில் 26-வது இடத்தில் இருக்கும் வேளச்சேரி தொகுதி, தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், கடந்த 2011-ம் ஆண்டு உருவானது. இத்தொகுதியில் வேளச்சேரி, விஜயநகர், அடையாறு கிழக்கு மற்றும் மேற்கு, திருவான்மியூர் கிழக்கு மற்றும் மேற்கு, தரமணி, பெசன்ட்நகர் பகுதிகள் உள்ளன.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியில் 2-வது இடத்தில் வேளச்சேரி தொகுதி உள்ளது. வேளச்சேரியின் முக்கிய அடையாளமாக ஆசியாவில் மிகப்பெரிய ஷாப்பிங் மாலான ஃபீனிக்ஸ்மால், பறக்கும் ரயில் நிலையம் திகழ்கிறது.
வேளச்சேரி தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், நாயக்கர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவை தவிர, தொகுதியில் கிராமணி, முதலியார், பிராமணர் மற்றும் கிறிஸ்துவர்களும் வசிக்கின்றனர். மழைக் காலங்களில் வேளச்சேரி, தரமணி பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் நிலை பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
குடியிருப்புகள் சுற்றிலும் மழைநீர் தேங்குவதால் சில நாட்களுக்கு மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகள் இருந்தாலும், மழைக் காலங்களில் மக்கள் அவதிக்குள்ளாவது நீடிப்பதால், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகவே உள்ளது.
அதேபோல், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கால் வேளச்சேரி மக்கள் சுவாசக் கோளாறு உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேளச்சேரி தொகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஐடி நிறுவங்களில் பணியாற்றுபவர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வேளச்சேரி, தரமணி ரயில் நிலையத்தில் இருந்து, பறக்கும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இடங்களை முறைப்படுத்தி, பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேளச்சேரி தொகுதியில் முதல் முறையாக 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.கே.அசோக் வெற்றி பெற்றார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசன் மவுலானா 68,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ரார்.
இந்த தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா, அதிமுக சார்பில் எம்.கே.அசோக், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் ஆர்.குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்தனா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக் ஆகியோர் ஏற்கனவே, இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளதால், இந்த தேர்தலில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதேநேரம், தவெக வேட்பாளர் ஆர்.குமாருக்கு இளைஞர்கள், குறிப்பாக, பெண்களின் ஆதரவு அதிகம் உள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கீர்த்தனா, இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால், இந்த முறை வெற்றி பெறுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,02,235
பெண் - 1,09,411
மூன்றாம் பாலினத்தவர் - 45
மொத்த வாக்காளர்கள் - 2,11,691