பல்லாவரம் தொகுதியில் பட்டையை கிளப்ப போகும் வேட்பாளர் யார்?
தமிழக சட்டப்பேரவை தொகுதி வரிசைப் பட்டியலில் 30-வது இடம் பெற்றுள்ளது பல்லாவரம் தொகுதி. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தாம்பரம், ஆலந்தூர் தொகுதிகளிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு 2010-ல் பல்லாவரம் தொகுதி உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் முக்கியமான தொல்லியல் இடங்களில் பல்லாவரமும் ஒன்று. 1863-ல் ராபர்ட் புரூஸ் ஃபூட், இங்கு பழங்கற்கால மனிதர் பயன்படுத்திய கருவிகளைக் கண்டுபிடித்தார்.
இது இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட முதல் பழங்கற்கால ஆதாரங்களில் ஒன்றாகும். இதனால் பல்லாவரம் ‘இந்திய பழங்கற்கால ஆய்வின் பிறப்பிடம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம், நாகல்கேணியில் தோல் தொழிற்சாலைகள், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி) ஆகியவை தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன. பல்லாவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை மிகவும் பிரபலம்.
இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். இத்தொகுதியில் மீனம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை, திருநீர்மலை, பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
பல்லாவரம் தொகுதி உருவான பின் 2011-ம் ஆண்டில் அதிமுக சார்பில் ப.தன்சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட இ.கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார்.
இத்தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் மிகக் குறுகலான தெருக்களாக இருப்பதால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போதிய வாகன நிறுத்த வசதி இல்லாமல், சாலைகளிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
நடைபாதைகள், சாலை ஓரங்களில் வாகனங்கள் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல், பல்லாவரம் - பம்மல், பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது.
மழைக் காலங்களில் சில இடங்களில் கழிவுநீர்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும் புகார்கள் எழுகின்றன. இதனால் கொசுத் தொல்லை மற்றும் துர்நாற்றம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.
திமுகவில் இந்த முறை இ.கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் அனகை டி.முருகேசன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2011-ம் செங்கல்பட்டு எம்எல்ஏ.வாக இருந்தார்.
அதிமுக கூட்டணியில் ஐஜேகே சார்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன், தவெக சார்பில் ஜே.காமாட்சி போட்டியிடுகின்றனர். ஐஜேகே வேட்பாளரைத் தவிர்த்து மற்றவர்கள் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஜேகே வேட்பாளர் மற்றும் தேமுதிக வேட்பாளர் ஆகியோருக்கு கூட்டணி கட்சிகளே பெரும் பலமாக உள்ளன. குறிப்பாக, கடந்த 2 தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்ற தொகுதியாக இருப்பதால் தேமுதிக வேட்பாளர் நம்பிக்கையுடன் உள்ளார். இருப்பினும் தவெகவின் புதிய வரவு, தொகுதி பிரச்சினைகள் இவையெல்லாம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,61,197
பெண் - 1,68,996
மூன்றாம் பாலினத்தவர் - 24
மொத்த வாக்காளர்கள் - 3,30,217